Tuesday, November 13, 2012

தனிமையில் தீபாவளி


உங்கள் எல்லோருக்கும் என்னுடைய இனிய தீபாவளி வாழ்த்துக்கள். கிட்டதட்ட பதினைந்து வருடங்களுக்கு பிறகு இந்த வருடம் தான் குடும்பத்தை விட்டுட்டு, தனியாக தீபாவளியை கொண்டாட நேர்கிறது. உம்,தனியாக என்று சொல்லக்கூடாது. ஏனென்றால், இன்று இரவு நண்பர் வீட்டுக்கு சென்று அவர் குடும்பத்தாருடன் தீபாவளியை கொண்டாட இருக்கிறேன். என்னதான் வெளிநாடுகளில் தீபாவளியை கொண்டாடினாலும், இந்தியாவில் கொண்டாடுகிற மாதிரி வரவே வராது. இந்தியாவில், விடியற்காலையில் நாலரை,ஐந்து மணிக்கெல்லாம் எழுந்து, தலைக்கு எண்ணை தேய்த்து குளித்து, புதுத் துணியை போட்டுக்கிட்டு, ரோட்ல போய் வெடி வெடித்து, எட்டரை மணிக்கு, வீட்டுக்குள்ளேருந்து, அம்மா “டேய், சாப்பிட்டு போய் வெடிடான்னு” ஒரு நாலைந்து முறை கூப்பிட்டபிறகு, வேக வேகமா சாப்பிட்டுட்டு வந்து, நண்பர்களோட இருக்கிற எல்லா வெடிகளையும் வெடிச்சு, இதுக்கு நடுவுல கோவிலுக்கு போயிட்டு வந்து, உம்... அதெல்லாம் ஒரு காலம். இங்க வெறும் கம்பி மத்தாப்பை மட்டும் வீட்டின் பின்புறம் பத்த வைத்து, அதை இரண்டு கைகளாலும் ஒரு சுத்து சுத்தி, ஐய்யா! நாங்களும் தீபாவளியை கொண்டாடிட்டோமேன்னு சொல்லிக்கொள்வோம். இதுல அந்த கம்பிமத்தாப்பை கைல பிடிச்சுக்கிட்டு புகைப்படம் எல்லாம் வேற எடுத்துக்கிறது உண்டு. வார இறுதி நாட்களிலும் நண்பர்களின் பங்களிப்போடு இந்த அல்ப கொண்டாட்டம் தொடரும்.

இந்த சனிக்கிழமை அதாவது, 17ஆம் தேதி, சிட்னியில் உள்ள தமிழ் கலை மற்றும் பண்பாட்டுக் கழகம்” சார்பில் “இனிய தீபாவளி சந்திப்பு” என்ற ஒரு நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது. இதில் இந்தியாவிலிருந்து, பேராசிரியர். முனைவர். இரா.மோகன் மற்றும் அவரது துணைவியார் முனைவர்.நிர்மலா மோகன் கலந்துக்கொண்டு ஒரு பட்டிமன்றத்தை வழங்கவிருக்கிறார்கள். உள்ளூர் கலைஞர்களின், கலை நிகழ்ச்சிகளும் நடைபெற இருக்கிறது. இதில், அடியேன் எழுதி, நடிக்கும்  “தலை தீபாவளி” என்ற நகைச்சுவை குறுநாடகமும் அரங்கேறவுள்ளது. மாமனார் தலையை எப்படி மொட்டை அடிக்கலாம்னு, ஆபிஸுக்கு லீவு  போட்டு வீட்டில் உட்கார்ந்து யோசிச்சு எழுதிய நாடகம் அது (தலை தீபாவளி கொண்டாடி ரொம்ப வருஷம் ஆனதுனால, இதெல்லாம் மறந்துபோச்சு). அதே நாடகம், இங்கு வானொலியிலும் அன்று இரவு ஒளிபரப்பாக உள்ளது.

இந்த வருட தீபாவளியை குடும்பத்தை விட்டுட்டு கொண்டாடினாலும், அது ஒரு மறக்க முடியாத தீபாவளியாக அமையும் என்று நம்புகிறேன். 

No comments:

Post a Comment