Sunday, November 11, 2012

காதல் கீதம் - 3

பகுதி -2
உங்களுக்கு இந்த சுடிதாரை காட்டிலும், தாவணி தான் நல்லா இருக்கு ஜானகி என்றான் அடைக்கப்பன்.
 
உடனே, அவளுக்கு பொறை போயி, தண்ணி எல்லாம் மேல சிந்தி, அவனை ஆச்சிரியமாக பார்த்தாள்.
அடைக்கப்பன், அட ஆமாங்க. உண்மையை தாங்க சொல்றேன் என்று சொல்லி, பந்தி பரிமாறும் இடத்தை விட்டு சென்று விட்டான்.
 
ஜானகிக்கோ, ஒன்றும் புரியவில்லை. இவனுக்கு எப்படி நம்ம பேர் தெரிந்து இருக்கும் என்று குழம்பினாள்.
பக்கத்தில் இருக்கும் அத்தை பெண் வள்ளியோ, இன்னும் ஒரு படி மேல போயி, ஏய், எப்ப நீ அவன் கூட பேசுன என்று கேட்டாள்.
 
ஐயையோ, நான் அவன் கூட எல்லாம் பேசல” என்றாள் ஜானகி.
“பின்ன எப்படி அவன் உன் பேரை சொல்றான்” என்று கேட்டாள் வள்ளி.
“அதான்டி, எனக்கும் ஒண்ணும் புரியல” என்று பதிலளித்தாள் ஜானகி.
உடனே வள்ளி, ஒரு பெருமூச்சு விட்டு, “உம்! நானும் பார்க்குறேன், காலையிலிருந்து நீ அவனை பாக்குறதும், அவன் உன்னை பாக்குறதுமா என்னமோ நடக்குது உங்களுக்குள்ள, என்கிட்ட மறைக்கிற” என்றாள்.
“நீ வேற, எதையாவது புதுசா கிளப்பி விடாதே, வா, போயி கையை கழுவிட்டு கீழே போகலாம்” என்றாள் ஜானகி.
 
இருவரும் கீழே போகையில், வள்ளி ஜானகியின் கையைப் பிடித்து நிறுத்தி, அவளை ஒரு முறை நன்றாக ஏற இறங்க பார்த்தாள்.
“அவன் சரியாத்தான் சொல்லியிருக்கான் ஜானகி, உனக்கு இந்த சுடிதாரைக் காட்டிலும் தாவணி தான் ரொம்ப நல்லா இருக்கு” என்றாள் வள்ளி.
 
“ஐயோ, அவன் தான் என்னமோ உளறுறான்னா, நீ வேற” என்று கோபப்பட்டாள் ஜானகி.
 
வள்ளியோ, “அவன் உளறும் போது, நான் உன் முகத்தை தான பார்த்தேன், அப்பப்பா!, என்னம்மா உன் முகம் சூரியனை கண்ட தாமரையை போல மலர்ந்துச்சு. ஆனா, இப்ப அதையே நான் சொல்லும்போது ஏன் கோபப்படுற” என்றாள்.
 
“உனக்கு அவன் உன்னைய பாக்கலன்னு பொறாமை, அதான் என்னைய ஒட்டுற” என்றாள் ஜானகி.
“எனக்கு ஒண்ணும் பொறாமை எல்லாம் இல்லை. சரி, அவன் பேரு தெரியுமா உனக்கு” என்று கேட்டாள் வள்ளி.
 
“எனக்கு அவனை பற்றி ஒண்ணுமே தெரியாது” என்றாள் ஜானகி.
“அடி மக்கு ஜானகி, ஒருத்தன் நம்மளை பார்க்கிறான்னு தெரிஞ்ச உடனே, அவனை பத்தி நாம எல்லாம் தெரிஞ்சுக்கணும்” என்றாள் வள்ளி.
 
