Wednesday, October 17, 2012

தாய்மை – 1


நமக்கு குழந்தை பிறந்துடுச்சு, அதுவும் ஆண் குழந்தை. பாருங்க அப்படியே உங்களை மாதிரியே இருக்கான் என்று தூக்கத்தில் பிதற்றிக் கொண்டிருந்தாள் தேவசேனா.

அருகில் படுத்திருந்த அவள் கணவன் முருகன், அவளை எழுப்பி, “என்னம்மா கனவா” என்று கேட்டான்.

அவளும், “வெறும் கனவு தானா, நான் கூட நமக்கு உண்மையிலேயே குழந்தை பிறந்துடுச்சுன்னு நினைச்சுட்டேன்” என்றாள்.

“இப்ப மணி நாலு. விடியற்காலைல காண்கிற கனவு பலிச்சுடும்னு சொல்லுவாங்க. கவலைப்படாதே, சீக்கிரம் நமக்கு குழந்தை பிறக்கும்” என்றான் முருகன்.

“நமக்கு கல்யாணம் ஆகி ஆறு வருஷம் முடிஞ்சுடுச்சு, ஒரு தடவை கூட எனக்கு நாள் தள்ளிப் போகலை. எனக்கு தெரிஞ்சு எத்தனை பேருக்கு தெரியுமா கல்யாணம் ஆன அடுத்த மாசமே தள்ளிப் போயி, முத வருஷ கல்யாண நாளையே, குழந்தையோடு கொண்டாடி இருக்காங்க. எனக்கு மட்டும் ஏங்க இப்படி! அந்த ஆண்டவனுக்கு ஏங்க நம்ம மேல கருணையே இல்லை. நான் என்ன காரு, பங்களாவா கேக்குறேன், ஒரு குழந்தையை தானே கேக்குறேன்” என்று அவன் மார்பில் தலை சாய்த்து விசும்பினாள் தேவசேனா.

ஆதரவாக அவள் தலையை வருடிக் கொடுத்துக் கொண்டே, ஆண்டவனுக்கு தெரியும், நமக்கு எப்ப குழந்தையை கொடுக்கணும்னு. நாம தான் இங்க மதுரைல இருக்கிற கைராசி டாக்டரை பார்த்துட்டோமே,நம்ம ரெண்டு பேருக்கும் ஒண்ணும் பிரச்சனை இல்லைன்னு சொல்லிட்டாங்க. அதனால சீக்கிரம் நமக்கு குழந்தை பிறக்கும். நீ எதையும் நினைக்காம தூங்கு” என்றான் முருகன்.

காலையில், தேவசேனா எழுந்து தலை குளித்து, காப்பி போட்டுக்கொண்டிருக்கும்போது,

“என்னடி! இந்த மாசமும் தலை முழுகிட்டியா” என்று கேட்டபடி அங்கு வந்தாள் மாமியார் மரகதம்.

“ஆ! ஆ! ஆமாம் அத்தை” என்று மென்று முழுங்கியபடி பதிலுரைத்தாள் தேவசேனா.

“நீ, இப்படி, ஒவ்வொரு மாசமும், தலை முழுகிக்கிட்டு இருந்தா, ஒரு நாள் நாங்க உன்னைய ஒரேடியா தலை முழுக வேண்டி வரும், இந்தா, இந்த காபியை மாமா கிட்ட கொடு” என்று கூறிவிட்டு, மற்ற வேலைகளை பார்க்க ஆரம்பித்தாள்.

மனசுக்குள் பொங்கிய துக்கத்தை அடக்கிக்கொண்டு, கண்களிலிருந்து வெளியேறத் துடிக்கும் கண்ணீரை அடக்கியபடியே, மாமனார் இருக்கும் இடத்தை நோக்கிச் சென்றாள் தேவசேனா.

வராண்டாவில் பேப்பரை மேய்ந்துக் கொண்டிருந்த வெங்கடாச்சலத்தின் காதுகளுக்குள் அந்த உரையாடல் விழுந்தது.

“இந்தாங்க மாமா காபி” என்றாள் தேவசேனா.

