Saturday, December 29, 2012

காதல் கீதம் - 8

 பகுதி - 7  
ஜானகி சென்ற சிறிது நேரத்திற்கு பிறகு அடைக்கப்பன் சென்றான். இவர்கள் இருவரும் சென்ற பிறகு, ஜானகி தந்தையின் நெருங்கிய நண்பரும், கூட  வேலை பார்பவருமான முத்து எழுந்து போனார். அவர் அன்று சிவகங்கைக்கு ஒரு வேலையாக வந்து, அந்த வேலை முடியாததால், அந்த பூங்காவில் வந்து உட்கார்ந்திருந்தார். அவர் உட்கார்ந்திருப்பது தெரியாமல், ஜானகியும், அடைக்கப்பனும் அவருக்கு முன்னால் உள்ள பெஞ்சில் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தனர். இவர்கள் பேசிய அனைத்தையும் கேட்ட முத்து, தன் வேலையை முடித்துக்கொண்டு, நேராக தன் டிபார்ட்மெண்டுக்கு சென்று, ஜானகியின் தந்தை நாராயணனை தேடினார். அவரும் வேலையை முடித்து, வீட்டிற்கு கிளம்புவதற்கு தயாராக இருந்தபோது முத்துவைப் பார்த்தார்.

“என்ன முத்து, நீ இன்னைக்கு லீவு தானே போட்டிருந்த?” என்று கேட்டார் நாராயணன்.

“ஆமா நாராயணா, நீ இப்ப வீட்டுக்கு தானே போறே?, உன்னைய பார்த்து பேசுறதுக்கு தான் நான் இப்ப வந்தேன்” என்றார் முத்து. 

“சரி, வா என்னோட வேண்டிலேயே பேசிக்கிட்டு வீட்டுக்கு போலாம்” என்றார் நாராயணன்.

இல்லை நாராயணா, இது கொஞ்சம் முக்கியமான விஷயம், வெளியில இருக்கிற டீ கடைல போய் பேசுவோம்” என்று கூறி, டீ கடையை நோக்கி நடக்க ஆரம்பித்தார்.

நாராயணனும் ஏதோ முக்கியமான விஷயம் என்று எண்ணிக்கொண்டு ஆலைக்கு வெளியில் இருக்கும் டீ கடைக்கு முத்துவோடு போனார்.
முத்து, ரெண்டு டீயை ஆர்டர் பண்ணிவிட்டு, பின்னாடி இருந்த பெஞ்சில் போய் உட்கார்ந்தார், பின்னாடியே வந்த நாராயணனும்,அவர் எதிரில் உட்கார்ந்து,

“என்ன முத்து, அப்படி முக்கியமான விஷயம்” என்றார்.

அவரையே பார்த்துக்கொண்டிருந்த முத்து, “கம்ப்யூட்டர் டிபார்ட்மெண்ட்ல வேலை செய்யுறதுக்கு, மெட்ராஸ்லேருந்து வந்திருக்கிற தம்பியை பத்தி நீ என்ன நினைக்கிற?” என்று கேட்டார் முத்து.

“யாரு, அந்த அடைக்கப்பன் தம்பியா?, அந்த பையன் ரொம்ப நல்ல பையனாத்தான் இருக்கான்” என்றார் நாராயணன்.

அவன் உனக்கு சொந்தமா” என்று கேட்டார்.

“ஒரு வகைல பார்த்தா அந்த பையன் தூரத்து சொந்தம் தான். என் தங்கச்சி மாப்பிள்ளையோட மாமா பையன் தான் இந்த அடைக்கப்பன். ஆமா எதுக்கு இப்ப அந்த பையனை பத்தி கேக்குற? என்றார் நாராயணன்.

“விஷயம் இருக்கு, இன்னைக்கு சிவகங்கைக்கு போயிருந்தேன் இல்ல, அங்க ஹாஸ்பிடல்ல என்னோட ரிபோர்ட் கிடைக்கிறதுக்கு 1 மணி நேரம் ஆகும்னு சொன்னாங்க. அதனால பக்கத்துல இருக்கிற பூங்காவில போய் உட்கார்ந்து இருந்தேன். கொஞ்ச நேரம் கழிச்சு எனக்கு பின்னாடி ரெண்டு பேர் வந்து உட்கார்ந்து பேச ஆரம்பிச்சாங்க. பெண்ணோட குரல் ரொம்ப பழக்கபட்ட குரலாட்டம் இருந்துச்சு. மெதுவா திரும்பி பார்த்தா, அவுங்க எனக்கு முதுகை காட்டிக்கிட்டு உட்கார்ந்திருந்தாங்க. அப்புறம் தான் தெரிஞ்சுது, அந்த பொண்ணு வேற யாரும் இல்ல, நம்ம ஜானகி,அந்த பையனும் அடைக்கப்பண்ணு” சொன்னார் முத்து.