“எனக்கும் அவனைப் பத்தி தெரிஞ்சுக்கறதுக்கு ஆசையா தான் இருக்கு. ஆனால் எப்படி தெரிஞ்சுக்குறதுன்னு தான் தெரியலை. பேசாம நம்ம கல்யாண பொண்ணு உண்ணா கிட்டயே கேட்டுடலாமா”? என்றாள்.
“இந்த விஷயத்தை மட்டும் அவ கிட்ட கேட்டுடாதே. உடனே அவ, நீ அவனை விரும்புறேன்னு, ஒரு குட்டி கலகத்தையே உண்டு பண்ணிடுவா. அதனால கொஞ்சம் பொறு ஜானகி, யாருக்கும் சந்தேகம் வராத படி தான் அவனைப் பத்தி விசாரிக்கணும்” என்றாள் வள்ளி.

இப்படி இருவரும் பேசிக் கொண்டு இருந்தாலும்,ஜானகியின் கண்களோ, அடைக்கப்பன் எங்கே இருக்கிறான் என்று தேடியது.
அவர்கள் மாடிப் படியிலிருந்து கீழே இறங்கி வருவதை பார்த்த அடைக்கப்பனுக்கு, இந்த கூட்டத்துல ஜானகி நம்மளை தேடுறாளான்னு பார்க்க ஆசை வந்துடுச்சு. அதனால அங்க இருந்த ஒரு தூணுக்கு பின்னாடி போயி நின்னுக்கிட்டு, ஜானகியையே பார்க்க ஆரம்பிச்சான். இந்த  நேரத்துல தான் ஜானகியும், அடைக்கப்பன் எங்கே இருக்கிறான்னு கண்களால் தேட, அடைக்கப்பனோ இறக்கை இல்லாமா வானத்துல பறக்க ஆரம்பிச்சுட்டான். இவுங்க ரெண்டு பேரும் ஆடும் இந்த கண்ணாம்பூச்சி ஆட்டத்தை, அவனை விட இரண்டு வயது சிறியவனான சித்தி மகன் ரமேஷ் பார்த்துவிட்டு, அடைக்கப்பனின் அருகில் வந்தான்.
“அடைக்கப்பா! இங்க என்ன நடக்குது?” என்றான் ரமேஷ்.
பயந்து போயி திரும்பி பார்த்த அடைக்கப்பன், “ஒண்ணும் இல்லையே” என்றான்.
 
 
“நீ தூணுக்கு பின்னாடி மறைஞ்சு நிக்கிறதும், அந்த பொண்ணு உன்னைய தேடுறதும், அவ உன்னைய தேடுறான்னு தெரிஞ்சவுடனே, நீ கொஞ்சம் தள்ளி வந்து அவளுக்கு தரிசனம் கொடுக்கிறதும், உன்னையப் பார்த்த உடனே அவள் தலையை குனிஞ்சுக்கிறதும், இதெல்லாம் நான் பார்த்துக்கிட்டு தான் இருக்கேன்” என்றான் ரமேஷ்.

“ரமேஷ் நான் உன்கிட்ட சொல்லாம வேற யார்கிட்ட சொல்லபோறேன். என்னமோ தெரியலை, அந்த பொண்ணை பார்த்துக்கிட்டே இருக்கணும் போல இருக்கு” என்றான்.

“ஓ! அப்படி போகுதா விவகாரம். சரி, அந்த பொண்ணைப் பத்தின விவரம் ஏதாவது தெரியுமா, அவ பாடு உங்க கோவிலாகவே இருக்கப் போறா?” என்று கேட்டான் ரமேஷ்.

“அவ வேற கோவில். அதுவுமில்லாம அவளைப் பத்தி முழுக்க தெரியும்” என்று பதில் அளித்தான் அடைக்கப்பன்.

