Tuesday, May 22, 2012

வெளிநாட்டு வேலைக்கான ஒரு இன்டர்வியூ

4 வருஷமா இந்தியாவில வேலை பார்த்துக்கிட்டு இருக்கும்போது (அப்ப நான் செட்டிநாடு சிமெண்ட் ஃபேக்டரில வேலை செஞ்சுக்கிட்டு  இருந்தேன்), ஏன் நாம வெளிநாடு போக முயற்சி பண்ணக்கூடாதுன்னு ஒரு விபரீதமான எண்ணம் தோணுச்சு. இந்த ஈமெயில், இன்டர்நெட், லொட்டு, லொசுக்கு  எல்லாம் பிரபலமடையாத காலம் அது. அதனால போஸ்டல் டிபார்ட்மெண்ட் தான் என்னோட அந்த விபரீதமான எண்ணத்தை செயல் படுத்துறதுக்கு உதவியா இருந்துச்சு. ஹிந்து பத்திரிக்கையை, புதன் கிழமையும்,சனிக்கிழமையும் வாங்கி, அதுல வர்ற வெளிநாட்டு வேலைக்கான விளம்பரங்களுக்கு, சலிக்காம அப்ளை பண்றதே ஒரு வேலையா வச்சிருந்தேன். ஒருத்தனுக்கும் நம்ம மதிப்பு தெரியலை. என்னடாது, யாருமே கூப்பிட மாட்டேன்கிறாங்க, நாம வெறும் உள்ளுர்ல மட்டும் தான் வெல போற மாடான்னு சந்தேகம் வந்துடுச்சு. அப்படியெல்லாம் மனசு ஓடிஞ்சு போகாதேன்னு சொல்ற மாதிரி, சிங்கப்பூர்லேருந்து ஒரு போன். டெலிபோன் இன்டர்வியூ பண்ணுனாங்க. ஒரு மணி நேரம் நோண்டி நொங்கெடுத்துட்டு, கடைசியில நீங்க எங்க வேலைக்கு ஒத்து வரமாட்டீங்கன்னு சொல்லி போனை கட் பண்ணிட்டானுங்க. இந்த இன்டர்வியூ பற்றி இரண்டு மூன்று நண்பர்களுக்கு தெரிஞ்சதுனால, ஆளாளுக்கு துக்கம் விசாரிக்கிற மாதிரி விசாரிக்க ஆரம்பிச்சுட்டாங்க. இதுல, அவுங்களோட அறிவுரை வேற, “பங்காளி, நமக்கு எல்லாம் வெளி நாடெல்லாம் ஒத்து வராது, பேசாம நீ உள்ளூர்லேயே வேற வேலைய தேடிக்கோன்னு”. அதனால நானும், சீச்சீ, இந்த பழம் புளிக்கும்னு கொஞ்ச நாளைக்கு வெளி நாட்டு வேலைக்கு அப்ளை பண்றதை விட்டுட்டேன். கொஞ்ச நாள் கழிச்சு, ஒரு புதன்கிழமை பேப்பர்ல, “மஸ்கட் நாட்டுல” இருக்கிற மிகப் பெரிய கம்பெனி, சனிக்கிழமையும், ஞாயிற்றுக்கிழமையும் கோயம்புத்தூர்ல இருக்கிற “Holiday Inn” ஹோட்டல்ல “walk in Interview” நடத்துறாங்கன்னு போட்டிருந்துச்சு. மறுபடியும் மனசுக்குள்ள சைத்தான் புகுந்துடுச்சு. போன தடவை அந்த இன்டர்வியூக்கு எல்லார் கிட்டேயும் சொன்னோம், ஒண்ணும் நடக்கலை, அதனால இந்த திடவை யாருக்கிட்டேயும் சொல்லாம, காதும் காதும் வச்ச மாதிரி, அந்த இன்டர்வியூவை அட்டென்ட் பண்ணிடலாம்னு முடிவு பண்னினேன். ஆனா, சனிக்கிழமை போறதா, ஞாயிற்றுக்கிழமை போறதான்னு சந்தேகம். சரி, நம்மளோட ரொம்பவும் நெருங்கிய நண்பர்கிட்ட மட்டும் யோசனை கேட்டுக்கலாம்னு நினைச்சேன். அந்த நெருங்கிய நண்பர் வேற யாரும் இல்லைங்க, கடவுள் தான். கடவுள் கிட்ட சீட்டு எழுதி போட்டதுல, ஞாயிற்றுக்கிழமை போகலாம்ன்னு வந்துச்சு. அதன்படி, அம்மாக்கிட்ட, திண்டுக்கல்ல இருக்கிற ஒரு நண்பனை பார்த்துட்டு வறேன்னு சொல்லி கோயம்புத்தூர் போயிட்டேன். அந்த ஹோட்டலுக்கு போனா, ஒரே திருவிழா கூட்டம் தான். ஜே,ஜேன்னு இருந்தாலும்,ஒரு பசுமையே இல்லாம, வெறும் காஞ்சு போயி இருந்துச்சு. பொதுவா, எந்த ஒரு இன்டர்வியூலையும், இளம் பெண்களின் கூட்டம் அலை மோதும். ஆனா இங்க மட்டும் தான் பெண்கள் இல்லாம வெறும் ஆண்கள் கூட்டம் மட்டும் இருந்துச்சு. கொஞ்ச நேரத்துல என்னோட முறையும் வந்துச்சு, பயபக்தியோட, அந்த ரூமுக்குள்ள போயி, அவுங்க கேட்ட கேள்விகளுக்கு எல்லாம் சரியா பதில் சொல்லிக்கிட்டு வந்தேன், திடீர்னு அவுங்க, உங்களுக்கு “AS/400” தெரியுமான்னு கேட்டாங்க. என்னாது “AS/400”, சரி தான் நமக்கு இன்னமும் ஆப்பு வரலையேன்னு நினைச்சேன்,இந்த “AS/400” ரூபத்துல வந்துடுச்சேன்னு, சோகமா முகத்தை வச்சுக்கிட்டு, தெரியாதுன்னு சொன்னேன். அவுங்களும் உடனே, கொஞ்ச நேரம் வெளியில இருங்கன்னு சொல்லி வெளியே அனுப்பினாங்க. என்னடா, இவனுங்க நமக்கு வேலை கொடுப்பாங்களா, மாட்டாங்களான்னு ஒரே குழப்பமா ஆயிடுச்சு. ஆனா, ரொம்ப நேரம் என்னைய மண்டைய போட்டு உடைச்சுக்க விடாம, கூப்பிட்டாங்க, உள்ள போனா, இந்தாங்க “offer letter”ன்னு சொல்லி, இவ்வளவு சம்பளம், தங்கிக்கிறதுக்கு, உங்களுக்கு “bachelor accommodation”  இலவசமா கொடுப்போம். உள்ளுக்குள்ளேயே சாப்பாட்டுக்கு மெஸ் இருக்கும். ஆபிசுக்கு போய்வர கம்பெனி பஸ்ல போயிட்டு வரலாம்,அதுக்கப்புறம் நாங்களே உங்களுக்கு “AS/400” ட்ரைனிங் கொடுப்போம். அப்படி, இப்படின்னு அவுத்து விட்டாங்க. நானும் அவுங்க சொன்னதுக்கு எல்லாம் வாயை மூடாம, தலையை மட்டும் ஆட்டிக்கிட்டு இருந்தேன். கடைசியா அவுங்க கொடுத்த காண்ட்ராக்ட்ல கையெழுத்தைப் போட்டுட்டு வீடு வந்து சேர்ந்தேன்.
மஸ்கட் போற நாளும் வந்துச்சு (12/09/1997), பட்டிக்காட்டான் பட்டினத்தை சுத்திப் பார்த்த மாதிரி நானும் மெட்ராஸ் ஏர்போர்ட்குள்ள போயி, முதல் முதலா விமானதுக்குள்ள போயி உட்கார்ந்தேன்.  அதைப் பற்றி அடுத்த பதிவுல விளக்கமா எழுதிறேன்.

