Tuesday, December 29, 2015

தாயின் தற்கொலையால் – குழந்தையின் நிலைமை என்னவாகும்?




பொதுவாக நான் தற்கொலை செய்திகளுக்கு முக்கியத்துவம் தருவதில்லை. என்னை பொறுத்தவரையில் எந்த ஒரு பிரச்சனைக்கும் தீர்வு இருக்கிறது. அந்த தீர்வை கண்டுபிடிக்க முடியாமல் அல்லது கண்டுபிடிக்க தெரியாமல், வாழ்க்கையே முடிந்து விட்டது என்று எண்ணி தற்கொலை செய்து கொள்பவர்களை வாழ்க்கையை எதிர்கொள்ளத் தெரியாத கோழைகள் என்று தான் சொல்லுவேன். தற்கொலையில் ஈடுபட்டு மற்றவர்களால் காப்பாற்றப்படுபவர்களை கேட்டால், தற்கொலை செய்து கொள்வதற்கும் ஒரு தைரியம் வேண்டும் என்று சொல்லுவார்கள்.



  
அவர்களைப் பொறுத்த வரையில் தற்கொலை தான் எல்லா பிரச்சனைகளிலிருந்து விடுபடுவதற்கான  சிறந்த வழி என்று எண்ணுபவர்கள்.


(இந்திய பெண் தன் குழந்தையோடு இரயிலின் முன் பாய்ந்த பிறகு,அவர்களை இரயிலின் அடியிலிருந்து காப்பாற்ற போராடுகிறார்கள்)


என்னடா, தற்கொலையைப் பற்றி முக்கியத்துவம் கொடுக்க மாட்டேன் என்று சொல்லிவிட்டு, அதைப் பற்றியே ஒரு பதிவை எழுதுகிறானே என்று பார்க்கிறீர்களா? என்ன செய்வது பத்து நாட்களுக்கு முன்பு இங்கு சிட்னியில் நடந்த ஒரு தற்கொலை மனதை பாதித்து விட்டது.



இந்த படம் சொல்வது போல், ஒருவர் தற்கொலை செய்து கொண்டால்,அவரைச் சுற்றியுள்ளவர்களுக்குத்தான் அந்த வலியும் வேதனையும் என்பது எவ்வளவு சரியான கருத்து. இரண்டு வாரங்களுக்கு முன்பு இங்கு செய்தித் தாள்களில் ஒரு விஷயம் பரபரப்பாக பேசப்பட்டது. டாடா நிறுவனத்தில் (TCS) வேலைப்பார்த்த முப்பது வயது இந்திய பெண்மணி கையில் மூன்று வயது குழந்தையோடு இரயிலில் முன் பாய்ந்து விட்டார். பலத்த காயங்களோடு குழந்தை காப்பாற்றப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது. குழந்தையின் தாயை உயிரற்ற சடலமாகத்தான் மீட்க முடிந்தது என்று செய்தித்தாள்களிலும், தொலைக்காட்சி செய்திகளிலும் செய்தியாக வந்தது. அவர் என்ன கரணத்துக்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது தெரியவில்லை. இதில் மிக பெரிய கொடுமை  என்னவென்றால்,நான்கு நாட்களுக்கு முன்பு தான் அந்த பெண்மணி ஐந்தாம் ஆண்டு திருமண நாளை கொண்டாடியிருக்கிறார் . அந்த புகைப்படங்களை அவரின் கணவர் முகநூலில் பகிர்ந்துக்கொண்டிருக்கிறார்.(அவரும் அதே நிறுவனத்தில் தான் வேலை பார்க்கிறார்). 



 (குழந்தையோடு இரயிலின் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட      பெண் இவர் தான்).

இந்த குழந்தையை பார்க்கும்போது, என்ன பாவம் செய்திருக்கிறதோ என்று தான் எண்ணத்தோன்றுகிறது. தான் இல்லாமல் தன் குழந்தை கஷ்டப்படக்கூடாது என்று எண்ணித்தான் குழந்தையோடு இரயிலில் முன் பாய்ந்திருப்பார் அந்த பெண். ஆனால் நடந்ததோ வேறு.  குழந்தை பிழைத்து எழும்போது பக்கத்தில் அம்மா இருக்க மாட்டார்கள். இனி அதனுடைய எதிர்காலம் எவ்வாறு இருக்கும்? இரயிலில் முன் தன் தாயுடன் பாய்ந்தது மனதில் பதிந்திருந்தால் அந்த கொடிய நிகழ்வை எவ்வாறு அது மறக்கும்?