“அடப்பாவி, காலையில தான் வந்த, அதுக்குள்ள அவளைப் பத்தி எல்லாம் தெரிஞ்சுக்கிட்டியா? ஆமா அவக் கிட்ட மட்டும் என்ன அப்படி ஒரு ஈர்ப்பு” என்றான் ரமேஷ்.
“தெரியல ரமேஷ், எத்தனையோ பொண்ணுங்களோட பேசி இருக்கேன், ஆனா, இவளை பார்த்த உடனே, மனசு என்னமோ பண்ணுது” என்றான் அடைக்கப்பன்.

“இதுக்கு பேரு தான் காதல் அடைக்கப்பா! இத பாரு, அவ இன்னும் கொஞ்ச நேரம் தான் இருப்பா, அதனால உன் காதலை சீக்கிரம் அவ கிட்ட சொல்ற வழியைப் பாரு” என்றான்.
“டக்குன்னு எப்படிடா போயி சொல்றது? அவ என்னைய பத்தி என்ன நினைச்சுப்பா? அதோட இல்லாம, அவளும் என்னைய விரும்புறாளான்னு வேற தெரியலை?” என்றான் அடைக்கப்பன்.

“அவ விரும்புறது, நூறு பர்சண்ட் உண்மை. இப்பக் கூட பாரு, அவ உன்னையே தான் பார்க்கிறா” என்றான் ரமேஷ்.
உடனே, அடைக்கப்பன் ஜானகியைப் பார்த்தான். அதுவரைக்கும் அவனையே பார்த்துக் கொண்டிருந்த ஜானகி, அடைக்கப்பன் பார்த்தவுடன், தலையை குனிந்து கொண்டாள்.

“நீ பாட்டுக்குன்னு அவளையே  பார்த்துக்கிட்டு இருக்காதே! அடைக்கப்பா, வேற யாராவது பார்த்துட்டா வம்பா போயிடும்னு” என்று எச்சரித்தான் ரமேஷ்.
“அவளை பார்க்காம இருக்க முடியலை ரமேஷ். அதுவும் அவள் இந்த கூட்டத்துல இருக்கும் போது, கண்ணு அவளை தான் பார்ப்பேன்னு அடம் பிடிக்குது” என்றான்.

“உன் கண்ணுல கொள்ளிக் கட்டைய வக்க, கண்ணு அவளை தான் பார்ப்பேன்னு அடம் பிடிக்குதாமுல்லே, நீ இப்படியே பார்த்துக் கிட்டு இரு, யாராவது உங்களை பார்க்கப் போறாங்க, அப்ப தெரியும்” என்றான் ரமேஷ்.
“ரமேஷ், நீ இந்த விஷயத்தை, யாருக்கிடேயும் சொல்லிடாதே” என்றான் அடைக்கப்பன்.

