Wednesday, December 19, 2012

அலுவலக கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்


ஒவ்வொரு வருஷமும் இங்கு ஏறக்குறைய எல்லா அலுவலகங்களிலும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் கொண்டாடப்படும். எங்கள் அலுவலகமும் இதற்கு விதிவிலக்கில்லை. ஆனா என்ன! கழுதை கெட்டா குட்டிச் சுவருங்கிற மாதிரி ஒவ்வொரு வருஷமும் டிசம்பர் மாதத்தில் முதல் அல்லது இரண்டாவது வெள்ளிக்கிழமையில் மதியம் 12.30 மணியிலிருந்து மாலை 5 மணி வரை படகு சவாரி செய்வதே எங்கள் அலுவலகத்தின் ஆஸ்தான கிறிஸ்துமஸ் கொண்டாட்டமாயிடுச்சு. சென்ற வருடம் படகு சவாரில ஒரு மேஜிக் கலைஞர் வந்து சீட்டுக்கட்டை மறைக்கிறது , வாயிலிருந்து எடுக்கிறது அப்படி இப்படின்னு நிறைய அஜால் குஜால் வேலை எல்லாம் செஞ்சு காமிச்சாரு. அதோட சரியா 1.30 மணிக்கெல்லாம் சாப்பாடு கொடுத்தாங்க. என்ன, சைவ சாப்பாடு, அப்படி ஒண்ணும் சொல்லிக்கிற மாதிரி இல்லை. இந்த வருஷம் சரியா 12.30 மணிக்கு படகுல எறினோம். பொதுவா விருந்தோம்பலுக்கு நம்ம தமிழர்கள் தான் பேர் போனவர்கள். ஆனா, நம்ம தமிழர்களையே தூக்கி சாப்பிடுகிற மாதிரி, படகுக்குள்ள கால வச்சவுடனே, உங்களுக்கு குடிக்கிறதுக்கு பீர் வேணுமா, இல்ல வைன் வேணுமா, இல்ல ஷாம்பெயின் வேணுமா அப்படின்னு கேட்டாங்க. சாராயத்தை குடிக்காதவங்களிடம், ஜூஸ் வேணுமா, கோக் வேணுமான்னு கேட்பாங்காண்ணு பார்த்தா, ஒண்ணும் கேக்கவே காணோம். சரி, வாயுள்ள புள்ளை தான் புழைச்சுக்கும்ன்னு சொல்ற மாதிரி, நானே ஆரஞ்சு ஜூஸ் கேட்டு வாங்கிக்கிட்டேன். 

கொஞ்ச தூரம் போனவுடனே, படகை ஓரம் கட்டி நிறுத்திட்டாங்க. சரி, சாப்பாட்டுக்கு தான் நிறுத்தியிருக்காங்க போல, இந்த வருஷம் சைவ சாப்பாடு எப்படி இருக்கப் போகுதோன்னு, கவலைப்பட்டுக்கிட்டு இருக்கும்போது, எங்க படகுக்கு பக்கத்துல ஒரு வாடகை படகு(water taxi) வந்து நின்னுச்சு. அதிலேருந்து ஒருத்தர் நிறைய சாமான்களை எல்லாம் எடுத்துக்கிட்டு எங்க படகுக்கு வந்தாரு. அப்ப தான் சொன்னாங்க, நீங்க துப்பாக்கி சுட்டு பழகுவதற்கு இவர் வந்திருக்காருன்னு. எனக்குள்ள தூங்கிக்கிட்டு இருந்த ஆசை, அதாங்க ஒரு சின்ன துப்பாக்கியை கைல புடிச்சு சுட்டுப் பார்க்கணும் அப்படிங்கிற ஆசை தலை தூக்கி பார்த்துச்சு. இன்னைக்கு ஒரு சின்ன துப்பாக்கியை கைல வச்சு, வித விதமா போஸ் கொடுத்து போட்டோ எடுத்துக்கணும் அப்படின்னு நினைச்சுக்கிட்டேன். கொஞ்ச நேரத்துல அவர் ஒரு பெரிய ஸ்கோர் போர்ட் எல்லாம் செட் பண்ணினாரு. கடைசில துப்பாக்கியை எடுத்தாரு பாருங்க, அது நம்ம தமிழ் சினிமால காட்டுவாங்களே, போலீஸ் ஸ்டேஷன் வாசல்ல, ஒரு போலீஸ், ஆளு உயரத்துக்கு ஒரு துப்பாக்கியை வச்சுக்கிட்டு நின்னுக்கிட்டு இருக்கிற மாதிரி, அது மாதிரி தான் இருந்துச்சு அவர் வச்சிருந்த துப்பாக்கியும். இந்த துப்பாக்கி சுடுறதுக்கு பேரு “லேசர் சூட்டிங்” ன்னு சொன்னாங்க. 

