Friday, November 23, 2012

காதல் கீதம் - 5

பகுதி - 4

அடைக்கப்பன் ஜானகியின் வீட்டில் நன்றாக சாப்பிட்டு விட்டு அவளின் தந்தையிடமும், தாயிடமும் சொல்லிக் கொண்டு கிளம்ப எத்தனித்தான். ஆனால் அவன் மனதோ, ஜானகியை பார்க்காமல் வர மாட்டேன் என்று சண்டித்தனம் பண்ணியது. எப்படி ஜானகியை பார்த்து விட்டு கிளம்புவது என்று அவன் மூளையும் சாப்பிட்ட சாப்பாட்டுக்கு சுறு சுறுப்பாக யோசிக்க் ஆரம்பித்தது. அப்பொழுது தான் அவனுக்கு, ஜானகியின் அறைக்குள் அவள் அப்பத்தாள் சென்றது நியாபகம் வந்தது. உடனே அவள் தந்தையிடம் அப்பத்தாவிடம் சொல்லிக் கொண்டு வருகிறேன் என்று கூறி, அந்த அறைக்குள் சென்று, அப்பத்தாவிடம், ஜானகியிடமும் போய் வருகிறேன் என்று கூறினான். ஜானகியும் சரிங்க என்று கூறி தலை அசைத்தாள். ரொம்ப நாள் கழித்து, ஜானகியை பார்த்த உடன், அடைக்கப்பனுக்குள் ஒரு புதிய உற்சாகம் ஊற்றெடுத்தது.

ஒரு நாள், அடைக்கப்பன் வேலை பார்த்துக் கொண்டிருக்கும் போது, ஜானகியின் அண்ணன் சிதம்பரம் அங்கு வந்தான்.

சிதம்பரம்,”என்ன அடைக்கப்பன் எப்ப படமாத்தூருக்கு வந்தீங்க” என்று கேட்டான்.

அடைக்கப்பனும், “நான் வந்து இரண்டு வாரம் ஆச்சு, நீங்க தான் ஏதோ ட்ரைனிங்குக்கு போயிருந்தீங்களாமே” என்றான்.

“ஆமாம் அடைக்கப்பன், ட்ரைனிங் முடிச்சு நேற்று தான் வந்தேன். அதான் உங்களை பார்த்துட்டு வரலாம்னு வந்தேன். எப்படி இருக்கு எங்க ஊரு” என்று கேட்டான் சிதம்பரம்.

(மனதுக்குள் “உன்னோட தங்கச்சி மட்டும் இல்லன்னா, எவன் இந்த காட்டுக்குள்ள வருவான் என்று நினைத்துக் கொண்டு). “ரொம்ப நல்லா இருக்கு அதுவும் ஃபேக்டரிகுள்ள இருக்கிற காலனிக்கு போயிட்டா, அது ஒரு தனி உலகமா இருக்கு. எனக்கு இது ஒரு வித்தியாசமான அனுபவமா இருக்குது” என்று கூறினான் அடைக்கப்பன்.

“மெட்ராஸ்ல இருக்கிறவங்களுக்கு இந்த ஊர் பிடிக்கவே பிடிக்காது. பரவாயில்லையே, உங்களுக்கு பிடிச்சிருக்கு ஆச்சிரியமா இருக்கு. சரி, அடிக்கடி வீட்டுக்கு வாங்க” என்று கூறிவிட்டு சென்றான் சிதம்பரம்.

சிதம்பரம் சென்ற பிறகு, “அடைக்கப்பா, உனக்கு போன், மெட்ராஸ் ஆபிஸ்லேருந்து சுரேஷ் பேசுறான்” என்றாள் பூங்குழலி.

“சொல்லு சுரேஷ் எப்படி இருக்கே?”

“நான் நல்லா இருக்கேன். ஆமா உன் ஆளை பார்த்து பேசுனியா?”

“அவளை அவள் வீட்டில் போய் பார்த்துட்டு வந்தேன். ஆனால் பேசலை”.

“இப்படியே, அவ கிட்ட உன் காதலை சொல்லாம இருந்த, அவளை நீ மறந்துட வேண்டியது தான். அவளுக்கு காலேஜ் திறக்கிறதுக்கு முன்னாடி சொல்லிடு. அப்புறம் அவள் காலேஜ் போயிட்டா, உன்னால சொல்ல முடியாது”.

“நீ வேற பயமுறுத்தாதே, எப்படியாவது அவள் காலேஜ் போறதுக்கு முன்னாடி சொல்லிடுறேன்”.

“அவ கிட்ட  உன் காதலை சொன்ன உடனே, நீ எனக்கு சொல்லணும் என்ன. சரி நான் வச்சுடுறேன்”.

அடைக்கப்பன் போனை வைக்கும் போது, பூங்குழலி அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

பூங்குழலி, “அடைக்கப்பா இங்கே என்ன நடக்குது. யாரு காலேஜ் போறதுக்கு முன்னாடி, என்ன சொல்லப் போற”, என்கிட்ட சொல்லலாம்னா சொல்லு என்றாள்.

அடைக்கப்பனோ, “நீ யாரிடமும் சொல்லாதே என்று சொல்லி, தான் ஜானகியை காதலிக்கும் விஷயத்தை சொன்னான்”.

பூங்குழலியும், “அதானே பார்த்தேன், “சோழியன் குடுமி சும்மா ஆடுமா” சேகர் வராம நீ வரும்போதே நினைச்சேன், இப்படி ஏதாவது இருக்கும்னு. அதனலாதான், இப்ப நீ பொண்ணுங்க கிட்ட எல்லாம் சரியா பேசுறது இல்லையா. எப்படியோ நல்லா இருந்தா சரி. ஆமா, எப்ப உன் ஆளை காட்டப் போறே”  என்றாள்.

அடைக்கப்பனும், “நேரம் வரும்போது காட்டுறேன்” என்றான்.

ஒரு நாள் அடைக்கப்பன் இரவு 2 மணி வரை வேலை பார்த்து விட்டு, தன் அறைக்கு சென்று படுத்தான். அவன் தங்கி இருக்கும் அந்த காலனியானது ஃபேக்டரிக்கு பின் புறத்தில் கட்டப்பட்டிருந்தது. அங்கு தான் தொழிலாளிகளுக்கும்,அதிகாரிகளுக்கும் வீடு இருக்கிறது. திருமணமாகாத இளைஞர்கள் dormitoryயில் தங்கிக் கொள்வார்கள். அடைக்கப்பன் மாதிரி வெளியூரிலிருந்து வருபவர்கள் விருந்தினர் மாளிகையில் தங்கிக் கொள்வார்கள். அடைக்கப்பனும், பூங்குழலியும் விருந்தினர் மாளிகையில் தனித் தனி அறையில் தங்கி இருந்தனர். ஜானகியின் வீடு, அந்த விருந்தினர் மாளிகைக்கு பின்னாடி தான் உள்ளது. ஜானகியின் வீட்டில் இருப்பவர்கள், வெளியே போகும்போது, விருந்தினர் மாளிகையை கடந்து தான் செல்ல வேண்டும். இரவு 2 மணிக்கு வந்து படுத்ததால், காலை லேட்டாக 10 மணிக்கு எழுந்து, விருந்தினர் மாளிகையின் வாசலில் நின்றுக் கொண்டு பல் விளக்கிக் கொண்டிருந்தான். அந்த நேரம் பார்த்து தான், ஜானகியும் அவள் தாயும் அந்த வழியே வந்தார்கள்.

ஜானகியின் தாயார் அவனைப் பார்த்து, “என்ன தம்பி உடம்புக்கு முடியலையா, வேலைக்கு போகாம இருக்கீங்க” என்று கேட்டார்.

அடைக்கப்பனோ, “அது எல்லாம் ஒன்றும் இல்லை, இதோ இப்பக் கிளம்பி விடுவேன்” என்று கூறினான்.

அந்த அம்மாளும், “சரி தம்பி” என்று கூறிவிட்டு அவனைத் தாண்டி நடக்க ஆரம்பித்தார்கள்.

ஜானகியும், 10 மணிக்கு அவன் பல் விளக்கும் கோலத்தைப் பார்த்து சிரித்து விட்டு சென்றாள்.

