Thursday, May 15, 2014

சைவ சித்தாந்தச் செல்வர், சொக்கலிங்க ஐயா(1856-1931) சரித்திரம் - சிறப்புப்பாயிரம்



சொக்கலிங்க ஐயா சரித்திரம் - முகவுரை,மதிப்புரை மற்றும் பதிப்புரை

சிவமயம்
சிறப்புப்பாயிரம்
அண்ணாமலைப் பல்கலைக் கழகத்துத்
தமிழ் சொற் பொழிவாளர்
மகிபாலன்பட்டி

பண்டிதமணி. உயர் திரு. மு. கதிரேசச்
செட்டியாரவர்கள்
இயற்றியது.


பன்னிருசீர்க் கழிநெடிலடி யாசிரிய விருத்தம் .

தம்மை யுணர்ந்து தமையுடைய தன்னை
           யுணறுஞ் சைவ நெறி
சார்ந்து வாழ்ந்த பெருந்தகையான் தமிழ் நூல்
           பலவுந் தகவுணர்  ந்தோன்
செம்மை நலஞ்சால் காரைநகர்த் திருவார்
           தனவை சியமரபு
திகழத் தோன்றிச் சிவபதமே சிரத்திற்
           கணியாப் பூண்டவன்சீர்
மும்மை யுலகும் புகழ்ந்தேத்து முதியோன்
           எங்கள் சொக்கலிங்க
முனிவன் சரிதக் கடலினிறை முகந்து
           தெளித்தான் யாவனெனின்
மெய்ம்மை வழுவா நெறி நின்று விமலன்
           அடிக்கட் பத்திமிக
மேவும் இராம சாமியெனும் விநய
           குணஞ்சால் நல்லோனே.


  தேவகோட்டை, சிவாகம சங்கம்
திரு. பொ. முத்தைய பிள்ளை அவர்கள்
இயற்றியது.


பூவுலகில் மேலாந்தென் பாண்டி நாட்டில்
     பொருளோங்கு காரைமா நகரின் கண்ணே
மேவுதன வணிகர்குல விளக்காய்த் தோன்றி
     மிகுசைவ சித்தாந்த மெய்ம்மை தேறி
யாவுமாஞ் சிவனைமனத் திருத்திப் பூசித்
     தெப்பொழுதுந் தனையடுத்த அன்பர் யார்க்கும்
ஆவலுடன் நூல்கள் பல பாடஞ் சொல்லி
     அருந்தமிழுஞ் சைவமுமே லோங்கச் செய்த           (க)
சொக்கலிங்க அய்யாவின் சரிதந் தன்னைத்
     தோற்றமுதல் முறைப்படுத்தித் தூய வாக்கால்
மக்களெல்லாம் உய்யும்வணம் வசன மாக
     வழங்கினான் அய்யாவுக் கணுக்க ராகித்
தக்கமரி யாதையுடன் தொண்டு செய்து
     சாத்திரங்கள் பலகேட்டுச் சைவம் பேணி
மிக்கமகிழ் காரைவா ழிராம சாமி
     மேலவனாந் தனவணிக மரபு ளோனே.                     (உ)




காரைக்குடி
சித்தாந்த சைவப் பெருஞ்செல்வர்
ஸ்ரீமத். ராம. சொ. சொக்கலிங்கச்
செட்டியாரவர்கள்

மாணாக்கருள் ஒருவரும் தேவகோட்டை
சைவப்பிரகாச வித்தியாசாலைத் தலைமையாசிரியருமாகிய
சொ. வேலுச்சாமிக் கவிராயர் அவர்கள்
இயற்றியது.


சீராரும் பாண்டிவள நாட்டின் மேன்மை
     திகழ்காரை மாநகரின் வடபாலிற்சேர்
பேராரு நன்முத்துப் பட்ட ணத்திற்  
     பிறங்குமியாழ்ப் பாணத்தார் மனையின் முல்லைத்
தாராரும் வைசியர்தங் குலமெந் நாளுந்
     தாரணியி லோங்கவவ தரித்தோன் நல்லூர்க்
கேராரும் ஆறுமுக நாவ லர்கோ
     னிணையின்மகிழ் மீக்கூரப் பெருகுந் தொண்டன். 