Thursday, December 24, 2015

உப்பு கருவாடு திரை விமர்சனம்





நீண்ட நாட்கள் கழித்து ஒரு படத்தை பார்க்க நேர்ந்தது. பொதுவாக இப்பொழுதெல்லாம் படம் பார்ப்பதற்கு நேரம் அமைவதில்லை. ஆனால் திரைப்படங்களின் விமர்சனத்தை மட்டும் படித்து விடுவேன். இந்த படத்தின் விமர்சனத்தை படிக்கும் போது தான் தெரிந்தது, இந்த படத்தின் முக்கிய கருவும், நான் எழுதி மேடையேற்றிய இந்த நாடகத்தின் கருவும் 


ஏறத்தாழ ஒன்று தான் என்று. அதனாலேயே இந்த படத்தை பார்த்தாக வேண்டும் என்று தோன்றியது.  




சரி, இனி இந்த படத்தின் கதை என்னவென்று பார்க்கலாம்.

கருணாகரன் தான் இந்த படத்தின் நாயகன். இயக்கிய முதல் படம் படு தோல்வி, இரண்டாவது படம் பாதியில் நின்று போனது. மீண்டும் ஒரு வாய்ப்புக்காக அலைந்து கொண்டிருப்பவர். இதில் தங்கையின் கல்யாணத்துக்காக பணத்தேவை வேறு. இப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில், நண்பர் மயில்சாமி மூலமாக நிபந்தனையுடன் ஒரு படம் இயக்குவதற்கு வாய்ப்பு கிடைக்கிறது. படத்தின் தயாரிப்பாளர் மீனவ குப்பத்தைச் சேர்ந்த தாதா மற்றும் மீன் வியாபாரியுமான எம்.எஸ்.பாஸ்கர். கருணாகரனுக்கு சாம்ஸ் மற்றும் நாராயணன் இணை மற்றும் உதவி இயக்குனர்கள். தான் எடுக்கப்போகும் படத்துக்கு கதாநாயகனாக சதிஷ் மற்றும் நாயகியாக தன் தோழி ரஷிதாவையும் நடிக்க வைக்க வேண்டும் என்று நினைத்திருப்பார் கருணாகரன். தயாரிப்பாளரின் அந்த ஒரு நிபந்தனை என்னவென்றால் தன் மகள் தான்  (நந்திதா) கதாநாயகியாக நடிக்க வேண்டும் என்பது தான். வேறு வழியில்லாமல் அந்த நிபந்தனைக்கு ஒப்புக்கொண்டு அந்த மீனவ குப்பத்துக்கு தன் நண்பர்களோடு செல்கிறார். அங்கு படத்தை ஆரம்பிப்பதற்கு முன்பு படம் சம்பந்தப்பட்ட காட்சிகளை ஒத்திகை பார்க்கலாம் என்று எண்ணி கதாநாயகனுக்கும், கதாநாயகிக்கும் பயிற்சி கொடுக்கிறார். நடிப்பா அப்படின்னா கிலோ என்ன விலை என்று கேட்கும் நந்திதாவை வைத்து வெற்றிக்கரமாக பயிற்சியை எல்லாம் முடித்து, சாமியாரிடம் (திண்டுகல் சரவணனிடம்) நல்ல நாள் கேட்டு, படப்பிடிப்பை ஆரம்பிக்கிற தினத்தில்  ஒரு பிரச்சனை ஏற்படுகிறது. அந்த பிரச்சனையில் இருந்து மீண்டு கருணாகரன் அந்த படத்தை எடுத்தாரா இல்லையா என்பதை நகைச்சுவையோடு சொல்வது தான் இந்த உப்பு கருவாடு படம்.  