அடைக்கப்பனுக்கோ, ஜானகியைப் பார்த்தது ஒரு பக்கம் சந்தோஷமாகவும் இருந்தது. ஆனாலும் 10மணிக்கு, அவர்கள் வரும்போது பல் விளக்கிக் கொண்டிருந்தது, சற்று சங்கடமாகவும் இருந்தது. ஏன் இவ்வளவு லேட்டாக எழுந்தோம் என்று சொல்லாமல் போய் விட்டோமே என்று தன்னையே நொந்துக் கொண்டான். அவனுக்கு ஜானகி தன்னைப் பார்த்து ஏளனமாக சிரித்தாளா, இல்லை தன்னைப் பார்த்த சந்தோசத்தில் சிரித்தாளா என்று  புரியவில்லை. சரி, எப்படி நினைச்சிருந்தாலும் பரவாயில்லை. நம்மளைப் பார்த்து சிரித்து விட்டாள், அது போதும் என்று எண்ணிக் கொண்டு, அவசர, அவசரமா ஒரு காக்காக் குளியலைப் போட்டு, மெஸ்ல போய் அரக்க பறக்க சாப்பிட்டு ஆபிஸ் போனான். ஆனால், அவனால் ஒழுங்காக வேலை பார்க்க முடியலை. ஜானகியின் நினைப்பாகவே இருந்தான். அதனால் வேலையை தப்பு தப்பாக செய்துக் கொண்டிருந்தான். கஸ்டமர் ரெகொர்டை தப்பாக அப்டேட் செய்து விட்டான். எதேச்சியாக அதனைப் பார்த்த, கம்ப்யூட்டர் டிபார்ட்மெண்ட் மேனேஜர்,

“என்ன அடைக்கப்பா, என்ன இப்படி தப்பா அப்டேட் பண்ணிட்டீங்க” என்றார்.

உடனே சுதாரித்த அடைக்கப்பன், “சாரி ஸார், நேற்று ராத்திரி வேலை முடிச்சு போறதுக்கு 2 மணியாச்சு, காலைல இருந்து ஒரே தலைவலியாவும், மயக்கமாகவும் இருக்கு” என்றான்.

அந்த மேனேஜர், “முதல்ல போய் நல்லா ரெஸ்ட் எடுத்துவிட்டு நாளைக்கு வாங்க” என்றார்.

அடைக்கப்பனும் இது தான் சாக்கு என்று , தன் அறைக்கு திரும்பி, கட்டிலில் படுத்துக் கொண்டு, அன்று காலையில் நடந்த நிகழ்ச்சியை அசை போட ஆரம்பித்தான். மீண்டும் ஜானகியை நினைக்க ஆரம்பித்தவுடன், அவன் மனதுக்குள் ஒரு ஹைக்கூ கவிதை உதித்தது.

     “உன் வாய் சிரித்ததில் உன் பற்கள்,

     என் கண்களை கூசச் செய்தது.

     உன் முகம் மலர்ந்ததில் உன் கண்கள்,

     என் இதயத்தை நொறுங்கச் செய்தது”.

 சில நாட்கள் சென்றது, அடைக்கப்பனால், ஜானகியை பார்க்கத்தான் முடிந்ததே தவிர, அவளுடன் பேச முடியவில்லை. ஜானகிக்கு கல்லூரி திறக்கின்ற நாளும் நெருங்க ஆரம்பித்தது. ஒரு முறை சிவகங்கைக்கு அடைக்கப்பனும், பூங்குழலியும் மற்ற சில நண்பர்களும் படம் பார்க்க சென்ற போது, ஜானகியும் அவள் குடும்பமும் படம் பார்க்க வந்திருந்தார்கள். அப்போது பூங்குழலிக்கு ஜானகியை காட்டினான். பூங்குழலியும், “நீ நல்ல பெண்ணைத்தான் தேர்வு செய்திருக்கிறாய், சீக்கிரம் உன்னுடைய காதலை சொல்லு, உனக்கு கூச்சமா இருந்தால்  நான் தூது செல்லட்டுமா” என்று கேட்டாள்.

அடைக்கப்பனும், “எதற்கு வேண்டுமானாலும் தூது இருக்கலாம், ஆனால் காதலுக்கு மட்டும் தூது இருக்க கூடாது, நான் எப்படியாவது அவளிடம் என் காதலை சொல்லி விடுகிறேன்” என்று கூறினான்.   

ஒரு நாள், அடைக்கப்பன் மும்முரமாக ப்ரோக்ராம் எழுதிக் கொண்டிருக்கும் போது, வெளியே போயிருந்த பூங்குழலி, வேக வேகமாக அடைக்கப்பனிடம் சென்று,

“அடைக்கப்பா, சீக்கிரம் வெளியே வா” என்றாள்.

“நான் இந்த ப்ரோக்ராம்ல, முக்கியமான கால்குலேஷன் எழுதிக்கிட்டு இருக்கேன், இப்ப என்னால வர முடியாது” என்றான்.

“ஐயோ அடைக்கப்பா, தலை போற காரியம், சீக்கிரம் வா” என்று விடாப்பிடியாக அவனை வெளியே வரவைத்தாள்.

அடைக்கப்பனும், பூங்குழலியோட ஃபேக்டரிக்கு வெளியே வந்து பார்த்த போது, ஜானகியும், அவள் தந்தையும் பக்கத்திலிருக்கும் பஸ் ஸ்டாப்பில் நின்றுக் கொண்டிருந்தார்கள். ஜானகியை காலேஜுக்கு வழி அனுப்புவதற்காக அவள் தந்தை நின்றுக் கொண்டிருந்தார்.

பூங்குழலியும், “அடைக்கப்பா, அவள் காலேஜுக்காக தஞ்சாவூர் போகப் போறாள். இது தான் சரியான சந்தர்பம், நீயும் அவளோட போய் உன் காதலை சொல்லிவிடு. சிவகங்கைல வேண்டாம். வேற எங்கையாவது பஸ் மாறுவதற்காக நிக்கும் போது பேசு” என்று கூறினாள்.

அடைக்கப்பனுக்கும், பூங்குழலி சொல்வதில் அர்த்தம் இருப்பதாக தோன்றியது. இப்ப விட்டா, அப்புறம் மறுபடியும் அவள் விடுமுறைக்கு வரும் போது தான் காதலை சொல்ல முடியும். அதனால இப்பவே சொல்லிடலாம் என்று எண்ணினான். அதற்கு ஏற்றார் போல, சேல்ஸ் டிபார்ட்மெண்டில் வேலை பார்க்கும் அவன் நண்பன் ஆபிஸ் வேலையாக சிவகங்கை போவதற்கு பைக்குடன் ஃபேக்டரியிலிருந்து வெளியே வந்தான்.

“பூங்குழலி, நீ மேனேஜர்கிட்ட அவசரமா நான் காரைக்குடி வரைக்கும் போறேன் மதியம் வந்து விடுகிறேன் என்று சொல்லிவிடு” என்று சொல்லி தன் நண்பனின் பைக்கில் ஏறிக் கொண்டு சிவகங்கை பஸ் ஸ்டாண்டுக்கு சென்றான்.

அடைக்கப்பன், ஜானகிக்காக சிவகங்கை பஸ் ஸ்டாண்டில் காத்துக் கொண்டிருந்தான்.

ஜானகியும் படமாத்தூரிலிருந்து சிவகங்கை வந்து சேர்ந்தவுடன், இவனைப் பார்த்து விட்டாள். ஆனால் பார்க்காத மாதிரி, காரைக்குடிக்கு போகும் பஸ்ஸில் ஏறினாள். அடைக்கப்பனும் அந்த பஸ்ஸிலேயே ஏறி, ஜானகி உட்கார்ந்திருக்கும் சீட்டிற்கு இடதுபுறமாக இருக்கும் சீட்டில் அமர்ந்துக் கொண்டான். பஸ்ஸும் காரைக்குடி வந்து சேர்ந்தது. ஜானகியும், அடைக்கப்பனை ஒரு பார்வை பார்த்து விட்டு பின் இறங்கி, தஞ்சாவூர் செல்லும் பஸ்ஸில் ஏறப் போனாள். அவள் பின்னாடியே சென்றான் அடைக்கப்பன்.    
[தொடரும்]                                                            பகுதி - 6

Wednesday, November 21, 2012

வந்துட்டான்யா... வந்துட்டான்!!!