ரமேஷ் அதுக்கு, “கவலைப்படாதே, நான் யாருக்கிட்டேயும் சொல்ல மாட்டேன். பேசாம பெரியம்மா கிட்ட சொல்லி, அந்த பொண்ணையே கல்யாணம் பண்ணி வைக்க சொல்லிடு. நம்ம ஆயா வீட்டு சைடுல, உனக்கு தான் அடுத்து கல்யாணம் ஆகணும். அதனால ஒண்ணும் பிரச்சனை இருக்காது” என்றான்.
“நீ வேற அவ இன்னும் படிப்பே முடிக்கலை, அதுக்குள்ள அவுங்க வீட்டுல எப்படி கல்யாணம் பண்ணிக் கொடுப்பாங்க” என்றான் அடைக்கப்பன்.
“அப்ப நீ பொறுமையா இரு”, என்று கூறிவிட்டு அந்த இடத்தை விட்டு நகர்ந்தான் ரமேஷ்.
பெண்கள் அமர்ந்திருக்கும் இடத்தில் ஜானகி வள்ளியிடம், “எப்படியாவது அவன் பேரை தெரிஞ்சுக்க வழி சொல்லுடி” என்றாள்.
வள்ளியோ, யோசித்து “காலைல அவனை உங்க அண்ணன் தான் சாப்பிட கூட்டிக்கிட்டு வந்து, ரெண்டு பேருமா தானே சாப்பிட்டாங்க. உங்க அண்ணனுக்கு அவனைப் பத்தி தெரிஞ்சிருக்கும். அதனால, உங்க அண்ணன் கிட்டையே கேட்டுடேன்” என்றாள்.
“ஐயையோ, அண்ணன் கிட்டேயா, எப்படி கேக்கிறது” என்று பதறினாள் ஜானகி.
“சரி, வேற வழியை யோசிப்போம்” என்றாள் வள்ளி.
ஒரு வழியா பொண்ணு வீட்டுக்காரங்க எல்லோரும் கிளம்புறதுக்கு தயாரானாங்க. அப்போது வள்ளி ஜானகியிடம்,
“வரும்போது தான், அவன் வாங்கன்னு சொன்னதுக்கு, ஒண்ணுமே சொல்லாம வந்துட்ட. அதனால போகும் போதாவது, அவன் கிட்ட வாயைத் திறந்து போயிட்டு வறேன்னு சொல்லிட்டு வாடி”. என்றாள்.
பொண்ணு விட்டுக்காரர்கள் ஒவ்வொருவரா மாப்பிள்ளை விட்டுக்காரர்களிடம் சொல்லிக் கொண்டு கிளம்பினார்கள். அப்போது ஜானகியும், வாசலில் நிற்கும் அடைக்கப்பனிடம், மெதுவாக “போயிட்டு வரேங்க” என்று சொல்லிவிட்டு, அவனைப் பார்த்து ஒரு புன்னகையை சிந்திவிட்டு போனாள்.
அடைக்கப்பனுக்கு, தான் பார்ப்பது கனவான்னு சந்தேகம் வந்துடுச்சு. தன்னையே ஒரு முறை கிள்ளிப் பார்த்துக்கிட்டான். அவள் போயிட்டு வறேன்னு சொன்னதுக்கு, நாம ஒண்ணுமே சொல்லலையேன்னு, மனசுக்குள் தன்னையே திட்டிக்கிட்டு வாசற்படி இறங்கி தெருவுக்கு வந்தான்.
ஜானகியும், வள்ளியும், மாப்பிள்ளையின் வீட்டுக்கு அருகில் நின்றுக் கொண்டிருந்த தாங்கள் வந்த பஸ்ஸில் ஏறினார்கள். அப்போது ஜானகி, அவன் எப்படியும் நம்மளை பார்க்கிறதுக்கு வெளியே வருவான், அதனால நாம ஜன்னல் ஓரமா உட்கார்ந்துக்கனும்னு முடிவு பண்ணினாள். ஆனால் ஒரு ஜன்னலோர இருக்கையும் காலியாக இல்லை. அவளுடைய அதிர்ஷ்டம், மூன்று பேர் அமரக் கூடிய இருக்கையில், ஜன்னலோரத்தில், ஒரு சிறுவன் மட்டும் உட்கார்ந்து இருந்தான். ஜானகி அவனிடம் போயி,
“டேய், செல்லம் இல்ல, அக்காவுக்கு உன் இடத்தை கொடுடா, வண்டி கிளம்புனவுடனே, நீ உட்கார்ந்துக்கோ” என்று கெஞ்சினாள்.
அந்த சிறுவனும், என்ன நினைத்தானோ, ஜானகிக்கு ஜன்னலோர இருக்கையை விட்டுக் கொடுத்து, “அக்கா, வண்டி ஸ்டார்ட் ஆன உடனே எனக்கு கொடுத்துடனும்ன்னு” கட்டளை போட்டான்.
ஜானகியும், அந்த இருக்கையில் உட்கார்ந்து, வெளியே அடைக்கப்பன் தெரிகிறானா என்று பார்த்துக் கொண்டிருந்தாள்.
வெளியே வந்த அடைக்கப்பனின் கண்கள், அந்த பேருந்துக்குள், அவள் எங்கு உட்கார்ந்திருக்கிறாள் என்று சல்லடை போட்டு தேடி கடைசியில் கண்டும் பிடித்தது.
இருவர் கண்களும் ஒன்றோடொன்று கலந்தன. கண்கள் மூலமாக, போயி வருகிறேன் என்று அவளும், போய்வா என்று இவனும் பேசிக் கொண்டனர். சிறிது நேரத்திற்கெல்லாம், அந்த பேருந்து கிளம்பிற்று. அடைக்கப்பனோ, அந்த பேருந்து சென்ற திசையே பார்த்துக் கொண்டு நின்றான். ஜானகியோ, தெருவில் யாரும் இல்லை என்பதை தெரிந்துக் கொண்டு, ஜன்னலிலுருந்து, தலையை வெளியே நீட்டி, அவனையே பார்த்துக் கொண்டு சென்றாள்.
சிறிது நேரம் அங்கேயே நின்றுக் கொண்டு ஒரு திரைப்பட பாடலை முணுமுணுக்க ஆரம்பித்தான்.

