Tuesday, September 11, 2012

அமெரிக்காவில் அடியேன் – 7

 
என்னடா ஒரு தமிழ் நடிகையின் உணவகத்துல போயி சாப்பிட்டாங்களான்னு ரொம்பவும் யோசிக்காதீங்க. அந்த உணவகத்தோட பேரு “சினேகா உணவகம்”. இதுக்குத்தான்(!) போன பதிவுல ஒரு சின்ன பில்டப். ஆனா இந்த உணவகத்துக்கும், நடிகை சினேகாவுக்கும் ஏதாவது தொடர்பு இருக்குமான்னா, அது எனக்கு தெரியாது. சாப்பாடும் சும்மா சொல்லக்கூடாது, சினேகா மாதிரியே ரொம்ப நல்லா இருந்துச்சு. மறு நாள் காலையில  ஒன்பது மணிக்கு அறையை காலி செஞ்சுட்டு, ஒரு வாடகை வண்டில, நாங்க மூணு பேரும் சான்பிரான்சிஸ்கோ போனோம். நல்ல காலம் அங்க முன்பதிவு செஞ்சு வச்சிருந்த ஹோட்டல்லேயும் உடனே ஒரு அறையை கொடுத்துட்டாங்க. இல்லன்னா, எல்லாப் பெட்டி, மூட்டையெல்லாம் வரவேற்பறையிலேயே வச்சிருந்திருக்கணும். அப்புறம் அங்கேருந்து மூணு பஸ் மாறி, “தங்க கதவு பாலம்” அதாங்க “Golden Gate Bridge”க்கு போனோம். 1935ஆம் ஆண்டு, திறந்த பாலமாம் அது.

 எல்லா ஊருலேயும் ஒரு பாலத்தை கட்டி, அதுக்கு ஒரு பேரை வச்சு பிரபுலமாக்கிடுறாங்க. நம்ம ஊருலேயும் பாம்பன் பாலம்னு ஒண்ணு இருக்குதுன்னு நாம சொன்னாத்தான் மத்தவுங்களுக்குத் தெரியுது. இத்தனைக்கும் பாம்பன் பாலம் 1914லேயே கட்டப்பட்ட பாலமாக்கும். இந்தியாவோட முதல் கடல் பாலம் அது தான். இப்படி பாம்பன் பாலத்துக்கு இன்னும் நிறைய சிறப்புகள் இருந்தும், நம்ம ஆளுங்க அதை பிரபுலப்படுத்தாம விட்டுட்டாங்க. எங்களுக்கு நேரம் இல்லாததுனால, அந்த பாலத்தை கொஞ்ச நேரம் வேடிக்கை மட்டும் பார்த்துட்டு, அங்கேருந்து ஒரு வாடகை வண்டியை பிடிச்சு “fisherman wharf Pier 33”க்கு வந்தோம். அங்கேயிருந்து கப்பல்ல 20 நிமிஷம் பிரயாணம் செஞ்சு “Alcatraz islandல” இருக்கிற ஒரு சிறைச்சாலைக்கு போனோம்.