பொதுவா எல்லோருக்கும் நகைச்சுவை படங்கள் ரொம்ப பிடிக்கும். இரண்டரை மணி நேரம் ஒரு படத்தை பார்த்தோமா, வயிறு குலுங்க சிரிச்சோமான்னு தான் எல்லோரும் நினைப்போம். சில படங்கள்ல படத்தை ஒட்டியே நகைச்சுவை காட்சிகள் வரும். சில படங்கள்ல, நகைச்சுவை காட்சிகள்னு தனியா வரும். நகைச்சுவை காட்சிகள் எப்படி வந்தாலும், நாம முழுமையா அந்த நகைச்சுவை காட்சிகளை ரசிப்போம். கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன், டி.ஆர். ராமச்சந்திரன்,  'டணால்”தங்கவேலு, சுருளிராஜன், நாகேஷ், சந்திரபாபு, லூஸ் மோகன்னு இப்படி நிறைய பேர் அந்தக் காலத்துல நகைச்சுவை நடிகர்களாக, நம்மை சிரிக்க வைத்திருக்கிறார்கள். எனக்கு ரொம்ப பிடிச்ச பழைய நகைச்சுவை படங்கள் எதுவென்றால், தங்கவேலு நடித்த “கல்யாணப் பரிசு”, நாகேஷ் நடிச்ச “சோப்பு சீப்பு கண்ணாடி”,”பட்டணத்தில் பூதம்”, டி. ஆர். ராமச்சந்திரன் மற்றும் தங்கவேலு நடிச்ச “அடுத்த வீட்டுப் பெண்”, அப்புறம் “காசேதான் கடவுளடா”, இப்படி நிறைய படங்களை சொல்லலாம். அதற்கு பிறகு, கவுண்டமணி, செந்தில் நடித்த கால கட்டத்தில், அவர்கள் இருவரும் நடித்திருக்கிறார்கள் என்றாலே, அந்த படம் ஒரு குப்பை படமாக இருந்தா கூட பார்த்திருக்கிறேன். கவுண்டமணியிடம் உதை வாங்கியே பிரபுலமானவர் செந்தில். அவர்கள் இருவரின் நகைச்சுவையும் ரசிக்கும்படியாக இருக்கும். இன்னமும் “கரகாட்டக்காரன்” படத்தின் நகைச்சுவை காட்சிகளை மறக்க முடியாது. பிறகு வந்தவர் தான் வடிவேலு. தன்னுடைய உடல் மொழியாலும், இரட்டை அர்த்தம் கொண்ட  வசனங்கள் இல்லாததுனாலும், மிகவும் பிரபலமடைந்தார். அதிலும் குழந்தைகள் பட்டாளத்தையே தன்னுடைய ரசிகர்களாக வைத்திருந்தார். சிறு குழந்தைகள் எல்லாம் எந்த அளவுக்கு அவருடைய ரசிகர்கள் என்றால், இங்கு நாங்கள் ஒரு இரண்டு வருடத்திற்கு முன் ஒரு நண்பரின் வீட்டிற்கு இரவு போனோம். இரவு உணவு சாப்பிட்டுவிட்டு, பேசிக்கொண்டு இருந்தோம். அப்போது ஒன்பது மணியாகி விட்டபடியால், நண்பர் தன் நான்கு வயது குழந்தையிடம், “உனக்கு இன்னமும் தூக்கம் வரலையா” என்று கேட்டார் . அதற்கு அந்த வாண்டு, “தூக்கம் வருது...... ஆனா வரலை” அப்படின்னு வடிவேலு பாணியில பதிலை சொல்லிவிட்டு, விளையாட போய்விட்டது. அந்த குழந்தைக்கு வெறும் நான்கு வயது தான். இந்த குழந்தைன்னு இல்லை, இங்கு நான் பார்க்கின்ற நிறைய குழந்தைகள் தங்களுக்கு பொழுது போகவில்லையென்றால், வடிவேலுவின் நகைச்சுவை காட்சிகளை டி‌வி‌டியில் போட்டு பார்க்கிறார்கள். இப்படி எல்லா தரப்பு மக்களையும் ரசிகர்களாக கொண்டிருந்த ஒரு நல்ல கலைஞன், நுணலும் தன் வாயால் கெடும்” என்பது போல, தன் வாயால் கெட்டு, தமிழ் சினிமா உலகில் ஒரு பெரிய இடைவெளியை ஏற்படுத்திக் கொண்டார். சரி, இவர் இல்லை என்றால் என்ன, இன்னமும் நிறைய நகைச்சுவை நடிகர்கள் இருக்கிறார்களே என்று பார்த்தால், யாராலும் இவருடைய இடத்தை நிரப்ப முடியவில்லை என்பதே உண்மை. அதற்கு முக்கிய காரணம், மற்ற நகைச்சுவை நடிகர்கள் நகைச்சுவையில், முகம் சுழிக்க வைக்க கூடிய இரட்டை அர்த்த வசனங்களும், அருவருக்கத்தக்க உடல் அசைவுகளையும் கையாளுவது தான். என்னதான் மற்ற நகைச்சுவை நடிகர்கள் நடித்திருந்தாலும், வடிவேலுவின் நகைச்சுவை காட்சிகள் இல்லாமல், அந்த படங்களை பெரிதாக ரசிக்க முடியவில்லை.
இப்போது தான், வடிவேலு வனவாசத்தை விட்டு வெளியே வந்து பத்திரிக்கைகளுக்கு எல்லாம் பேட்டி கொடுத்திருக்கிறார். அதாவது, விரைவில் நான்கு படங்களில் தான் நடிக்கப்போவதாக கூறியிருக்கிறார். வடிவேலுவின் ரசிகர்கள், இவருடைய படங்களுக்குக்காக காத்துக் கொண்டிருப்பார்கள். பார்ப்போம், நீண்ட இடைவெளிக்கு பின் திரும்பி வருகின்ற வடிவேலு எந்த அளவுக்கு நம்மையெல்லாம் சிரிக்க வைக்க போகிறார் என்று!.