     “போகுதே போகுதே, என் பைங்கிளி வானிலே,
     நானும் சேர்ந்து போகவும் சிறகு இல்லையே
      உறவும் இல்லையே

அப்போது அவனை தேடிக் கொண்டு ரமேஷ் அங்கு வந்தான்.
“என்ன, அடைக்கப்பா, உன் ஆளை வழி அனுப்பிட்டியா?” என்று கேட்டான்.
“ஆமாண்டா, அவ போயிட்டா. திரும்பி எப்பப் பார்க்க போறேனோ?” என்றான் அடைக்கப்பன்.
“ஆமா!, என்னமோ பாட்டு பாடிக்கிட்டு இருந்தே” என்று கேட்டான் ரமேஷ்.
“தெரியலைடா, இன்னைக்கு எல்லாம், அந்த அந்த எடத்துக்கு தகுந்த மாதிரி, சினிமா பாட்டு தான் நியாபகத்துக்கு வருது” என்று சொன்னான் அடைக்கப்பன்.
“முதல்ல சினிமா பாட்டு வரும், அப்புறம் பாரு நீயே பாட்டு எழுதுவே. சரி, சரி வா உள்ள போகலாம்” என்று அடைக்கப்பனை கூட்டிக் கொண்டு உள்ளே போனான் ரமேஷ்.   
அடைக்கப்பன் மறு நாள் இரவு எல்லோரிடமும் சொல்லிக் கொண்டு சென்னைக்கு கிளம்பினான். ஆபிஸ் சென்று முதல் வேலையா தன் நண்பன் சுரேஷிடம் தனக்கு ஏற்பட்ட அனுபவத்தை கூற ஆரம்பித்தான்.
“சுரேஷ், நீ அன்னைக்கு சொன்னது அப்படியே பலிச்சிடுச்சு” என்றான்.
“நான் என்ன சொன்னேன்?” என்று கேட்டான் சுரேஷ்.
“அதான்டா, ஒரு பெண்ணைப் பார்த்தவுடன் உனக்கு காதல் வரும்னு சொன்னியே, அது தான்” என்று கூறினான் அடைக்கப்பன்.
“ஆஹா, மகனே, அதான் உன் முகம் இவ்வளவு பிரகாசமா இருக்கா, சரி உன் காதல் கதையை சொல்லு” என்றான் சுரேஷ்.
அடைக்கப்பனும், கல்யாணத்தில் அன்று நடந்த நிகழ்ச்சியை முழுவதும் கூறினான்.