அன்னவன்றன் மருமகன்பொன் னம்ப லப்பே
     ரறிஞனறந் திகழ்க்கூட றனைநீங் காது
மன்னுசுந்த ரேசனடி தொழுமெய் யப்ப
     சுவாமிவளர் வன்றெண்ட மணியன் னேர்பாற்
பன்னுதமிழ் நூல்பலவும் விளங்கக் கற்றேன்
     பகர்கல்வி யறிவொழுக்கச் சிறப்பு முற்றேன்
தன்னையடை மாணாக்க ருள்ளங் கொள்ளத்
     தக்கவகை நூல்பலபோ திக்குஞ் சான்றேன்.

வேதசிவா கமவழிச்சித் தாந்த மெய்ந்நூல்
     விதிமுறையோர்த் துளங்கொண்டு மேலாஞ்ச் சைவ
போதநிலை தரப்பெறீஇ மனித யாக்கை
     கிடைத்ததரன் பூசனையைப் புரிதற் கென்றே
காதலுறு சமயமுதற் றீக்கை மூன்றுங்
     கனிந்தவுளத் தொடும்பெற்றுப் பெரும்பே றென்றே
போதுமுத லானபொருள் பலவுங் கொண்டு
     புனிதசிவ பூசைமுறை புரியுஞ் சீலன்.

சிவபெருமா னெருவுனையே பரமாக் கொண்டு
     திகழுள்ளக் கருத்தினிலைச் சீர்மை யாலே
யவனருளே பெருகுபுரா ணங்கண் முன்னா
     அமைதருநூற் றெட்டுநூல் இயற்று மான்றேன்
தவநிறையுந் தில்லைநகர் தனின்மெய் கண்ட
     சித்தாந்த வித்தியா சாலை தாபித்
துவமையிலா ஞானநூ லோது வோர்கள்
     உணவுமுதற் பெறமூலப் பொருளும் வைத்தோன்.


ஆரியநற் றமிழ்வேத பாட சாலை
     யரன்கோவிற் பணிதிருநந் தனமும் வைத்தல்
சீரியவாங் குளந்தோண்டல் கட்டு வித்தல்
     சிறந்தகுரு பூசைபசு மடந்தா பித்தல்
பாரியக லாசாலை பலதா பித்தல்
     பகருமிவை முதலறந்தன் னினத்தாரைக் கொண்
டேருறவே யியற்றுசொக்க லிங்க வாசான்
     ஈசனடி நிழற்கலந்தான் சின்னாண் முன்னர்.

இத்தகையோ னுயர்சரிதம் பேறாம் பூமிக்
     கியலுநல்லோர் குணங்களுரைப் பதுவு நன்றே
இத்தரணி தனிலென்ன ஔவை யாரும்
     இசைத்தனரா லெனவன்னேன் சரிதம் யாரும்
சித்தசிர மஞ்சிறிது மின்றி யோரத்
     தெள்ளியசெந் தமிழ்வசன முறையிற் செய்தான்
உத்தமனாம் ஒருவனவன் யாவ னென்னில்
     உயற்காரை மாநகரி லென்றும் வாழ்வோன்.

துன்னுபுகழ் வைசியர்தங் குலத்தில் வந்து
     தோன்றினேன் சூரைநகர்க் கோயில் கொண்டோன்
மன்னுமர பினிற்கேற்ப வர்த்த கத்தின்
     வளம்பலவுந் தருமநெறி யீட்டும் வல்லோன்
தன்னனைய சொக்கலிங்க தேசி கன்பாற்
     சார்தருமா ணாக்கர்பல ருள்ளும் பத்தி
தன்னருவ மாயமைந்து தமிழி னூல்கள்
     சங்கையின்றி மாயமைந்து சாலக் கற்றேன்.