Sunday, November 18, 2012

காதல் கீதம் - 4

ஜனாகியை பார்ப்பதற்கும், அந்த ஊரில் போயி வேலை செய்வதற்கும் ஒரு  யோசனையை அடைக்கப்பனின் மூளை கண்டுப் பிடித்தது. அந்த யோசனை வந்த பிறகு தான் அவன் முகத்தில் ஒரு தெளிவு பிறந்தது.
அவன் நேராக சேகரிடம் போயி, சேகர், உன்னிடம் கொஞ்சம் தனியா பேசனும், கொஞ்சம் கேண்டீனுக்கு வரியா என்று கூப்பிட்டான்.
சேகரும், என்ன அடைக்கப்பா, அப்படி என்ன என்னிடம் தனியா பேசனும் என்று கேட்டுக் கொண்டே அடைக்கப்பனோடு கேண்டீனுக்கு சென்றான்.
அடைக்கப்பனும், தன் மனதை கொள்ளையடித்த அந்த தேவதையைப் பற்றிக் கூறினான்.
சேகரும் கற்பூரத்தைப் போல கப்பென்று விஷயத்தை புரிந்து கொண்டான். அடைக்கப்பா, உன் ஆளை பார்பதற்கு நீ அந்த ஊருக்குப் போயி வேலை பார்க்கணும் அது தானே” என்று கேட்டான்.
“சரியா சொன்ன சேகர், நீ மட்டும் அந்த ஊருக்கு போகலைன்னு சொன்னா, அந்த முசுடு மேனேஜர் என்னைய அந்த ஊருக்கு அனுப்புவான். அப்புறம் நான் என் ஆளிடம் காதலை வளர்த்துப்பேன். இந்த ஒரு உதவியை மட்டும் நீ செஞ்சா, நான் உன்னைய என்னைக்கும் மறக்கவே மாட்டேன்” என்றான் அடைக்கப்பன்.
“நான், என்ன காரணத்தை சொல்லி போகாம இருக்க முடியும்” என்று கேட்டான் சேகர்.
“யோசிச்சு, ஒரு நல்ல காரணத்தை கண்டுப்பிடிக்கணும். நானும் யோசிக்கிறேன். ஒரு ரெண்டு மூணு நாள் கழிச்சு மேனேஜர் கிட்ட சொல்லு, அப்பத்தான் யாருக்கும் சந்தேகம் வராது” என்று கூறினான் அடைக்கப்பன்.
“என்னமோ அடைக்கப்பா, நான் இப்படி பொய் சொல்றதுனால, உன்னோட காதல் வளரும்னா, அதுல எனக்கு ரொம்ப சந்தோஷம் தான்” என்றான் சேகர்.
பிறகு இருவரும் தங்கள் இருக்கைக்கு வந்து அமர்ந்தார்கள். அடைக்கப்பனோ, மேனேஜரிடம், சேகரை என்ன காரணத்தை சொல்ல சொல்லலாம் என்று யோசிக்க ஆரம்பித்து விட்டான்.
அன்று வீட்டிற்கு போன பிறகும், அடைக்கப்பன் தன் மண்டையை போட்டு உடைத்து கடைசியில் ஒரு உருப்படியான காரணத்தை கண்டுப் பிடித்தான். உடனே சேகருக்கு போன் போட்டு, “சேகர், நீ ரெண்டு நாள் sick leave போடு. அப்புறம் மூணாவது நாள் மேனேஜரிடம் போய், உனக்கு “dust allergy” இருக்கு, அதனால டாக்டர் உன்னைய சுகர் ஃபேக்டரில எல்லாம் போய் வேலை செய்யக் கூடாதுன்னு சொல்லி இருக்கிறார்னு சொல்லி, அதனால  அந்த ஊருக்கு போகலைன்னு சொல்லிடு” என்று கூறினான்.  
உடனே சேகரும், “அடைக்கப்பா உனக்கே, இது நல்ல இருக்கா, நீ உன் ஆளை பார்க்குறதுக்கு நான் நோயாளியா ஆகனுமான்னு” கேட்டான்.
அடைக்கப்பனும், “சாரிடா சேகர், எனக்கு வேற வழி தெரியல. இது தான் ஒரு நல்ல யோசனையா இருக்குது. அதுவும் இல்லாம யாருக்கும் ஒரு சந்தேகமும் வராது” என்றான்.
அடைக்கப்பன் சொன்ன யோசனை படியே, சேகரும் மேனேஜரிடம் தான் அந்த சக்தி சுகர்ஸ் ஃபேக்டரி இருக்கும் ஊருக்கு போக வில்லை என்று கூறினான்.
மேனேஜரும் வேறு வழியில்லாமல் சேகர் சொன்ன காரணத்தை கருத்தில் கொண்டு, அடைக்கப்பனுக்கு அந்த ஊருக்கு செல்லும் வாய்ப்பை வழங்கினார்.
மேனேஜர், அடைக்கப்பனை கூப்பிட்டு, “அடைக்கப்பா, சேகருக்கு ஏதோ “dust allergy”யாம் அதனால அந்த ஊருக்கு போக முடியாதுன்னு சொல்லிட்டான். நீ அந்த ஊருக்கு போவேன்ற தைரியத்துல தான் நான் சேகர் கிட்ட,dust allergy”கான மருத்துவ சான்றிதழ் எல்லாம் கேக்கலை. நீ அடுத்த மாசம் அந்த ஊருக்கு போறியா? எல்லா ஏற்பாடுகளையும் செய்ய ஆரம்பிக்கட்டுமா” என்று கேட்டார்.
அடைக்கப்பனும், “நான் போறேன் சார்” என்றான்.
பிறகு வீட்டுக்கு வந்து தன் பெற்றோரிடம் தான் சக்தி சுகர்ஸ் ஃபேக்டரி இருக்கும் படமாத்தூர் ஊருக்கு போகப் போவதாக சொன்னான்.
அவனுடைய அப்பாவும், “அந்த படமாத்தூர் எங்கே இருக்கிறது?” என்று கேட்டார்.
“சிவகங்கைக்கு பக்கத்தில் இருக்கிறது” என்று கூறினான் அடைக்கப்பன்.
உடனே அதற்கு அவர், “நம்ம ஊருக்கு பக்கத்துல தானா அந்த ஊரு இருக்குது. அப்ப, இனிமே நம்ம பங்காளிங்க வீட்டுல நடக்குற எல்லா நல்லது கெட்டதுக்ககும் நீ போயிட்டு வந்துடு” என்றார்.
அவனுடைய அம்மாவோ, “அந்த ஊருல தானே நம்ம மணி பொண்டாட்டியோட மாமாவோ, யாரோ இருக்காங்க இல்ல” என்று கேட்டாள்.
அடைக்கப்பனும், “யாரும்மா இருக்காங்க? எனக்கு தெரியாதே” என்று சொன்னான்.
“அதாண்டா, மணி கலியானத்துல, சித்தி சொன்னா இல்ல, மணி  பொண்டாட்டி உண்ணாவோட மாமா இருக்காங்கன்னு, நீ மறந்திருப்ப” என்று தெளிவு படுத்தினாள்.  
அடைக்கப்பனோ, “ஓ! அப்படியா” என்று ஆச்சிரியப்பட்ட மாதிரி நடித்தான்.
“சரி, அங்க தங்குறதுக்கு,சாப்பிடுறதுக்கு எல்லாம் உங்க கம்பெனியே வழி செய்துக் கொடுத்துடுமா?” என்று கேட்டார் அவனுடைய தந்தை.
“சக்தி சுகர்ஸ்லேயே எங்களுக்கு தங்குறதுக்கு ரூம் கொடுத்துடுவாங்க . அப்புறம் அங்கேயே சாப்பிடுறதுக்கு மெஸ் இருக்கு” என்று கூறினான் அடைக்கப்பன்.
“அப்ப உனக்கு சாப்பாட்டுக்கு பிரச்சனை இல்லை. எதுக்கும் நான் மணியிடம் நீ படமாத்துருக்கு போறதை சொல்லி, அவன் பொண்டாட்டியோட மாமாக்கிட்ட சொல்ல சொல்றேன்” என்றாள் அவன் தாய்.
“சரிம்மா அப்படியே செய்யுங்க” என்றான் அடைக்கப்பன்.
சில நாள் கழித்து அலுவலகத்தில் அடைக்கப்பன் மும்முரமாக எதையோ எழுதிக் கொண்டிருந்தான். அப்போது அவனுடைய நண்பன் சுரேஷ் அங்கு வந்து அவன் எழுதியதை படித்துப் பார்த்தான். அது ஒருக் காதல் கவிதை.
     “காதல் என்றால்
     என்னவென்று தெரியாமல்
     வாழ்ந்து வந்தேன்         
     என்னவளை சந்திக்கும் வரை”.
 
“என்ன அடைக்கப்பா, இன்னும் காதலை சொல்லக் கூட இல்ல, அதுக்குள்ள கவிதை எல்லாம் எழுத ஆரம்பிச்சுட்ட” என்றான் சுரேஷ்.
“ஆமாம் சுரேஷ், இப்ப எல்லாம் கவிதை தன்னால வருது. அதுவும் இல்லாம, காதல் பாடல்கள், காதல் படங்கள் தான் ரொம்ப பிடிக்குது” என்றான் அடைக்கப்பன்.
“நீ, அந்த ஊருக்கு போனதும் எப்படியாவது, ஜானகியிடம் உன் காதலை சீக்கிரம் சொல்லிடு” என்றான்.
“சரி, சுரேஷ் நான் சொல்றதுக்கு முயற்சி செய்றேன்” என்று சொன்னான் அடைக்கப்பன்.
ஒரு வழியாக அடைக்கப்பனும், பூங்குழலியும் படமாத்தூருக்கு வந்து சேர்ந்தார்கள்.
அடைக்கப்பன் முதல் நாள் அன்று கம்ப்யூட்டர் டிபார்ட்மெண்டில் தன்  வேலையை ஆரம்பித்த பிறகு, நேராக ப்ரொடக்ஷன் டிபார்ட்மெண்டுக்கு சென்றான். அங்கு தான் ஜானகியின் தந்தை நாராயணன், ப்ரொடக்ஷன் மேனேஜர் ஆக வேலை பார்க்கிறார். அவரும் இவனைப் பார்த்தவுடன், எழுந்து வந்து இவனை வரவேற்று பேசி அனுப்பினார்.
அடைக்கப்பன் எதிர்பார்த்ததோ, தன்னை வீட்டுக்கு கூப்பிடுவார், அப்படியே ஜானகியையும் பார்க்கலாம் என்று நினைத்திருந்தான். ஆனால் அவர் வீட்டுக்கு கூப்பிடாதது வருத்தத்தை அளித்தது. மேலும் அவன் பழகிய அவளுடைய அண்ணன் சிதம்பரமும் ஊரில் இல்லாதது அவனுக்கு பெரிய ஏமாற்றமாக இருந்தது.
இப்படியே ஒரு வாரம் ஓடியது. அடைக்கப்பனும் தினமும் ரூமில் தூங்கி எழுந்து, மெஸ்ஸில் சாப்பிட்டு வேலை பார்த்து வந்தான். ஜானகியை மட்டும் அவனால் பார்க்க முடியவில்லை. இத்தனைக்கும், ஜானகிக்கு கல்லூரி விடுமுறை என்பதால், அவளும் சேலத்திலிருந்து, வீட்டுக்கு வந்து இருந்தாள்.
ஒரு நாள் அவன் வேலை பார்த்துக் கொண்டிருந்த பொழுது, ஜானகியின் தந்தை நாராயணன் அங்கு வந்தார்.
“அடைக்கப்பன் எப்படி இருக்கீங்க? இப்ப என் கூட மதிய சாப்பாட்டுக்கு வீட்டுக்கு வாங்க” என்றார்.
அடைக்கப்பனுக்கோ, முதலில் ஒன்றும் புரிய வில்லை. பிறகு “ஒரு பத்து நிமிஷம் இருங்க, வந்து விடுகிறேன்” என்று கூறி, பார்த்துக் கொண்டிருந்த வேலையை சீக்கிரமாக முடித்து விட்டு அவருடன் ஃபேக்டரிக்குள்  இருக்கும் அவருடைய வீட்டுக்கு போனான்.
அங்கு, ஜானகியின் அம்மாவும், அவள் அப்பத்தாவும் (அப்பாவின் அம்மாவும்) அவனை உபசரித்து சாப்பிட அழைத்துப் போனார்கள். அதற்குள் அடைக்கப்னின் கண்களோ, பக்கத்து அறையில் இருக்கும் ஜானகியை சந்தித்து விட்டன. இதற்கிடையில் அவளின் அப்பத்தாவும் ஜானகி இருந்த அறைக்குள் சென்று விட்டார்கள்.
அவனும் வித விதமாக சமைத்து வைத்திருந்த சமையலை நன்றாக மூக்குப் பிடிக்க ஒரு பிடி பிடித்து விட்டு தான் எழுந்தான். பிறகு அவளின் தந்தையிடமும், தாயிடமும் சொல்லிக் கொண்டு கிளம்ப எத்தனித்தான். ஆனால் அவன் மனதோ, ஜானகியை பார்க்காமல் வர மாட்டேன் என்று சண்டித்தனம் பண்ணியது. எப்படி ஜானகியை பார்த்து விட்டு கிளம்புவது என்று அவன் மூளையும் சாப்பிட்ட சாப்பாட்டுக்கு சுறு சுறுப்பாக யோசிக்க் ஆரம்பித்தது.
[தொடரும்]                                                                                      பகுதி- 5