“என்னம்மா, இன்னைக்கும் அர்ச்சனையா?, அவளால தினமும் காலைல உன்னைய அர்ச்சனை பண்ணாம இருக்க முடியாது. இதை நினைச்சு கவலைப்படாதேம்மா” என்றார்.

“நான் ஒண்ணும் நினைச்சுக்கலை மாமா” என்றாள்.

என்ன,அங்க ஒரு பஞ்சாயத்து நடக்குது. ஏண்டி, நான் உன்னைய காபி தானே கொடுத்துட்டு வர சொன்னேன், எவ்வளவு வேலை இருக்கு, இங்கேயே நின்னுக்கிட்டு இருந்தா என்ன அர்த்தம்” என்று கேட்டபடியே அங்கு வந்தாள் மரகதம்.

“ஏன் மரகதம், அவளை ஒண்ணும் சொல்லாம இருக்க முடியாதா உன்னால” என்று கேட்டார் வெங்கடாச்சலம்.

“எனக்கு மட்டும் அவளை எதாவது சொல்லிக்கிட்டே இருக்கணும்னு ஆசையா என்ன! இந்த மாசமாவது அவளுக்கு நாள் தள்ளிப் போகும்னு ஒரு நப்பாசைல இருந்தேன். நான் கண்ணு மூடுறதுக்குள்ள ஒரு பேரப் பிள்ளைய பார்த்துடலாம்னு பார்த்தா, அதை நடக்க விடமாட்டா போலிருக்கே” என்றாள் மரகதம்.

“நீ அவ்வளவு சீக்கிரம் எல்லாம் போய் சேர மாட்ட, நம்ம வீட்டில சீக்கிரம் ஒரு குழந்தையோட சத்தம் கேக்கத்தான் போகுது. சும்மா, அவ மனசை நோகடிச்சுக்கிட்டு இருக்காதே” என்று கோபமாக சொன்னார் வெங்கடாச்சலம்.

“உக்கும், மருமகளை ஒண்ணு சொல்லிடக் கூடாதே, உடனே என்னைய அடக்கிடுவீங்களே!, இந்த வீட்டில எல்லாருக்கும் நான் புலம்புறது தான் கஷ்டமா இருக்குது என்று முனங்கியபடி சென்றாள் மரகதம்.

தேவசேனாவின் கண்ணிலிருந்து வழியும் கண்ணீரை பார்க்கிறார் வெங்கடாச்சலம்.

“முதல்ல கண்ணைத் துடைம்மா, அவளைப் பத்தி தான் உனக்கு தெரியுமில்ல. சரிம்மா, உன் புருஷன் எந்திரிச்சுட்டானா” என்று கேட்டார்.

“கண்ணைத் துடைத்துக் கொண்டே, இந்நேரம் எந்திரிச்சிருக்கணும் மாமா” என்றாள் தேவசேனா.

அப்போது அங்கு வந்து சேர்ந்த முருகனிடம், வெங்கடாச்சலம், “முருகா, இன்னைக்கு நீ போய் கடையைத் திற, நான் கடை விஷயமா திருச்சி வரைக்கும் போயிட்டு, நாளைக்கு காலைல வரேன்” என்றார்.

“சரிப்பா என்று அப்பாவிடம் கூறிவிட்டு, தேவ்ஸ், நீ போய் டிபனை ரெடி பண்ணு, நான் குளிச்சிட்டு வரேன்” என்றான் முருகன்.

“சரிங்க, நான் இட்லியை சூடா அவிச்சு எடுக்கிறேன். நீங்க அதுக்குள்ள குளிச்சிட்டு வந்துடுங்க” என்றபடி சமையலறைக்கு போனாள்.

கணவனும் மாமனாரும் சென்ற பிறகு, மதிய சமையலை முடித்து, கடைப் பையனிடம் கணவனுக்கு சாப்பாட்டை அனுப்பிவிட்டு,மாமியார் சாப்பிட்டு தூங்க போனபின் தானும் சாப்பிட்டு, டி‌வியை போட்டதில், பாட்டு சேனலில், கல்கி திரைப்படத்திலிருந்து ஒரு பாட்டு ஓடிக் கொண்டிருந்தது. தேவசேனாவோ,அதில் நடித்த கீதாவின் இடத்தில் தன்னை பொருத்திப் பார்த்து, தேம்பி தேம்பி ஆழ ஆரம்பித்தாள்.