பொதுவாக ராதா மோகன் படம் என்றால் தயங்காமல் குடும்பத்தோடு பார்க்கலாம் என்ற ஒரு எண்ணம் இருக்கும். அந்த எண்ணம் இந்த படத்திலும் நிறைவேறியிருக்கிறது. இதில் கருணாகரன் தான் கதாநாயகன் என்றாலும், அனைத்து கதாப்பதிரங்களுக்கும் பெயர் கிடைக்கும்படியாக அமைத்திருப்பதன் மூலம் எல்லோருமே இதில் நாயகர்கள் தான். பொன் பார்த்திபனின்  வசனங்கள் இப்படத்தின்  முதுகெலும்பு. இதில் வரும் ஒவ்வொரு கதாப்பாத்திரமும் திரைப்படத்துறையில் நடக்கும் திரைமறைவு காட்சிகளாக நம் கண் முன்னே தெரியும். 

நகைச்சுவை நடிகரான கருணாகரன் மிகவும் சீரியஸ் கதாப்பத்திரத்தில் இதில் தோன்றியிருக்கிறார். நன்றாக நடிக்கக்கூடிய நந்திதா, நடிக்கவே தெரியாத மாதிரி நடித்திருப்பது அருமை. அவர் ஒரு காட்சியில் தன் தாயிடம், “நான் நல்லா நடிச்சேன்னா, நீ ரொம்ப அதிகமா நடிக்கிறன்னு சொல்றாரு. சரி, கொஞ்சமா நடிச்சா, இன்னும் நல்லா நடிக்கணும்னு சொல்றாரு. நான் எப்படித்தான்மா நடிக்கிறதுன்னு” புலம்புவது ஒரு புதுமுக நாயகி இயக்குனரிடம் படும் பாட்டை காட்டுகிறது. 




கருணாகரனின் தோழியாக வரும் “சரவணன் மீனாட்சி” புகழ் ரஷிதா அழகவும் இருக்கிறார் நன்றாகவும் நடித்திருக்கிறார். அதிலும் நந்திதாவிற்கு அவர் நடிப்பு சொல்லித்தரும் காட்சி, ஒரு பனை சோற்றுக்கு ஒரு சோறு பதம். எதற்கு எடுத்தாலும் சகுனம் பார்க்கும் கதாப்பாத்திரமாக மயில்சாமி எந்த ஒரு சத்தம் கேட்டாலும் மணி அடிக்குதுது பார் என்று கலகலப்பூட்டுவதும் , சாமியாராக வரும் திண்டுக்கல் சரவணன் தானும் நடிக்க வேண்டும் என்பதற்காக தனியறையில் மற்ற நடிகர்கள் மாதிரி பேசி பயிற்சி எடுப்பது,அதிலும் குறிப்பாக மேஜர். சுந்தர்ராஜன் மாதிரி வசனம் பேசுவது அருமை. எல்லோரையும் விட, டவுட் செந்திலின் முக பாவனைகள், மற்றும் தப்புத்தப்பாக ஆங்கிலத்தை உச்சரிப்பதும் கண்டிப்பாக நம் வயிற்றை புண்ணாக்கும். உதாரணத்துக்கு “bet” என்பதற்கு “bed” என்று சொல்வதும்,encouragement” என்பதற்கு “engagement” என்று சொல்வதும், “பின்னாடி தட்டுனவுடனே அவள் confuse ஆயிடுவா சார் என்று சொல்வதற்கு பதில் conceive ஆயிடுவா சார்” என்று சொல்லும்போது நம்மால் சிரிப்பை அடக்க முடியாது. மேலும் அந்த மலையாளப்பாடகரிடம் அவர் மாட்டிக்கொண்டு முழிக்கும் காட்சிகள் சிரிப்போ சிரிப்பு. அந்த மலையாளப் பாடகர் வரும் போதெல்லாம் ஓவியாவும், இனியாவும் விழுந்து விழுந்து சிரித்தார்கள். இது போக எம்.எஸ்.பாஸ்கர் கவிதை சொல்கிறேன் பேர்வழி என்று சொல்லும் கவிதைகள் கூட வெடிச் சிரிப்புகள் தான். 