நமக்கு எல்லாம் சிறைச்சாலைக்குள்ள போற கொடுப்பினையே கிடைக்காது, ஏன்னா, நாம தான் ரொம்ப நல்லவங்களாச்சே(!). அந்த அல்ப ஆசையை போக்கிக்கிறதுக்காக, வெள்ளக்காரங்க, ஒரு சிறைச்சாலையையே சுற்றுலாத்தலமா மாத்தியிருக்காங்க. நகரத்தை விட்டு, ஒரு நட்ட நடுக் கடல்ல தனித் தீவா, அந்த சிறைச்சாலையை அமைச்சிருக்காங்க. நானும் அந்த சிறைச்சாலைக்குள்ள வலது காலை எடுத்து வச்சு நடக்க ஆரம்பிச்சேன். “cell house”குள்ள போனா!, நம்ம தமிழ் சினிமாவில காட்டுற மாதிரி ஒரு பெரிய வராந்தாவோட ரெண்டு பக்கமும், கைதிங்க தங்குற அறை இருக்கு. ஒவ்வொரு அறைக்குள்ளேயும், ஒரு சின்ன கட்டில் இருக்கு, அந்த கட்டிலுக்கு அப்புறம் காலைக் கடன்கள் போறதுக்கு வசதி பண்ணி வச்சிருக்காங்க. தமிழ் சினிமாலையாவது, கைதிங்க அறையை கொஞ்சம் பெருசா காட்டுவாங்க. ஆனா, இங்க அந்த அறைக்குள்ள, ஒரு ஆள் மட்டும் தான் உள்ள இருக்க முடியும். என்னடா, இவன் எப்பப் பார்த்தாலும் தமிழ் சினேமாவையே உதாரணமா சொல்றானேன்னு நினைக்காதீங்க, ஏன்னா, எனக்கு தான் உண்மையான சிறைக்கு போன அனுபவம் இல்லையே, அதனால சினிமாவையே உதாரணம் காட்ட வேண்டியிருக்குது.
நாமளும் வேணுன்னா, அந்த அறைக்குள்ள போயி நின்னு புகைப்படம் எடுத்துக்கலாம். நண்பர் ரொம்ப பெருந்தன்மையா(?), நீங்க உள்ள போயி, கம்பிக்கு பின்னாடி நில்லுங்க, என்னோட “photography” திறமை எல்லாம் பயன்படுத்தி, உங்களை தத்ரூபமா எடுக்கிறேன்னு சொன்னாரு. ஆஹா, “இவரு போதைக்கு நாம ஊருகாவான்னு” நினைச்சுக்கிட்டு, ஐயா! சாமி, அது எல்லாம் ஒண்ணும் வேணாம்னு நழுவிட்டேன். ஆனாலும், சில பேரு அந்த அறைக்குள்ள போயி நின்னு போஸ் கொடுத்தாங்க பாருங்க, உண்மையான கைதியே தோத்துருவான் போங்க. அப்புறம் ஒரு வழியா அந்த சிறைச்சாலை சுற்றுலாவை முடிச்சு, வந்த கப்பல்லேயே திரும்பி போனோம். சான்ப்ரான்சிஸ்கோவில ஒரு “குறுக்குத் தெரு” ரொம்பவும் புகழ் பெற்ற தெருவாம். அதனால கப்பல விட்டு இறங்கி நேரா, அந்த குறுக்குத்தெருவுக்கு போகலாம்னு முடிவு பண்ணி, மறுபடியும் ஒரு வாடகை வண்டில அந்த தெருவுக்கு போனோம். இந்த குறுக்குத்தெருவை, ஆங்கிலத்துல “crooked street”ன்னு சொல்றாங்க. அதாவது இந்த தெரு தான் உலகத்துலேயே மிகவும் குறுகலான தெருவாம். இந்த தெரு எப்படி இருக்குதுன்னு பார்த்தீங்கன்னா, ரொம்ப குறுகலான தெருவுக்குள்ள, ரெண்டு பக்கமும் வீடு, அதை ஒட்டி ரெண்டு பக்கமும் நடக்கறதுக்கு படிகள், அந்த நடைபாதை படியை ஒட்டி பூங்கா மாதிரி பூச்செடிகளை நட்டுவச்சிருக்காங்க. அதுக்கப்புறம் வண்டிகள் போறதுக்கு சாலை. 
அந்த தெருவைப் பார்த்தீங்கன்னா, “ஊட்டி கொண்டை ஊசி வளைவுகள்” மாதிரி இருக்கும். இந்த தெரு 400மீட்டர் தான் நீளம் கொண்டது. ஆனா வண்டிங்களுக்கு ஒரு வழிப் பாதை தான். அதாவது மேலேருந்து கீழே இறங்க தான் முடியுமே தவிர, கீழேருந்து மேல ஏற முடியாது. அதுவும் 8கிலோமீட்டர் வேகத்துல தான் வண்டியை ஓட்டணும்,அதுவும் ரொம்ப ரொம்ப குறுகலான எட்டு வளைவுகளை கடக்கணும். இப்படி இருக்கிற ஒரு குறுகலான தெருல தான், வீட்டோட விலை ரொம்ப அதிகமாக இருக்குமாம்.(என்ன கொடுமை சார் இது!!!)    400 மீட்டர் துரத்துக்குள்ளேயே, ஏகப்பட்ட புகைப்படத்தை எடுத்துக்கிட்டு, கையில இருக்கிற வழிக்காட்டியை வச்சு ஹோட்டலுக்கு நடந்து போயிடலாம்னு ஒரு தப்பான முடிவு எடுத்துட்டோம். நடந்தோம், நடந்தோம், நடந்தோம், நடந்துக்கிட்டேயிருந்தோம், ஆனா ஹோட்டல் தான் வந்த பாடில்லை. எப்படியோ ஒரு முக்கால் மணி நேரம் நடந்து ஹோட்டலுக்கு வந்து சேர்ந்தோம். வரவேற்பறைல இருக்கிறவுங்க கிட்ட, பக்கத்துல எங்க இந்திய உணவகம் இருக்கும்னு கேட்டோம். அதுக்கு அவுங்க கொஞ்ச தூரத்துல, தோசா உணவகம்” ஒண்ணு இருக்கு, அங்க தோசை சாப்பிடறதுக்கு சொல்லிக் கொடுப்பாங்கன்னு சொன்னாங்க. என்னாது! தோசை சாப்பிடறதுக்கு சொல்லிக்கொடுப்பாங்களா!!! எங்களுக்கு ஒரே ஆச்சிரியமா போச்சு. அங்க அப்படி எப்படிதான் சொல்லிக் கொடுக்கிறாங்கன்னு போயி பார்போமேன்னு, அந்த உணவகத்துகு போனோம். அவுங்க எப்படி சொல்லிக் கொடுத்தாங்கன்னு அடுத்த பதிவுல சொல்றேன்.  
                                                                                                                 பகுதி-8  


2 comments:

  1. சார்,உங்கள் பயண கட்டுரை மிகவும் அருமை....அமெரிக்கா செல்ல வேண்டும் என்ற ஆசை உண்டாகிறது.....

    ReplyDelete
  2. பாராட்டுக்கு நன்றி. வாய்ப்பு கிடைத்தால், கண்டிப்பாக ஒரு முறையாவது, அமெரிக்காவிற்கு செல்லுங்கள்.

    ReplyDelete