Tuesday, November 13, 2012

தனிமையில் தீபாவளி


உங்கள் எல்லோருக்கும் என்னுடைய இனிய தீபாவளி வாழ்த்துக்கள். கிட்டதட்ட பதினைந்து வருடங்களுக்கு பிறகு இந்த வருடம் தான் குடும்பத்தை விட்டுட்டு, தனியாக தீபாவளியை கொண்டாட நேர்கிறது. உம்,தனியாக என்று சொல்லக்கூடாது. ஏனென்றால், இன்று இரவு நண்பர் வீட்டுக்கு சென்று அவர் குடும்பத்தாருடன் தீபாவளியை கொண்டாட இருக்கிறேன். என்னதான் வெளிநாடுகளில் தீபாவளியை கொண்டாடினாலும், இந்தியாவில் கொண்டாடுகிற மாதிரி வரவே வராது. இந்தியாவில், விடியற்காலையில் நாலரை,ஐந்து மணிக்கெல்லாம் எழுந்து, தலைக்கு எண்ணை தேய்த்து குளித்து, புதுத் துணியை போட்டுக்கிட்டு, ரோட்ல போய் வெடி வெடித்து, எட்டரை மணிக்கு, வீட்டுக்குள்ளேருந்து, அம்மா “டேய், சாப்பிட்டு போய் வெடிடான்னு” ஒரு நாலைந்து முறை கூப்பிட்டபிறகு, வேக வேகமா சாப்பிட்டுட்டு வந்து, நண்பர்களோட இருக்கிற எல்லா வெடிகளையும் வெடிச்சு, இதுக்கு நடுவுல கோவிலுக்கு போயிட்டு வந்து, உம்... அதெல்லாம் ஒரு காலம். இங்க வெறும் கம்பி மத்தாப்பை மட்டும் வீட்டின் பின்புறம் பத்த வைத்து, அதை இரண்டு கைகளாலும் ஒரு சுத்து சுத்தி, ஐய்யா! நாங்களும் தீபாவளியை கொண்டாடிட்டோமேன்னு சொல்லிக்கொள்வோம். இதுல அந்த கம்பிமத்தாப்பை கைல பிடிச்சுக்கிட்டு புகைப்படம் எல்லாம் வேற எடுத்துக்கிறது உண்டு. வார இறுதி நாட்களிலும் நண்பர்களின் பங்களிப்போடு இந்த அல்ப கொண்டாட்டம் தொடரும்.

இந்த சனிக்கிழமை அதாவது, 17ஆம் தேதி, சிட்னியில் உள்ள தமிழ் கலை மற்றும் பண்பாட்டுக் கழகம்” சார்பில் “இனிய தீபாவளி சந்திப்பு” என்ற ஒரு நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது. இதில் இந்தியாவிலிருந்து, பேராசிரியர். முனைவர். இரா.மோகன் மற்றும் அவரது துணைவியார் முனைவர்.நிர்மலா மோகன் கலந்துக்கொண்டு ஒரு பட்டிமன்றத்தை வழங்கவிருக்கிறார்கள். உள்ளூர் கலைஞர்களின், கலை நிகழ்ச்சிகளும் நடைபெற இருக்கிறது. இதில், அடியேன் எழுதி, நடிக்கும்  “தலை தீபாவளி” என்ற நகைச்சுவை குறுநாடகமும் அரங்கேறவுள்ளது. மாமனார் தலையை எப்படி மொட்டை அடிக்கலாம்னு, ஆபிஸுக்கு லீவு  போட்டு வீட்டில் உட்கார்ந்து யோசிச்சு எழுதிய நாடகம் அது (தலை தீபாவளி கொண்டாடி ரொம்ப வருஷம் ஆனதுனால, இதெல்லாம் மறந்துபோச்சு). அதே நாடகம், இங்கு வானொலியிலும் அன்று இரவு ஒளிபரப்பாக உள்ளது.

இந்த வருட தீபாவளியை குடும்பத்தை விட்டுட்டு கொண்டாடினாலும், அது ஒரு மறக்க முடியாத தீபாவளியாக அமையும் என்று நம்புகிறேன். 

Sunday, November 11, 2012

காதல் கீதம் - 3

பகுதி -2
உங்களுக்கு இந்த சுடிதாரை காட்டிலும், தாவணி தான் நல்லா இருக்கு ஜானகி என்றான் அடைக்கப்பன்.
 
உடனே, அவளுக்கு பொறை போயி, தண்ணி எல்லாம் மேல சிந்தி, அவனை ஆச்சிரியமாக பார்த்தாள்.
அடைக்கப்பன், அட ஆமாங்க. உண்மையை தாங்க சொல்றேன் என்று சொல்லி, பந்தி பரிமாறும் இடத்தை விட்டு சென்று விட்டான்.
 
ஜானகிக்கோ, ஒன்றும் புரியவில்லை. இவனுக்கு எப்படி நம்ம பேர் தெரிந்து இருக்கும் என்று குழம்பினாள்.
பக்கத்தில் இருக்கும் அத்தை பெண் வள்ளியோ, இன்னும் ஒரு படி மேல போயி, ஏய், எப்ப நீ அவன் கூட பேசுன என்று கேட்டாள்.
 
ஐயையோ, நான் அவன் கூட எல்லாம் பேசல” என்றாள் ஜானகி.
“பின்ன எப்படி அவன் உன் பேரை சொல்றான்” என்று கேட்டாள் வள்ளி.
“அதான்டி, எனக்கும் ஒண்ணும் புரியல” என்று பதிலளித்தாள் ஜானகி.
உடனே வள்ளி, ஒரு பெருமூச்சு விட்டு, “உம்! நானும் பார்க்குறேன், காலையிலிருந்து நீ அவனை பாக்குறதும், அவன் உன்னை பாக்குறதுமா என்னமோ நடக்குது உங்களுக்குள்ள, என்கிட்ட மறைக்கிற” என்றாள்.
“நீ வேற, எதையாவது புதுசா கிளப்பி விடாதே, வா, போயி கையை கழுவிட்டு கீழே போகலாம்” என்றாள் ஜானகி.
 
இருவரும் கீழே போகையில், வள்ளி ஜானகியின் கையைப் பிடித்து நிறுத்தி, அவளை ஒரு முறை நன்றாக ஏற இறங்க பார்த்தாள்.
“அவன் சரியாத்தான் சொல்லியிருக்கான் ஜானகி, உனக்கு இந்த சுடிதாரைக் காட்டிலும் தாவணி தான் ரொம்ப நல்லா இருக்கு” என்றாள் வள்ளி.
 
“ஐயோ, அவன் தான் என்னமோ உளறுறான்னா, நீ வேற” என்று கோபப்பட்டாள் ஜானகி.
 
வள்ளியோ, “அவன் உளறும் போது, நான் உன் முகத்தை தான பார்த்தேன், அப்பப்பா!, என்னம்மா உன் முகம் சூரியனை கண்ட தாமரையை போல மலர்ந்துச்சு. ஆனா, இப்ப அதையே நான் சொல்லும்போது ஏன் கோபப்படுற” என்றாள்.
 
“உனக்கு அவன் உன்னைய பாக்கலன்னு பொறாமை, அதான் என்னைய ஒட்டுற” என்றாள் ஜானகி.
“எனக்கு ஒண்ணும் பொறாமை எல்லாம் இல்லை. சரி, அவன் பேரு தெரியுமா உனக்கு” என்று கேட்டாள் வள்ளி.
 
“எனக்கு அவனை பற்றி ஒண்ணுமே தெரியாது” என்றாள் ஜானகி.
“அடி மக்கு ஜானகி, ஒருத்தன் நம்மளை பார்க்கிறான்னு தெரிஞ்ச உடனே, அவனை பத்தி நாம எல்லாம் தெரிஞ்சுக்கணும்” என்றாள் வள்ளி.
 
“எனக்கும் அவனைப் பத்தி தெரிஞ்சுக்கறதுக்கு ஆசையா தான் இருக்கு. ஆனால் எப்படி தெரிஞ்சுக்குறதுன்னு தான் தெரியலை. பேசாம நம்ம கல்யாண பொண்ணு உண்ணா கிட்டயே கேட்டுடலாமா”? என்றாள்.
“இந்த விஷயத்தை மட்டும் அவ கிட்ட கேட்டுடாதே. உடனே அவ, நீ அவனை விரும்புறேன்னு, ஒரு குட்டி கலகத்தையே உண்டு பண்ணிடுவா. அதனால கொஞ்சம் பொறு ஜானகி, யாருக்கும் சந்தேகம் வராத படி தான் அவனைப் பத்தி விசாரிக்கணும்” என்றாள் வள்ளி.