“அவுங்க ரெண்டு பேரும் காதலிக்கிறாங்களா” என்று கேட்டார் நாராயணன்.

“ஆமா, ஆனா அவுங்க பேசிக்கிட்டதிலிருந்து என்ன தெரிஞ்சுதுன்னா, ஜானகி படிப்பை முடிச்சதும், உங்கிட்ட அந்த பையனை கல்யாணம் பண்ணிக்க இஷ்டம்னு சொல்லுவான்னு நினைக்கிறேன்” என்றார் முத்து.

“உனக்கு தெரியும் இல்ல முத்து, நான் அவளை எப்படி எல்லாம் வளர்த்தேன்னு, கடைசில அவளும் இப்படி காதல், கத்திரிக்காய்ன்னு விழுந்துட்டாளே” என்று வருத்தப்பட்டார் நாராயணன்.

“இதுல வருத்தப்படுறதுக்கு என்ன இருக்கு நாராயணா. இந்த காலத்துல காதல் எல்லாம் ரொம்ப சர்வ சாதாரணமா ஆயிடுச்சு. ஆனா, நம்ம ஜானகி யாரோ ஊர் பேர் தெரியாதவனை காதலிக்கலை. ஒரே இனத்துல, அதுவும் உனக்கு நல்லா தெரிஞ்ச பையனைத்தான் காதலிச்சிருக்கா. அதோட அவுங்க ரெண்டு பேரும் ரொம்ப கண்ணியமா தான் பழகுறாங்க. பேசாம அந்த பையனுக்கே அவளை கட்டி வச்சிடேன்” என்றார் முத்து.

“இவ இன்னமும் படிப்பையே முடிக்கலை. அதுக்குள்ள கல்யாணத்தை எப்படி பண்றது. முதல்ல இந்த வாரம் சிதம்பரத்துக்கு பொண்ணு பார்க்க போறோம். அது நல்ல படியா அமைஞ்சுதுன்னா, அப்புறம் இவளைப் பற்றி யோசிக்கலாம். அதோட அந்த பையனைப் பத்தியும் இன்னும் நல்லா விசாரிக்கணும்” என்றார் நாராயணன்.

“ஆமா, அந்த பையன் வீடு உங்க கோவில் கிடையாது தானே. அதை முதல்ல தெரிஞ்சுக்க” என்றார் முத்து.

“அவுங்க எங்களோட கோவில் கிடையாது அது நல்லா தெரியும். எனக்கு என்ன மனசு கஷ்டமா இருக்குதுன்னா, நான் ஒரு நல்ல மாப்பிள்ளையா அவளுக்கு தேடணும்னு நினைச்சுக்கிட்டு இருந்தேன். அப்பா, உங்களுக்கு அந்த சிரமம் எல்லாம் வேண்டாம்னு, இவளே ஒரு மாப்பிள்ளையை தேர்ந்தெடுத்திட்டா. உம். எல்லாம் கலி காலம்” என்று சலிச்சுக்கிட்டார் நாராயணன்.   

“இங்க பாரு நாராயணா, இன்னும் கொஞ்சம் நாள் போயிருந்தா நீயே அந்த பையனைப் பத்தி விசாரிச்சு, மாப்பிள்ளையாக்கிக்கிட்டு இருப்ப. அதனால, ஜானகியைப் பத்தி தப்பா நினைக்காமா ஆக வேண்டியதை பாரு.  உனக்காக நான் அந்த பையனைப் பத்தி விசாரிச்சு சொல்றேன். உன் பையன் கல்யாணம் முடிஞ்சவுடனே, இவுங்க கல்யாணத்தையும் நடத்தி, அந்த தம்பியையும் நம்ம ஃபேக்டரிலேயே வேலையை மாத்திக்க வச்சுட்டா, அப்புறம் உன் பொண்ணு உன்னைய விட்டு எங்கேயும் போகமாட்டா” என்றார் முத்து.   

“சரி முத்து, இந்த விஷயத்தை யாருக்கிட்டேயும் சொல்லாதே. நானே வீட்டுல இதை பத்தி பேசபோறதில்லை. பையன் கல்யாணம் முடிஞ்ச பிறகு தான் இதைப் பத்தி வாயே திறக்கப்போறேன்” என்றார் நாராயணன்.

“என்ன நாராயணா நீ பேசுற, நான் போய் இதை யாருக்கிட்டையாவது சொல்லுவனா?. ஜானகியும் எனக்கு ஒரு மக மாதிரி தான். நீ கவலையே படாதே. சரி கிளம்பலாம் வா” என்றார் முத்து.

நாராயணன், தன் மகளைப் பற்றி எண்ணிக்கொண்டே வீடு வந்து சேர்ந்தார். அங்கு ஜானகி அடுப்படியில் தன் தாய்க்கு உதவியாக வேலை செய்துக் கொண்டிருந்தாள். தந்தையை பார்க்த்தவுடன்,காபி போட்டு எடுத்துச் சென்றாள்.

