Thursday, August 1, 2013

கணினி முதல் டேப்லட் வரை

சில வருடங்களுக்கு முன்னாடி வரை, எங்க வீட்டில ஒரு பெரிய கணினி மட்டும் தான் இருக்கும். நான் அந்த கணினில உட்கார்ந்து எனக்கு வரும் 100க் கணக்குல மின்னஞ்சல்களை (அதுல 95க்கும்  மேல வெறும் குப்பைகள் தான்) பார்த்துக்கிட்டு இருப்பேன். அம்மணியோ அந்த கணினியில தான் படங்களை எல்லாம் பதிவிறக்கம் செய்து பார்ப்பாங்க. நான் அடிக்கடி அந்த கணினிக்கு முன்னாடி உட்காருவதுனால, அவுங்களுக்கு கோபம் வந்துடும். ஆபிஸ்ல கம்ப்யூட்டரை கட்டிக்கிட்டு அழுறது பத்தாதுன்னு, வீட்டுலயும் இதோட மாரடிக்கிறீங்களேன்னு சொல்லுவாங்க. இப்படி அவுங்க சொல்லும்போது மட்டும் நான் ரொம்ப நல்ல பிள்ளையாட்டம், இந்தாத்தா!, நீயே இதுக்கு முன்னாடி உட்காருன்னு சொல்லி, நான் எழுந்திடுவேன்(அவுங்களோட மாரடிக்க முடியாலைன்னு தானே கணினிக்கு முன்னாடி உட்காருகிறோம், இதுல அதுக்கும் ஆப்பு வச்சா என்ன தான் பண்றது!!!). அப்புறம் நான் ஐபிஎம்ல வேலைக்கு சேர்ந்தபிறகு, அவுங்களே எனக்கு ஒரு மடி கணினியை கொடுத்தாங்க. அதனால, நான் அம்மணியை தொந்தரவு பண்ணாம, அந்த மடி கணினிலேயே என்னோட அதி முக்கிய மின்னஞ்சல்களையெல்லாம் பார்த்துப்பேன். அதோட இந்த தமிழ் பள்ளிக்கு தேவையான வேலைகளை எல்லாம் நான் அந்த மடி கணினியில தான் செஞ்சிக்கிட்டு இருந்தேன். அப்புறம் அந்த வேலையை கை கழுவிட்ட பிறகு, அந்த மடி கணினியையும் திருப்பி கொடுக்க வேண்டியதாக போயிடுச்சு(இரண்டரை வருடம் அவுங்களுக்கு வேலை பார்த்ததுக்கு, இந்தாப்பா, நீயே அந்த மடி கணனியை வச்சுக்கோன்னு அவுங்களுக்கு சொல்ல மனசு வரலையே!!!). மடி கணினி வச்சு பழகிப்போனதுனால, நானே சொந்தமா ஒன்றை வாங்கலாம்னு தெருவோர கடைல, ரொம்ப விலை குறைவா ஒரு மடி கணினியை வாங்கினேன். சரி, இனிமே நமக்கு வீட்டில எந்த பிரச்சனையும் வராதுன்னு நினைச்சேன். ஆனா எங்க பெரிய மகாராணி ரூபத்துல பிரச்சனை வந்துச்சு. அவுங்களுக்கு அப்ப இரண்டு வயது. என்னப்பா, நீ எப்பப் பார்த்தாலும் கம்ப்யூட்டரை தூக்கி மடில வச்சுக்கிற, எனக்கு விளையாடுறதுக்கு அதை கொடுன்னு ஒரே ரகளை. ஆஹா, அம்மாவுக்கு ஏத்த பொண்ணா இல்ல இருக்கான்னு நினைச்சு (பின்ன! சும்மாவா சொல்லியிருக்காங்க பெரியவங்க – “தாயைப் போல பிள்ளை நூலை போல சேலைன்னு!!!) இது விளையாடுற பொருள் இல்ல, அதனால இதைக் கொடுக்க முடியாதுன்னு சொல்லி, அவுங்க கோபத்தை இன்னும் கிளப்பிவிட்டுட்டேன். அந்த கோபத்தோட விளைவு, அந்த மடி கணினியில உள்ள கீ போர்ட்ல ஒரு பட்டனை(down arrow key) பெயர்த்து