இப்படி இருவரும் பேசிக் கொண்டு இருந்தாலும்,ஜானகியின் கண்களோ, அடைக்கப்பன் எங்கே இருக்கிறான் என்று தேடியது.
அவர்கள் மாடிப் படியிலிருந்து கீழே இறங்கி வருவதை பார்த்த அடைக்கப்பனுக்கு, இந்த கூட்டத்துல ஜானகி நம்மளை தேடுறாளான்னு பார்க்க ஆசை வந்துடுச்சு. அதனால அங்க இருந்த ஒரு தூணுக்கு பின்னாடி போயி நின்னுக்கிட்டு, ஜானகியையே பார்க்க ஆரம்பிச்சான். இந்த  நேரத்துல தான் ஜானகியும், அடைக்கப்பன் எங்கே இருக்கிறான்னு கண்களால் தேட, அடைக்கப்பனோ இறக்கை இல்லாமா வானத்துல பறக்க ஆரம்பிச்சுட்டான். இவுங்க ரெண்டு பேரும் ஆடும் இந்த கண்ணாம்பூச்சி ஆட்டத்தை, அவனை விட இரண்டு வயது சிறியவனான சித்தி மகன் ரமேஷ் பார்த்துவிட்டு, அடைக்கப்பனின் அருகில் வந்தான்.
“அடைக்கப்பா! இங்க என்ன நடக்குது?” என்றான் ரமேஷ்.
பயந்து போயி திரும்பி பார்த்த அடைக்கப்பன், “ஒண்ணும் இல்லையே” என்றான்.
 
 
“நீ தூணுக்கு பின்னாடி மறைஞ்சு நிக்கிறதும், அந்த பொண்ணு உன்னைய தேடுறதும், அவ உன்னைய தேடுறான்னு தெரிஞ்சவுடனே, நீ கொஞ்சம் தள்ளி வந்து அவளுக்கு தரிசனம் கொடுக்கிறதும், உன்னையப் பார்த்த உடனே அவள் தலையை குனிஞ்சுக்கிறதும், இதெல்லாம் நான் பார்த்துக்கிட்டு தான் இருக்கேன்” என்றான் ரமேஷ்.

“ரமேஷ் நான் உன்கிட்ட சொல்லாம வேற யார்கிட்ட சொல்லபோறேன். என்னமோ தெரியலை, அந்த பொண்ணை பார்த்துக்கிட்டே இருக்கணும் போல இருக்கு” என்றான்.

“ஓ! அப்படி போகுதா விவகாரம். சரி, அந்த பொண்ணைப் பத்தின விவரம் ஏதாவது தெரியுமா, அவ பாடு உங்க கோவிலாகவே இருக்கப் போறா?” என்று கேட்டான் ரமேஷ்.

“அவ வேற கோவில். அதுவுமில்லாம அவளைப் பத்தி முழுக்க தெரியும்” என்று பதில் அளித்தான் அடைக்கப்பன்.

“அடப்பாவி, காலையில தான் வந்த, அதுக்குள்ள அவளைப் பத்தி எல்லாம் தெரிஞ்சுக்கிட்டியா? ஆமா அவக் கிட்ட மட்டும் என்ன அப்படி ஒரு ஈர்ப்பு” என்றான் ரமேஷ்.
“தெரியல ரமேஷ், எத்தனையோ பொண்ணுங்களோட பேசி இருக்கேன், ஆனா, இவளை பார்த்த உடனே, மனசு என்னமோ பண்ணுது” என்றான் அடைக்கப்பன்.

“இதுக்கு பேரு தான் காதல் அடைக்கப்பா! இத பாரு, அவ இன்னும் கொஞ்ச நேரம் தான் இருப்பா, அதனால உன் காதலை சீக்கிரம் அவ கிட்ட சொல்ற வழியைப் பாரு” என்றான்.
“டக்குன்னு எப்படிடா போயி சொல்றது? அவ என்னைய பத்தி என்ன நினைச்சுப்பா? அதோட இல்லாம, அவளும் என்னைய விரும்புறாளான்னு வேற தெரியலை?” என்றான் அடைக்கப்பன்.

“அவ விரும்புறது, நூறு பர்சண்ட் உண்மை. இப்பக் கூட பாரு, அவ உன்னையே தான் பார்க்கிறா” என்றான் ரமேஷ்.
உடனே, அடைக்கப்பன் ஜானகியைப் பார்த்தான். அதுவரைக்கும் அவனையே பார்த்துக் கொண்டிருந்த ஜானகி, அடைக்கப்பன் பார்த்தவுடன், தலையை குனிந்து கொண்டாள்.

“நீ பாட்டுக்குன்னு அவளையே  பார்த்துக்கிட்டு இருக்காதே! அடைக்கப்பா, வேற யாராவது பார்த்துட்டா வம்பா போயிடும்னு” என்று எச்சரித்தான் ரமேஷ்.
“அவளை பார்க்காம இருக்க முடியலை ரமேஷ். அதுவும் அவள் இந்த கூட்டத்துல இருக்கும் போது, கண்ணு அவளை தான் பார்ப்பேன்னு அடம் பிடிக்குது” என்றான்.

“உன் கண்ணுல கொள்ளிக் கட்டைய வக்க, கண்ணு அவளை தான் பார்ப்பேன்னு அடம் பிடிக்குதாமுல்லே, நீ இப்படியே பார்த்துக் கிட்டு இரு, யாராவது உங்களை பார்க்கப் போறாங்க, அப்ப தெரியும்” என்றான் ரமேஷ்.
“ரமேஷ், நீ இந்த விஷயத்தை, யாருக்கிடேயும் சொல்லிடாதே” என்றான் அடைக்கப்பன்.