இப்படி படம் முழுக்க நகைச்சுவையோடு சொல்லியிருந்தாலும், தான் சொல்ல வேண்டிய விஷயத்தை தெளிவாகவும் அழகாவும் சொல்லியிருக்கிறார் இயக்குனர் ராதா மோகன். கண்டிப்பாக குடும்பத்தோடு இந்த படத்தை சிரிச்சு ரசிச்சு பார்க்கலாம். 

Thursday, December 10, 2015

எங்கள் இல்லத்தை அலங்கரிக்க வந்த ஐயப்பன்



சரியாக ஒன்பது மாத வனவாசத்தை முடித்து விட்டு (நாரதரும் சிட்னியை விட்டு செல்ல மனமில்லாமல் சென்று விட்டார்), மீண்டும் வலைப்பூ உலகத்திற்குள் நுழைகிறேன். வலைப்பூ நண்பர்களும் எப்பொழுது நீங்கள் வனவாசத்தை முடித்து வலைப்பூவிற்குள் வருவீர்கள் என்று கேட்டு கேட்டு சலித்து விட்டார்கள். அவர்களின் பொறுமைக்கும், என்னை ஊக்குவித்து மீண்டும் எழுத தூண்டியதற்கும் முதலில் அவர்களுக்கு என்னுடைய நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

ஜூன் மாதம் 15ஆம் தேதி இரவு (ஆங்கில தேதிப்படி – 16ஆம் தேதி), எங்கள் வீட்டிற்கு புதிய வரவாக மணிகண்டன் பிறந்தார். அவரும் தன் இரு அக்காக்களைப் போல், எங்களை சீக்கிரம் பார்க்காமல் இருக்க முடியாததால் மருத்துவர்கள் சொன்ன தேதிக்கு (ஜூலை 10ஆம் தேதி) முன்பாகவே வந்துவிட்டார்.

முதல் இரு குழந்தைகளுக்குமே நாங்கள் அவர்கள் பிறப்பதற்கு முன்பாகவே என்ன குழந்தை என்று பார்க்கவில்லை. அதுபோல் இவர் வயிற்றில் இருக்கும்போதும், நாங்கள் என்ன குழந்தை என்று பார்க்கவில்லை. நண்பர்கள் எல்லோரும் என்ன குழந்தை என்று பார்த்து விட்டீர்களா, பெயரை தெரிவு செய்துவிட்டீர்களா என்று கேட்டார்கள். அவர்களுக்கு நாங்கள் அடுத்த குழந்தைக்கு என்ன பெயர் வைக்கப்போகிறோம் என்ற ஆவல். எங்களைப் பொறுத்த வரையில் ஆண் குழந்தை என்றால் “மணிகண்டன்” என்று பல வருடங்களுக்கு முன்பாகவே பெயரை தேர்வு செய்துவிட்டோம். அதற்கு காரணம், எங்களுக்க் திருமணமாகி பல வருடங்கள் குழந்தை பிறக்காததால், எங்கள் வீட்டிலும் சரி, அம்மணியின் வீட்டிலும் சரி, மகன் பிறந்தால் மணிகண்டன் என்று தான் பெயர் சூட்ட வேண்டும் என்று ஒருமனதாக முடிவு எடுக்கப்பட்டது. அதனால், முதல் முறை அம்மணி கரு கொண்டபொழுது, பெண் குழந்தை பிறந்தால் அழகான தமிழ் பெயராக வைக்க வேண்டுமே என்று யோசித்து, யோசித்து, பத்து வருடங்கள் கழித்து ஓவியமாக பிறப்பதால், “ஓவியா” என்று பெயர் சூட்டினோம். அடுத்த குழந்தைக்கும், பெண் குழந்தை என்றால் என்ன பெயர் வைப்பது என்று யோசித்து, “இனியா” என்று பெயர் சூட்டினோம். இந்த முறையும் பெண் குழந்தையாக இருந்தால், இரண்டு பெயரை தேர்வு செய்து வைத்திருந்தோம். ஆனால் ஐயப்பனோ, பல வருடங்களாக நீங்கள் என்னுடைய பெயரை தேர்வு செய்து வைத்து காத்துக்கொண்டிருக்கிறீர்கள், இனியும் உங்களை ஏமாற்றாமல் மணிகண்டனாக வந்து விடுகிறேன் என்று வந்து விட்டார்.