வருசைவ சித்தாந்த ஞான நூல்கள்
     வளரவன்பா லாராய்ச்சி புரியு மாண்போன்
தருவனப்பு நிறைச்சந்தச் செய்யுண் முன்னாச்
     சார்ந்தபல பாக்கிளினி தியற்றுந் தக்கோன்
பெருகுமவை தனிற்கேட்போ  ருள்ளங் கொள்ளப்
     பிறங்கியிடு கரதலா மலகம் போலத்
தெருள்பெறவே பிரசங்கம் புரியு நல்லோன்
     சிறந்தகுணக் குன்றமாய்த் திகழ்ந்து நின்றேன்.

நித்தியமு மநுட்டான முடிந்த பின்னர்
     நீடியதே வாரமுதன் முறைக ளோதிச்
சித்தமகிழ் வுடன்சிவனைத் தரிச னஞ்செய்
     செந்நெறிக்க ணிலை நிற்குந் திண்மை வாய்ந்தோன்
உத்தமமா குங்காசி விசுவ நாத
     மேலோனைக் கனிட்டசகோ தரனா வுற்றேன்
இத்தலமெ லாம்புகழ் மேன்மை பெற்ற
     இராமசா மிப்பெயர்கொள் எழிற் சீரேரனே.


சிதம்பரம்
ஸ்ரீ மெய்கண்ட சித்தாந்த வித்தியசாலைத்
தருமபரிபாலகருள் ஒருவராகிய
காரைக்குடி
ராம. உ. காசிவிஸ்வநாதான் செட்டியார்
அவர்கள்
இயற்றியது.

செம்பொனுயர் மணிமாடக் காரை தன்னில்
     சிவவர்க்க மானிடனா யவத ரித்து
நம்புபல நூல்கள் சிவ பரமாச் செய்து
     நாட்டுசொக்க லிங்கதே சிகர்க்குக் காதை
இம்பரன்னார் மாணாக்க னிராம சாமி
     யியம்பியுயர் தில்லைவித்தியா சாலை தன்னில்
பம்புநகர்க் காரையனு கூல வைங்கைப்
     பரமர்சன்னி தியினிலரங் கேற்றி னானே.


8 comments:

  1. ஒவ்வொரு பாட்டிலும் தமிழ் நாட்டியமாடுகிறது நண்பரே
    முதல் பாடலை எழுதியுள்ள பண்டிதமணி கதிரேசஞ் செட்டியர்,
    நான் பணியாற்றும் கரந்தைத் தமிழ்ச் சங்கத்துடன் நெருங்கியத் தொடர்புடையவர்.
    கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் முதற் தலைவர் உமாமகேசுவரனாரின் நெருங்கிய தோழர்
    அவரது பாடலைக் கண்டவுடன் மனம் மகிழ்ச்சியில் மிதந்தது நண்பரே நன்றி

    ReplyDelete
    Replies
    1. தங்களின் மனம் மகிழ்ந்ததைப் பற்றி மிகவும் மகிழ்ச்சி ஜெயக்குமார் சார்.

      Delete
  2. கரந்தை ஐயா தகவலுக்கு நன்றி...

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கு நன்றி டிடி.

      Delete
  3. பாடல்கள் அனைத்துமே சிறப்பு. பகிர்ந்து கொள்வதற்கு நன்றி சொக்கன்.

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி வெங்கட் சார்

      Delete
  4. ஆயிரம் மைல் பயணமும் நாம் எடுத்துவைக்கும் ஒரு அடியில்தான் துவங்குகிறது.

    உங்கள் ஆயிரம் மைல் பயணம் இனிதாக அமையட்டும்


    http://www.malartharu.org/2013/03/catch-me-if-you-can.html

    ReplyDelete
    Replies
    1. தங்களின் கனிவான வார்த்தைகள் என்னை மேலும் ஊக்கப்படுத்துகிறது.

      மிக்க நன்றி சகோதரரே.

      Delete