முத்து முத்து மகளே, முகம் காணாத மகளே
மாதங்கள் பத்து மனதினில் சுமந்து
கற்பனையில் பெற்ற கண்மணியே
நான் உனக்கு கவிதையில் எழுதும் கடிதம்
எழுதுகிறேன் ஒரு கடிதம்
வானத்து மலரே வையத்து நிலவே
வாழ்கையின் பொருளே வா
மலடியின் மகளே மகள் எனும் கனவே
மடியினில் நீ வா
பாறையில் மலர்ந்த தாமரையே
இரவினில் எழுந்த சூரியனே
எழாமலே எழும் நிலா நீயே

முன்னூறு நாள் கர்ப்பத்திலே
வாராத பெண் நீயடி
எந்நாளுமே நான் பொம்மை தான்
என்றாலும் தாய்தானடி
உலாவும் வானம்பாடியாய்
பண்பாடி வாழ்க கண்ணே
புறாவைப்போல சாந்தமாய்
பண்பாடு போற்று பெண்ணே
நாளொரு மேன்மை நீ பெறுவாய்
நான் பெற்ற இன்பம் யார் பெறுவார்
பெறமலே பெரும் சுகம் நீயே

எழுதுகிறேன் ஒரு கடிதம்

அதைப் பார்த்த படியே அழுதழுது, அப்படியே தூங்கிப் போனாள்.

அன்றிரவு எட்டு மணிக்கு, முருகன் வீட்டிற்கு திரும்பியபொழுது, வீடே இருளில் மூழ்கியிருந்தது. கதவைத் திறந்து, “தேவ்ஸ்,தேவ்ஸ்”, "அம்மா, அம்மா" என்று அழைத்தபடியே வரவேற்பறையில் இருந்த ஸ்விட்சைப் போட்டான்.

அங்கே....                                           பகுதி - 2
[தொடரும்]

    

2 comments:

  1. தாய்மையை போற்றும் படி எழுதும் சிறு கதைக்கு முதற்கண் நன்றி சகோ. குருவி தலையில் பனங்காயை வைக்க முடியுமா என்ன! என்ன தான் ஆண்கள் பலசாலிகள், வீரம் நிறைந்தவர்கள், தைரிய சாலிகள் என்றாலும் பொறுமையும் சகிப்பு தன்மையும் குறைவு என்றே சொல்லலாம் அதனாலும்,பெண்கள் அதையே பாக்கியமாக கருதுவதனாலும் பெண்களுக்கே கொடுத்துள்ளார் போலும். ஹா ஹா .... இதை பெண்களை பெருமை படுத்த கூறினேனே தவிர ஆண்களை சிறுமை படுத்தவோ புண் படுத்தவோ இல்லை சரி தானே நண்பர்களை. எனக்கு தெரியும் கோபம் வருகிறது என்று இந்த நல்ல நாளில் பெருந்தன்மையாய் மன்னிச்சுடுங்க சரியா நண்பர்களே ) ஜோக்குக்கு தான் சொன்னேன் அனால் உண்மை தான் என்றே தோன்றுகிறது.

    சொற்கள் அமைதியாகவும் நிதானமாகவும் ஒன்றும் பிசிறு இல்லாமல் அமைந்துள்ளன அழகாக. முடிவை ஆவலோடு எதிர்பார்க்க தொடரும் என்று வேறு சொல்லிவிட்டீர்களா இன்னும் ஆவலாக உள்ளது . நல்ல முயற்சி வாழ்த்துக்கள் ....!

    ReplyDelete
  2. அந்த சிறுகதையை நான் ஏற்கனவே ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பே எழுதிவிட்டேன் சகோ.

    பகுதி -2 கிளிக் செய்யுங்கள்.

    ReplyDelete