சுரேஷும், “அடைக்கப்பா நீ அவ கிட்டே உன் காதலை சொல்லியிருக்கனும்” என்றான்.
அதற்கு அடைக்கப்பனும், “அன்னைக்கு தான் அவளை முதல் தடவையா பார்த்தேன், அதுக்குள்ள நான் உங்களை காதலிக்கிறேன்னு சொன்னா, நல்லாவா இருக்கும்” என்றான்.

“அடைக்கப்பா உனக்கு புரியலை, நீ எதை வேனாலும் மூடி மறைக்கலாம், ஆனால் காதலை மட்டும் நமக்குள்ளேயே வச்சுக்க கூடாது. உடனே வெளிப் படுத்திடனும். சொல்லாத காதல் என்னைக்குமே வெற்றி அடைஞ்சது இல்லை. சரி நீ, இப்ப என்ன பண்ண போறே?” என்றான் சுரேஷ்.
“நான், இப்ப நேரா, நம்ம பிராஜெக்ட் மேனேஜர் கிட்ட போயி, சக்தி சுகர்ஸ் பிராஜெக்டுக்கு, படமாத்தூருக்கு நான் போறேன்னு சொல்லப் போறேன்” என்றான் அடைக்கப்பன்.
பிறகு, அடைக்கப்பன் நேரா பிராஜெக்ட் மேனேஜரோட கேபினுக்கு சென்றான்.
“வாய்யா அடைக்கப்பா! என்ன, இப்ப உன் கல்யாணத்துக்கு லீவு கேக்க போறியா” என்று கேட்டார் அந்த மேனேஜர்.
“என்ன சார் நீங்க, என் கல்யானத்துக்கு எல்லாம் இன்னும் நாள் இருக்கு. நான் வந்ததே, அந்த சக்தி சுகர்ஸ் பிராஜெக்டுக்கு நான் போறேன்னு சொல்றதுக்கு தான்” என்றான் அடைக்கப்பன்.
“ஆச்சிரியமா இருக்கு. போன மாசம் கேட்டபோது, யார் சார் அந்த காட்டுல எல்லாம் போயி இருப்பாங்கன்னு சொன்னே. இப்ப என்னடான்னா போறேன்னு சொல்ற?” என்றார் அவர்.
“இல்ல சார், யோசிச்சுப் பார்த்தேன், சிட்டி வாழ்க்கையிலிருந்து ஒரு மாற்றம் இருக்கும்னு தோனிச்சு. அது போக, அந்த ஊர் எங்க சொந்த ஊருக்கு பக்கத்துல இருக்கு. அதனால, அடிக்கடி சொந்த ஊருக்கும் போகலாம். அதான் சார், வேற ஒண்ணும் இல்லை” என்று அடைக்கப்பன் பம்மினான்.
“என்னையா, இப்ப வந்து சொல்ற. நீ லீவுல இருக்கும் போது தான், சேகரையும், பூங்குழலியையும் சம்மதிக்க வச்சு, அடுத்த மாசம் அங்க அனுப்புறதுக்கான ஏற்பாடுகளை பண்ணிக்கிட்டு இருக்கேன்” என்றார் அந்த மேனேஜர்.
அப்படியா! சரி சார்” என்று சொல்லி வெளியே வந்து தன் இருக்கைக்கு போயி அமர்ந்தான் அடைக்கப்பன்.
 
ஒரு வேலையையும் செய்யாமல், ஜானகியை எப்படி பார்ப்பது என்று யோசிக்க ஆரம்பித்து விட்டான். மதியம் வரைக்கும் இதையே வேலையா செய்துக் கொண்டிருந்தவனுக்கு, அவளைப் பார்ப்பதற்கும், அந்த ஊரில் போய் வேலை பார்ப்பதற்கும் ஒரு யோசனையை அவன் மூளை கடுப்பிடித்தது. அண்ட் யோசனை வந்த பிறகு தான் அவன் முகத்தில் ஒரு தெளிவு பிறந்தது.
 
[தொடரும்]                                                         பகுதி - 4

No comments:

Post a Comment