எடுத்துட்டாங்க. அதிலேருந்து, அவுங்களுக்கு ஒரு 10நிமிஷம் அந்த மடி கணினியை கொடுத்து, அவுங்களை விளையாட சொல்லிட்டு, பிறகு தான் நான் என் வேலையை பார்ப்பேன். இப்ப இரண்டாவது மகாராணிக்கு, நான் அந்த மடி கணினியை மடியில தூக்கி வச்சுக்கிட்டாலே போதும், எங்க இருந்தாலும் ஓடி வந்து, அதுல இருக்கிற பவர் பட்டனை ஆஃப் பண்றதுலேயே குறியா இருப்பாங்க. அதனால இப்பவெல்லாம் நான், மகாராணிங்க ரெண்டு பேரும் தூங்கின பிறகு தான், என்னோட வேலையே செய்வேன். கொஞ்ச நாளைக்கு முன்னாடி பெரிய மாகாரணி, அப்பா என்கிட்ட தான் ஐ-பேட் இல்லை, என்னோட நண்பர்கள் எல்லாம் வச்சிருக்காங்க. தமிழ் ஸ்கூல்லையும் ஐ-பேட் வச்சு சொல்லித் தராங்க, டே-கேர்லேயும் ஐ-பேட் வச்சு சொல்லித் தராங்க, அதனால எனக்கு ஐ-பேட் வாங்கிக்கொடுங்கன்னு கேக்க ஆரம்பிச்சாங்க. நானும் ஒருவழியா டேப்லட் ஒண்ணு வாங்கிக் கொடுத்தேன். அதுல அவுங்க தமிழ் படிக்கிறதுக்கான apps அப்புறம் puzzles இதெல்லாம் பதிவிறக்கம் செஞ்சுக் கொடுத்ததுல அவுங்களுக்கு ஒரே சந்தோஷம்.  அம்மணியும் அப்பப்ப அந்த டேப்லட் எடுத்து பார்க்க ஆரம்பிச்சாங்க. அவுங்களுக்கு அதை வச்சுக்கிட்டு என்ன பண்றதுன்னு தெரியலை. ரொம்ப யோசிச்ச பிறகு தான், அவுங்களுக்கு நாம ஏன் முகநூல் கணக்கை துவங்க கூடாதுன்னு ஒரு ஞானோதயம் ஏற்பட்டுச்சு. ஒரு சுபமுகூர்த்த நாள்ல, முகநூலில் ஒரு கணக்கை ஆரம்பிச்சு, புகைப்படத்தை எல்லாம் போட ஆரம்பிச்சாங்க. ஒரு நாள் ஒரு நண்பரோட வீட்டிற்கு போயிருந்தோம். அந்த நண்பரோட மனைவி, அம்மணிக்கிட்ட நீ என்ன இன்னமும் முகநூல்ல புதசா எந்த புகைப்படமும் போடாம, ஒரு வருசத்துக்கு முந்தின புகைப்படத்தையே போட்டிருக்கன்னு கேக்க, அதுக்கு அம்மனியோ, நானே! இப்ப தானே முகநூலுக்குள்ள வந்திருக்கேன்னு பதில் சொன்னாங்க. அடப்பாவிகளா, பேசுறதுக்கு எவ்வளவோ விஷயம் இருக்கும்போது, முகநூல்ல, இந்த படத்தை போட்டியா, அந்த படத்தை போட்டியான்னா கேட்பாங்க??
 இப்பெவெல்லாம், எங்க வீட்டுல தினமும்,இரண்டு மகாரணிகளையும் தூங்கவச்சுட்டு நான் ஒரு சோபாவில உட்கார்ந்து மடி கணினியில ஏதாவது இந்த மாதிரி சொந்த கதை, சோக கதையை எழுதிக்கிட்டு இருப்பேன். இன்னொரு சோபாவில அம்மணி டேப்லட்டை வச்சுக்கிட்டு, இந்த புகைப்படம் ரொம்ப நல்லா இருக்கு, அந்த புகைப்படம் ரொம்ப ரொம்ப நல்லா இருக்குனு முகநூலுக்குள்ள போய் எழுதிக்கிட்டு இருப்பாங்க. எங்களோட அந்த பெரிய கணினியை பார்க்க தான் ரொம்ப பாவமா இருக்கும். யாருமே அதை சீண்டுறதே இல்லை.



No comments:

Post a Comment