“இந்தாங்கப்பா காபி” என்று கூறி காபியை கொடுத்தாள்.

நாராயணன் சிறிது நேரம் அவளிடமிருந்து காபியை வாங்காமல், அவளையே பார்த்துக் கொண்டிருந்தார். இந்த பூனையும் பால் குடிக்குமான்னு சொல்ற மாதிரி இருந்துக்கிட்டு, இவளும் காதலிக்கிறாளேன்னு உள்ளுக்குள் வருத்தப்பட்டுக் கொண்டார்.

“என்னப்பா, புதுசா பார்க்கிற மாதிரி பார்க்கிறீங்க. முதல்ல காப்பியை வாங்கிக்குங்க” என்றாள் ஜானகி.

காபியை வாங்கிக்கொண்டு, “ஒண்ணும் இல்லம்மா, முதல்ல உங்க அண்ணனுக்கு கல்யாணத்தை முடிக்கலாமா, இல்ல உனக்கு முடிக்கலாமான்னு யோசிக்கிறேன்” என்றார் நாராயணன்.

“என்னப்பா இது, நான் இன்னமும் படிப்பையே முடிக்கலை. அதுக்குள்ள எனக்கு எதுக்கு கல்யாணம். முதல்ல அண்ணனுக்கு முடிங்க”, அப்புறம் எனக்கு பார்க்கலாம்” என்றாள்.

“சரிம்மா, உங்கண்ணனுக்கு, இந்த இடம் முடிஞ்சுடும்னு நினைக்கிறேன். அப்படி முடிஞ்சிருச்சுன்னா, கல்யாணத்தை உடனே வச்ச்சுகிற மாதிரி இருக்கும். அதனால, நீ பாட்டுக்குன்னு இன்னைக்கு உன் ஃப்ரெண்ட்டை பார்க்க போன மாதிரி, அடிக்கடி போகாதே, கல்யாண வேலை எல்லாம் நிறைய இருக்கு” என்றார்.

“சரிப்பா” என்று கூறிவிட்டு தன் அறைக்குள் சென்றாள். அவளுடைய மனதோ,அப்பாவுக்கு எதாவது விஷயம் தெரிஞ்சிருக்குமோ என்று குழம்பியது. அப்பாவுக்கு தெரிஞ்சிருக்காது, நாமா தான் யாருக்கும் தெரியாம காதலிக்கிறோமே என்று உடனே மனதை சமாதானப்படுத்தினாள்.  

வெள்ளிக்கிழமை அன்று, அடைக்கப்பன் லீவு போட்டு, மெட்ராஸுக்கு போனான். சனிக்கிழமை ஜாகியின் வீட்டில், ஜாகியின் பெற்றோர், ஜானகி, சிதம்பரம் மற்றும் அவர்களின் அப்பத்தா எல்லோரும் மெட்ராஸுக்கு சிதம்பரத்திற்கு பொண்ணு பார்க்க கிளம்பி நேராக ஜானகியின் அத்தைப் பெண் உண்ணாவின் வீட்டுக்கு சென்று இறங்கினார்கள். அன்று காலை 11மணிக்கு வடபழனி கோவிலில் சிதம்பரத்திற்கு பெண் பார்ப்பதாக ஏற்பாடாகியிருந்தது. சிதம்பரம் வீட்டில் எல்லோருக்கும் பெண்ணைப் பிடித்து விட்டது. உடம்பு சரியில்லாமல் இருக்கும் அந்த பெண்ணின் ஆயாவிற்கு, தன் பேத்தியின் கல்யாணத்தை சீக்கிரம் பார்த்து விட வேண்டும் என்பதால், கலியானத்தை ஒரு மாதத்திற்குள் முடித்து விட வேண்டும் என்று அந்த பெண் வீட்டார், ஜானகியின் வீட்டில் சொன்னார்கள். ஜானகியின் வீடும், அதற்கு ஒத்துக் கொண்டது. ஆனால், சிதம்பரத்திற்கு மட்டும், இதில் வருத்தம். அவன் நினைத்தது, திருமணத்திற்கு ஒரு ஆறு மாதங்களாவது இருக்கும், அதற்குள் பெண்ணிடம் அடிக்கடி தொலைபேசியில் பேசி, காதலை வளர்த்துக் கொள்ளலாம் என்று எண்ணி இருந்தான். பெண் பார்த்து முடித்து, மீண்டும் உண்ணாவின் வீட்டிற்கு வந்தார்கள். அங்கே, அடைக்கப்பன் ஜானகிக்காக காத்துக் கொண்டிருந்தான். 
பகுதி - 9 
                                            - [தொடரும்]

No comments:

Post a Comment