இதில் வேடிக்கை என்னவென்றால், ஒரு நண்பரின் மனைவி, நீங்கள் உங்கள் மகனுக்கு “ஆர்யா” என்றோ “சூர்யா” என்றோ பெயர் வைப்பீர்கள் என்று எதிர்ப்பார்த்தேன் என்று கூறினார். அவரை மாதிரி, இன்னும் சிலரும், உங்களின் மூன்றாவது குழந்தைக்கு நீங்கள் என்ன பெயர் வைப்பீர்கள் என்று எதிர்ப்பார்த்தோம் என்று கூறினார்கள். ஓவியா, இனியா என்று நாங்கள் வைத்த பெயர், மூன்றாவது குழந்தையின் பெயருக்கு எவ்வளவு எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கு என்று அப்பொழுது தான் தெரிந்தது.

ஜூன் மாதம் 12ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) அன்று காலை 7 மணிக்கு நான் அலுவலகம் செல்வதற்கு தயாராகிக் கொண்டிருந்தேன். அப்பொழுது வீட்டு அம்மணி, இன்றைக்கு நீங்கள் அலுவலகம் செல்ல வேண்டாம், எனக்கு பணிக்குடம் உடைந்த மாதிரி தோன்றுகிறது என்று கூறினார்கள். ஓவியாவையும்,இனியாவையும் அவர்களின் ஆயாவிடம் விட்டு விட்டு (அவர்களும் நான் இனிமேல் இங்கு வரமாட்டேன் என்று சொல்லி,சொல்லி “பெத்த மனசு பித்து” என்பதற்கேற்ப மகளின் பிரசவ நேரத்தில் கூட இருப்பதற்காக வந்துவிட்டார்கள்). நான் அம்மணியை கூட்டிக்கொண்டு மருத்துவமனைக்குச் சென்றேன். மருத்துவமனையில் வண்டியை விட்டு இறங்கியவுடன், அம்மணி உட்கார்ந்திருந்த சீட் முழுவதும் ஈரமாகி, அவர்களின் உடையும் ஈரமாகி இருந்தது. அப்பொழுதே தெரிந்து விட்டது, பணிக்குடம் உடைந்து விட்டது என்று. மருத்துவமனைக்குள் சென்ற பொழுது, இனியாவை பிரசவம் பார்த்த செவிலித்தாய் (mid-wife - செவிலித்தாய் சரியான அர்த்தம் என்று தான் நினைக்கிறேன். தவறாக இருந்தால் சுட்டிக்காட்டவும்), எதிரில் வந்தார்கள். அவர்களே அம்மணியை பரிசோதிப்பதற்கான அறையில் கொண்டு வந்து விட்டு, நானே இந்த குழந்தைக்கும் பிரசவம் பார்க்கிறேன் என்று கூறிவிட்டுச் சென்றார்கள். பிறகு மருத்துவர்கள் வந்து அம்மணியை பரிசோதித்துவிட்டு, முடிந்த வரை இன்னும் ஒரு வாரம் பொறுத்திருப்போம் (அப்பொழுது தான் 37 வாரங்கள் முடிந்து விடும்). அதற்குள் வலி ஏற்பட்டு குழந்தை பிறந்தால் பரவாயில்லை, இல்லையென்றால் ஒரு வாரம் முடிந்த பிறகு என்ன செய்யலாம் என்று யோசிப்போம் என்று சொல்லி விட்டு சென்றார்கள். அம்மணியும் வெள்ளிக்கிழமை, சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை, திங்கட் கிழமை என்று மருத்துவமனையிலேயே இருந்தார்கள். நாங்களும் ஒவ்வொரு நாளும் காலையில் வந்து இரவு சென்று விடுவோம். திங்கட்கிழமை இரவு 12 மணிக்கு, மருத்துவமணியில் இருந்து அம்மணி போன் செய்து, எனக்கு வலி நன்றாக எடுக்க ஆரம்பித்து விட்டது,அதனால் பிரசவ அறைக்குச் செல்கிறேன்,சீக்கிரம் வாருங்கள் என்று கூறினார். நாங்களும் உடனே மருத்துவமனைக்குச் சென்றோம். இரண்டு குழந்தைகளும் பிறக்கும்போது நான் தான் உடன் இருந்தேன். அதனால் மாமியாரிடம், நீங்கள் பிரசவ அறையில் அவள் கூட இருங்கள், நான் இவர்கள் இருவரையும் வைத்துக்கொண்டு வெளியில் இருக்கிறேன் என்று கூறினேன். அதற்கு அவர்களும், இல்லை,இல்லை, நீங்களே அவள் கூட இருங்கள் என்று கூறிவிட்டார்கள். பிறகு ஒரு வழியாக 1.50 மணி அளவில் அம்மணி மணிகண்டனை பிரசவித்தார்கள். இரு குழந்தைகளுக்கும் தொப்புள் கொடியை தூண்டித்ததைப் போல், இந்த குழந்தைக்கும் நானே தொப்புள் கொடியை துண்டித்தேன். இங்கு ஒன்றைச் சொல்லியாக வேண்டும். நம் நாட்டில் மருத்துவர்கள் தான் பிரசவம் பார்ப்பார்கள். ஆனால் இங்கு பொது மருத்துவமனைகளில் இயல்பான பிரசவம் என்றால், செவிலித்தாய் தான் பிரசவம் பார்ப்பார்கள். வயிற்றில் கத்தி வைக்க வேண்டும் என்றாலோ, மிகவும் பிரச்சனைக்குரிய பிரசவம் என்றாலோ தான் மருத்துவர்கள் வந்து பிரசவம் பார்ப்பார்கள்.