ரமேஷ் அதுக்கு, “கவலைப்படாதே, நான் யாருக்கிட்டேயும் சொல்ல மாட்டேன். பேசாம பெரியம்மா கிட்ட சொல்லி, அந்த பொண்ணையே கல்யாணம் பண்ணி வைக்க சொல்லிடு. நம்ம ஆயா வீட்டு சைடுல, உனக்கு தான் அடுத்து கல்யாணம் ஆகணும். அதனால ஒண்ணும் பிரச்சனை இருக்காது” என்றான்.
“நீ வேற அவ இன்னும் படிப்பே முடிக்கலை, அதுக்குள்ள அவுங்க வீட்டுல எப்படி கல்யாணம் பண்ணிக் கொடுப்பாங்க” என்றான் அடைக்கப்பன்.
“அப்ப நீ பொறுமையா இரு”, என்று கூறிவிட்டு அந்த இடத்தை விட்டு நகர்ந்தான் ரமேஷ்.
பெண்கள் அமர்ந்திருக்கும் இடத்தில் ஜானகி வள்ளியிடம், “எப்படியாவது அவன் பேரை தெரிஞ்சுக்க வழி சொல்லுடி” என்றாள்.
வள்ளியோ, யோசித்து “காலைல அவனை உங்க அண்ணன் தான் சாப்பிட கூட்டிக்கிட்டு வந்து, ரெண்டு பேருமா தானே சாப்பிட்டாங்க. உங்க அண்ணனுக்கு அவனைப் பத்தி தெரிஞ்சிருக்கும். அதனால, உங்க அண்ணன் கிட்டையே கேட்டுடேன்” என்றாள்.
“ஐயையோ, அண்ணன் கிட்டேயா, எப்படி கேக்கிறது” என்று பதறினாள் ஜானகி.
“சரி, வேற வழியை யோசிப்போம்” என்றாள் வள்ளி.
ஒரு வழியா பொண்ணு வீட்டுக்காரங்க எல்லோரும் கிளம்புறதுக்கு தயாரானாங்க. அப்போது வள்ளி ஜானகியிடம்,
“வரும்போது தான், அவன் வாங்கன்னு சொன்னதுக்கு, ஒண்ணுமே சொல்லாம வந்துட்ட. அதனால போகும் போதாவது, அவன் கிட்ட வாயைத் திறந்து போயிட்டு வறேன்னு சொல்லிட்டு வாடி”. என்றாள்.
பொண்ணு விட்டுக்காரர்கள் ஒவ்வொருவரா மாப்பிள்ளை விட்டுக்காரர்களிடம் சொல்லிக் கொண்டு கிளம்பினார்கள். அப்போது ஜானகியும், வாசலில் நிற்கும் அடைக்கப்பனிடம், மெதுவாக “போயிட்டு வரேங்க” என்று சொல்லிவிட்டு, அவனைப் பார்த்து ஒரு புன்னகையை சிந்திவிட்டு போனாள்.
அடைக்கப்பனுக்கு, தான் பார்ப்பது கனவான்னு சந்தேகம் வந்துடுச்சு. தன்னையே ஒரு முறை கிள்ளிப் பார்த்துக்கிட்டான். அவள் போயிட்டு வறேன்னு சொன்னதுக்கு, நாம ஒண்ணுமே சொல்லலையேன்னு, மனசுக்குள் தன்னையே திட்டிக்கிட்டு வாசற்படி இறங்கி தெருவுக்கு வந்தான்.
ஜானகியும், வள்ளியும், மாப்பிள்ளையின் வீட்டுக்கு அருகில் நின்றுக் கொண்டிருந்த தாங்கள் வந்த பஸ்ஸில் ஏறினார்கள். அப்போது ஜானகி, அவன் எப்படியும் நம்மளை பார்க்கிறதுக்கு வெளியே வருவான், அதனால நாம ஜன்னல் ஓரமா உட்கார்ந்துக்கனும்னு முடிவு பண்ணினாள். ஆனால் ஒரு ஜன்னலோர இருக்கையும் காலியாக இல்லை. அவளுடைய அதிர்ஷ்டம், மூன்று பேர் அமரக் கூடிய இருக்கையில், ஜன்னலோரத்தில், ஒரு சிறுவன் மட்டும் உட்கார்ந்து இருந்தான். ஜானகி அவனிடம் போயி,
“டேய், செல்லம் இல்ல, அக்காவுக்கு உன் இடத்தை கொடுடா, வண்டி கிளம்புனவுடனே, நீ உட்கார்ந்துக்கோ” என்று கெஞ்சினாள்.
அந்த சிறுவனும், என்ன நினைத்தானோ, ஜானகிக்கு ஜன்னலோர இருக்கையை விட்டுக் கொடுத்து, “அக்கா, வண்டி ஸ்டார்ட் ஆன உடனே எனக்கு கொடுத்துடனும்ன்னு” கட்டளை போட்டான்.
ஜானகியும், அந்த இருக்கையில் உட்கார்ந்து, வெளியே அடைக்கப்பன் தெரிகிறானா என்று பார்த்துக் கொண்டிருந்தாள்.
வெளியே வந்த அடைக்கப்பனின் கண்கள், அந்த பேருந்துக்குள், அவள் எங்கு உட்கார்ந்திருக்கிறாள் என்று சல்லடை போட்டு தேடி கடைசியில் கண்டும் பிடித்தது.
இருவர் கண்களும் ஒன்றோடொன்று கலந்தன. கண்கள் மூலமாக, போயி வருகிறேன் என்று அவளும், போய்வா என்று இவனும் பேசிக் கொண்டனர். சிறிது நேரத்திற்கெல்லாம், அந்த பேருந்து கிளம்பிற்று. அடைக்கப்பனோ, அந்த பேருந்து சென்ற திசையே பார்த்துக் கொண்டு நின்றான். ஜானகியோ, தெருவில் யாரும் இல்லை என்பதை தெரிந்துக் கொண்டு, ஜன்னலிலுருந்து, தலையை வெளியே நீட்டி, அவனையே பார்த்துக் கொண்டு சென்றாள்.
சிறிது நேரம் அங்கேயே நின்றுக் கொண்டு ஒரு திரைப்பட பாடலை முணுமுணுக்க ஆரம்பித்தான்.

     “போகுதே போகுதே, என் பைங்கிளி வானிலே,
     நானும் சேர்ந்து போகவும் சிறகு இல்லையே
      உறவும் இல்லையே

அப்போது அவனை தேடிக் கொண்டு ரமேஷ் அங்கு வந்தான்.
“என்ன, அடைக்கப்பா, உன் ஆளை வழி அனுப்பிட்டியா?” என்று கேட்டான்.
“ஆமாண்டா, அவ போயிட்டா. திரும்பி எப்பப் பார்க்க போறேனோ?” என்றான் அடைக்கப்பன்.
“ஆமா!, என்னமோ பாட்டு பாடிக்கிட்டு இருந்தே” என்று கேட்டான் ரமேஷ்.
“தெரியலைடா, இன்னைக்கு எல்லாம், அந்த அந்த எடத்துக்கு தகுந்த மாதிரி, சினிமா பாட்டு தான் நியாபகத்துக்கு வருது” என்று சொன்னான் அடைக்கப்பன்.
“முதல்ல சினிமா பாட்டு வரும், அப்புறம் பாரு நீயே பாட்டு எழுதுவே. சரி, சரி வா உள்ள போகலாம்” என்று அடைக்கப்பனை கூட்டிக் கொண்டு உள்ளே போனான் ரமேஷ்.   
அடைக்கப்பன் மறு நாள் இரவு எல்லோரிடமும் சொல்லிக் கொண்டு சென்னைக்கு கிளம்பினான். ஆபிஸ் சென்று முதல் வேலையா தன் நண்பன் சுரேஷிடம் தனக்கு ஏற்பட்ட அனுபவத்தை கூற ஆரம்பித்தான்.
“சுரேஷ், நீ அன்னைக்கு சொன்னது அப்படியே பலிச்சிடுச்சு” என்றான்.
“நான் என்ன சொன்னேன்?” என்று கேட்டான் சுரேஷ்.
“அதான்டா, ஒரு பெண்ணைப் பார்த்தவுடன் உனக்கு காதல் வரும்னு சொன்னியே, அது தான்” என்று கூறினான் அடைக்கப்பன்.
“ஆஹா, மகனே, அதான் உன் முகம் இவ்வளவு பிரகாசமா இருக்கா, சரி உன் காதல் கதையை சொல்லு” என்றான் சுரேஷ்.
அடைக்கப்பனும், கல்யாணத்தில் அன்று நடந்த நிகழ்ச்சியை முழுவதும் கூறினான்.

சுரேஷும், “அடைக்கப்பா நீ அவ கிட்டே உன் காதலை சொல்லியிருக்கனும்” என்றான்.
அதற்கு அடைக்கப்பனும், “அன்னைக்கு தான் அவளை முதல் தடவையா பார்த்தேன், அதுக்குள்ள நான் உங்களை காதலிக்கிறேன்னு சொன்னா, நல்லாவா இருக்கும்” என்றான்.

“அடைக்கப்பா உனக்கு புரியலை, நீ எதை வேனாலும் மூடி மறைக்கலாம், ஆனால் காதலை மட்டும் நமக்குள்ளேயே வச்சுக்க கூடாது. உடனே வெளிப் படுத்திடனும். சொல்லாத காதல் என்னைக்குமே வெற்றி அடைஞ்சது இல்லை. சரி நீ, இப்ப என்ன பண்ண போறே?” என்றான் சுரேஷ்.
“நான், இப்ப நேரா, நம்ம பிராஜெக்ட் மேனேஜர் கிட்ட போயி, சக்தி சுகர்ஸ் பிராஜெக்டுக்கு, படமாத்தூருக்கு நான் போறேன்னு சொல்லப் போறேன்” என்றான் அடைக்கப்பன்.
பிறகு, அடைக்கப்பன் நேரா பிராஜெக்ட் மேனேஜரோட கேபினுக்கு சென்றான்.
“வாய்யா அடைக்கப்பா! என்ன, இப்ப உன் கல்யாணத்துக்கு லீவு கேக்க போறியா” என்று கேட்டார் அந்த மேனேஜர்.
“என்ன சார் நீங்க, என் கல்யானத்துக்கு எல்லாம் இன்னும் நாள் இருக்கு. நான் வந்ததே, அந்த சக்தி சுகர்ஸ் பிராஜெக்டுக்கு நான் போறேன்னு சொல்றதுக்கு தான்” என்றான் அடைக்கப்பன்.
“ஆச்சிரியமா இருக்கு. போன மாசம் கேட்டபோது, யார் சார் அந்த காட்டுல எல்லாம் போயி இருப்பாங்கன்னு சொன்னே. இப்ப என்னடான்னா போறேன்னு சொல்ற?” என்றார் அவர்.
“இல்ல சார், யோசிச்சுப் பார்த்தேன், சிட்டி வாழ்க்கையிலிருந்து ஒரு மாற்றம் இருக்கும்னு தோனிச்சு. அது போக, அந்த ஊர் எங்க சொந்த ஊருக்கு பக்கத்துல இருக்கு. அதனால, அடிக்கடி சொந்த ஊருக்கும் போகலாம். அதான் சார், வேற ஒண்ணும் இல்லை” என்று அடைக்கப்பன் பம்மினான்.
“என்னையா, இப்ப வந்து சொல்ற. நீ லீவுல இருக்கும் போது தான், சேகரையும், பூங்குழலியையும் சம்மதிக்க வச்சு, அடுத்த மாசம் அங்க அனுப்புறதுக்கான ஏற்பாடுகளை பண்ணிக்கிட்டு இருக்கேன்” என்றார் அந்த மேனேஜர்.
அப்படியா! சரி சார்” என்று சொல்லி வெளியே வந்து தன் இருக்கைக்கு போயி அமர்ந்தான் அடைக்கப்பன்.
 