அதாவது ஒரு சின்ன பிளாஸ்டிக் clayவை மேல பறக்க விடுவாங்க, அது தண்ணிக்குள்ள விழுறதுக்குள்ள, நாம அதை சுடனும். அந்த துப்பாக்கில புல்லட், கில்லட் எல்லாம் ஒண்ணும் கிடையாது. அந்த துப்பாக்கியே லேசர் துப்பாக்கியாம். நாம குறிப்பார்த்து அந்த பிளாஸ்டிக் clayவை சுட்டோம்னா, துப்பாக்கியிலிருந்து லேசர் கதிர் வீச்சு, அந்த clayல போயி பட்டா, நமக்கு புள்ளிகள் கிடைக்கும். அந்த புள்ளிகள், ஸ்கோர் போர்டுல தெரியும். சுட ஆரம்பிக்கறதுக்கு முன்னாடி, லேசர் சூட்டிங்கை நடத்துறவரு ஏகப்பட்ட விதி முறைகளை சொன்னாரு. அதுல முக்கியமானது என்னன்னா, எங்க படகுக்கு பக்கத்துல வேற ஏதாவது ஒரு படகு போனா, அந்த படகுல இருக்கிறவங்களை பார்த்து, தூப்பாகியை நீட்டக் கூடாதாம். ஏன்னா அவுங்க பயந்திடுவாங்களாம் (இந்த டம்மி துப்பாக்கிக்கே இப்படியா!!!). இதுல தண்ணிக்குள்ள விழுற அந்த clayயை எடுக்கிறதுக்கு, ஒரு குட்டி படகுல ஒருத்தர் காத்துக்கிட்டு இருந்து பொறுக்கி போடுவாரு.


ஐந்து, ஐந்து பேரா, நாங்க போயி அந்த clayயை சுட்டோம். ஒவ்வொருத்தருக்கும் எட்டு ரவுண்ட் கொடுத்து, யார் அதிக புள்ளிகள் எடுக்கிறாங்கன்னு பார்த்தாங்க. அந்த காலத்துல இந்த மாதிரி ரெட்டை குழல் துப்பாக்கி எல்லாம் வச்சுக்கிட்டு எப்படி தான் வேட்டைக்கு போனாங்களோ, சரியான கனம் அந்த துப்பாக்கி, நானும் எப்படியோ 5 ரவுண்டை தாக்குப் புடிச்சுட்டேன், அதற்கப்புறம் ஒரு 3 ரவுண்ட் ரொம்ப கஷ்டமா போச்சு. எப்படியோ, 8 ரவுண்டை முடிச்சு 11 புள்ளிகளோட வெளியே வந்தேன். (நிறைய பேர் 20 புள்ளிகளுக்கு மேல எடுத்தாங்க. அதிக பட்சம் 24 புள்ளிகள்). இந்த ஆட்டம் முடியும்போது மணி 3.30, உடனே நாலைந்து பேர் தண்ணில நீச்சல் அடிக்கிறோம்னு படகுலேருந்து குதிச்சு, நீச்சல் அடிக்க ஆரம்பிச்சுட்டாங்க. இங்க எனக்கா பசி வயித்தை கிள்ளுது. வெளியே சொல்றதுக்கும் கஷ்டமா இருந்துச்சு. என்னடாது, எவனுக்குமே பசிக்கதான்னு யோசிச்சுக்கிட்டு இருக்கும்போது, நீச்சல் அடிச்சு முடிச்சு ஒரு அம்மணி, எப்ப மதிய சாப்பாடுன்னு படகுகாரங்க கிட்ட கேட்டாங்க, அவுங்களும், சாப்பாடு எல்லாம் கிடையாதுன்னு சொன்னாங்க.

அடப்பிபாவிகளா! இப்படி சாப்பாடு இல்லாம பண்ணிட்டீங்களேன்னு நொந்து போய் வெறுமன ஆரஞ்சு ஜூஸா வாங்கி வாங்கி குடிச்சு வயித்தை நிரப்பிக்கிட்டு, படகிலிருந்து இறங்கினவுடனே,hungry jacks” கடைல போய் ஒரு சைவ பர்கர் வாங்கி சாப்பிட்டு வீட்டுக்கு வந்தேன்.

1 comment:

  1. துப்பாக்கி சுடுறதுக்கு பதிலா தோசை சுட்டு பழகியிருந்தீங்கனா இந்நேரம் பசியும் தீர்ந்திருக்கும் ... சுத்தமா விவரம் தெரியாத புள்ளையாவே இருந்திருக்கீங்க.... >> சயின்டிபிக் ஜட்ஜ்மென்ட் <<

    ReplyDelete