சிறிது நேரத்திற்கு பிறகு நான் வெளியே வந்து ஆண் குழந்தை பிறந்திருக்கிறது என்று சொன்னவுடன், ஓவியாவும், இனியாவும் எங்களுக்கு தங்கச்சி பாப்பாத்தான் வேண்டும், தம்பி பாப்பா  வேண்டாம் என்று ஒரே அழுகை. ஓவியா இன்னும் ஒரு படி மேல போய், தங்கச்சி பாப்பாத்தான் வந்திருக்கும், நீங்கள் மாய மந்திரம் செய்து தம்பி பாப்பாவாக மாற்றி விட்டீர்கள் என்று ஒரே புலம்பல். அவர்கள் இருவரையும் ஒரு வழியாக சமாதானம் செய்து,குழந்தையை காண்பித்தோம். உடனே ஓவியா சமாதானமாகி விட்டார். இனியா முழுவதும் சமாதானம் அடையவில்லை. ரொம்ப நாளைக்கு இனியா அவரை தங்கச்சி பாப்பாத்தான் என்று சொல்லிக்கொண்டிருந்தார். மேலும் அவர் செல்லும் day careல் எல்லாம் எங்கள் வீட்டிற்கு  தங்கச்சி பாப்பா வந்திருக்கு என்றும் சொல்லியிருக்கிறார். பிறகு நான் அவர்களிடம் எல்லாம் பெண் குழந்தை இல்லை ஆண் குழந்தை தான் பிறந்திருக்கு என்று புரிய வைத்தேன்.



இப்பொழுது தம்பி பாப்பா தான் அவர்கள் உலகம் . அவர் செய்கின்ற ஒவ்வொரு செயலையும், இவர்களும் அவரை மாதிரியே செய்து காட்டுவார்கள். 


அவர் அழுகும்பொழுது, நாங்கள் உடனே அவரைப் போய் பார்க்கவில்லையென்றால், ஓவியா எங்களிடம், உங்களுக்கு தம்பி மேல அக்கரையே இல்லை, உங்களுக்கு உங்கள் வேலை தான் முக்கியமாகி விட்டது என்று எங்களிடம் கோபித்துக்கொள்வார்.

இனி, முடிந்தவரை அடிக்கடி வலைப்பக்கம் வந்து நானும் உள்ளேன் ஐயா என்று எனது வருகையை தெரியப்படுத்தி விடுகிறேன்.