ஒரு வேலையையும் செய்யாமல், ஜானகியை எப்படி பார்ப்பது என்று யோசிக்க ஆரம்பித்து விட்டான். மதியம் வரைக்கும் இதையே வேலையா செய்துக் கொண்டிருந்தவனுக்கு, அவளைப் பார்ப்பதற்கும், அந்த ஊரில் போய் வேலை பார்ப்பதற்கும் ஒரு யோசனையை அவன் மூளை கடுப்பிடித்தது. அண்ட் யோசனை வந்த பிறகு தான் அவன் முகத்தில் ஒரு தெளிவு பிறந்தது.
 
[தொடரும்]                                                         பகுதி - 4

Saturday, November 10, 2012

ஐ! எங்க டீச்சரும் பெயில் ஆயிட்டாங்களே!!!!!!!!

இந்த தலைப்பு ஒரு வேடிக்கையான தலைப்பு இல்லீங்க. உண்மையான தலைப்பு தான். பேப்பர்ல எப்பவுமே 10ஆம் வகுப்பு,12ஆம் வகுப்பு மாணவர்களின் பரீட்சை முடிவுகளை பார்த்து பழக்கப்பட்ட கண்களுக்கு, ஆசிரியர்களின் தகுதித் தேர்வு முடிவுகள் ரொம்பவும் வித்தியாசமாக தெரிந்தது. மாணவர்கள் ஒழுங்காக படிக்காமல் பெயில் ஆவார்கள். அது தெரிந்தது தான். ஆனால் நன்றாக படித்து பட்டம் வாங்கி, மாணவர்களுக்கு முன் உதாரணமாக இருக்க வேண்டிய ஆசிரியர்களே, தங்களுக்கான தகுதித் தேர்வில் மிக  மிக மோசமான முறையில், அதாவது இலட்சக் கணக்கில் தேர்வு எழுதி, வெறும் ஆயிரக் கணக்கில் தேர்ச்சி அடைந்திருக்கிறார்கள். இதனால் தான் நம் கண்களுக்கு அது ஒரு வித்தியாசமான செய்தியாக தெரிந்தது.
எனக்கு தெரிஞ்சு, நிறைய பேர் பி.எட் முடித்து, வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து விட்டு அரசு பள்ளிகளில் தான் வேலைக்கு சேர்வேன் என்று காத்திருந்திருக்கிறார்கள். அவர்களுக்கு எல்லாம் சீனியாரிட்டி அடிப்படையில் வேலை கிடைத்திருக்கிறது. ஆனால் எப்போது கிடைத்தது என்பது தான் இதில் முக்கியம். பி.எட். முடித்து ஒரு பத்து பதினைந்து வருடம் கழித்து தான் அவர்களுக்கு அந்த வேலை கிடைத்தது.   இந்த இடைவெளியில் அவர்கள் தாங்கள் படித்ததை எல்லாம் மறந்திருப்பார்கள். பிறகு இவர்கள் மாணவர்களுக்கு சொல்லிக்கொடுத்தால், அந்த மாணவர்கள் எப்படி முன்னேறுவார்கள். இதனை கவனித்த மத்திய அரசு, அரசுப் பணியில் உள்ள ஆசிரியர்கள் மற்றும் புதிதாகப் பணியில் சேரும் ஆசிரியர்கள் எல்லோரும் ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வில் கண்டிப்பாக தேர்ச்சி பெற வேண்டும் என்று ஒரு உத்தரவைப் பிறப்பித்தது.  அதன்படி, 2010 அக்டோபர் மாதத்துக்குப் பிறகு அரசுப் பள்ளியில் சேர்ந்த அனைத்து ஆசிரியர்களும் தகுதித்தேர்வு எழுத வேண்டும். அவர்கள் ஆறு வருடங்களுக்குள் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். அதுபோல், புதிதாக நியமிக்கப்படும் ஆசிரியர்கள் கண்டிப்பாகத் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது.  சில மாதங்களுக்கு முன் நடந்த ஆசிரியர் தகுதித் தேர்வில், கிட்டதட்ட ஆறு லட்சத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் தேர்வு எழுதினார்கள். அதில் எவ்வளவு பேர் தேர்ச்சி பெற்று இருப்பார்கள் என்று நினைக்கிறீர்கள்? கண்டிப்பாக உங்களால் யூகிக்கவே முடியாத எண்ணிக்கையில் அவர்கள் தேர்ச்சி பெற்றார்கள். இந்த தேர்வுக்கு மொத்தம் 150 மதிப்பெண்கள், அதில் 90 மதிப்பெண்கள் எடுத்தால் தேர்ச்சி என்று விதிமுறைகள் வகுக்கப்பட்டிருந்தது. அதாவது 60 விழுக்காடு பெற்றால் தான் தேர்ச்சி பெறமுடியும். கடைசியில் எத்தனை பேர் தேர்ச்சி பெற்றார்கள் என்றால், வெறும் 2500 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றார்கள். மற்றவர்களால் ஏன் தேர்ச்சி பெற முடியவில்லை என்றால், தமிழ், ஆங்கிலம், கணக்கு, அறிவியல், சமூக அறிவியல் போன்ற அனைத்துப் பாடங்களில் இருந்தும்  கேள்விகள் கேட்கப்பட்டிருக்கு, ஒரு பாடத்தை முதன்மையாக எடுத்து பட்டம் பெற்றவர்களால், மற்ற பாடங்களில் மதிப்பெண்கள் எடுப்பது சிரமம். அதோடில்லாமல், தேர்வு நேரம் ஒன்றரை மணி நேரம் தான். அது மிகவும் குறைவு. யோசித்து பதிலளிக்க அவகாசம் இல்லை. இதனால் தான் எங்களால் தேர்ச்சி பெற முடியவில்லை என்று பெயில்(!) ஆனவர்கள் கூறும் காரணங்கள்.
நாங்கள் படிக்கும் காலத்தில், “மார்ச் போனா, இருக்கவே இருக்கு அக்டோபர்” என்று சொல்வதுண்டு. அதே மாதிரி இந்த ஆசிரியர் தேர்வில் பெயில் ஆனவர்களுக்கும், அக்டோபர் மாதத்தில் மறு தேர்வு நடந்தது. சரி, ஏற்கனவே ஒரு முறை தேர்வு எழுதின அனுபவம்  இருக்கு, அதனால, இந்த முறை கண்டிப்பா நிறைய ஆசிரியர்கள் தேர்ச்சி அடைவார்கள்னு பார்த்தா(!!!!!!), அது எப்படி நீங்களா ஒரு தப்பான எண்ணத்தை மனசுல வளர்த்துக்கலாம், நாங்க பசங்களை விட மோசாமாச்சேன்னு திரும்பவும் நிருபிச்சிருக்காங்க. இந்த முறையும் கிட்டதட்ட ஏழு லட்சம் பேர் தேர்வு எழுதினார்கள். அதில் போன தடவையை காட்டிலும் கொஞ்சம் முன்னேற்றம் அடைந்து, கிட்டதட்ட 17000 பேர் தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள். இந்த தடவையும் பெயில் ஆனவர்கள் கூறும் காரணம் என்னவென்றால், 23 கேள்விகள் பாடத்திட்டத்தில் இல்லாம, வெளியிலிருந்து கேட்கப்பட்ட கேள்விகள், அதனால் தான் எங்களால் தேர்ச்சி பெற முடியவில்லை அன்று சொல்லியிருக்கிறார்கள்.
ஆஹா, இப்படியே போனா, மாணவர்களின் நிலமை(?), அதை விட்டுத் தள்ளுங்கள், முதல்ல இந்த ஆசிரியர்களின் நிலமை (???????). பொதுவா எந்த ஒரு நிறுவனமே, தங்கள் நிறுவனத்திற்கு தகுதி வாய்ந்த  ஊழியர்களை தான் எடுக்க வேண்டும் என்று பல அடுக்குகள் கொண்ட நேர்முகக்காணலை நடத்தி, ஊழியர்களை தேர்வு செய்வார்கள். ஆனால் இந்தியாவின் வருங்கால தூண்களை உருவாக்கும் கல்வித்துறை நிறுவனமோ, இப்போது தான் அந்த மாதிரியான ஒரு தகுதித் தேர்வை நடத்த ஆரம்பித்திருக்கிறது. இந்த தேர்வுகள் எந்த ஒரு சூழ்நிலையிலும் நிறுத்தாமல் தொடர வேண்டும். அதே மாதிரி, ஆசிரியர்களும், தங்களால் மட்டும் தான் வருங்கால இந்தியாவை இன்னும் நல்ல நிலமைக்கு கொண்டு செல்ல முடியும் என்ற ஒரு நம்பிக்கையோடு செயல்பட்டார்களேயானால், கண்டிப்பாக அவர்களுக்கு இந்த தேர்வு எல்லாம் ஒரு பொருட்டே கிடையாது.