Saturday, May 19, 2012

இந்திய சிவில் சர்வீஸ் தேர்வில் சாதித்த தமிழர்கள்

இளைஞர்களே! கனவு காணுங்கள்,கண்டிப்பாக ஒரு நாள் அந்த கனவு நிஜமாகும் என்றார் முன்னாள் இந்திய குடியரசுத்தலைவர் டாக்டர்.அப்துல்கலாம். இந்த வார்த்தை ஒரு சத்தியமான வார்த்தை என்று நிருபித்திருக்கிறார்கள், இந்த வருடம் நடந்த சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்ற நம் தமிழர்கள். நம்மில் நிறைய பேர், ஒரு காரியத்தில் இறங்கும்போது, ஒரு சின்ன தடங்கல் வந்தா போதும், அவ்வளவுதான், நம்மால அந்த காரியத்தை செய்ய முடியாதுன்னு ஒதுங்கி விடுகிறோம். ஆனா, அந்த தேர்வில் வெற்றிப்பெற்ற சிலரின் பேட்டியை பத்திரிக்கையில் படித்த போதுதான் தெரிஞ்சது, அவுங்க எந்த அளவுக்கு தடைகளை முறியடித்து வெற்றிபெற்று இருக்காங்கன்னு. உதாரணத்துக்கு, கடலூர் மாவட்டத்தை சேர்ந்த 23 வயதேயான பிரசன்ன வெங்கடேஷ் எந்த சூழ்நிலையில அந்த தேர்வை எழுதி ஐ.ஏ.எஸ். ஆகியிருக்காருன்னு தெரிஞ்சா, கண்டிப்பா மற்றவர்களுக்கு அது ஒரு பாடமாகவே இருக்கும். ரொம்ப சின்ன வயசுலேயே தந்தையை இழந்து, அண்ணனோட தயவுல வளர்ந்திருக்காரு. தாயும் வேற இருதய கோளாறு காரணமா உடல் நிலை சரி இல்லாம இருந்திருக்காங்க. இத்தனைக்கும் நடுவுல, தான் படிச்சு கலெக்டர் ஆகனும்னு கனவு கண்டிருக்காரு. அவரின் தாயும் தன் மகனை கலெக்டராகவே கற்பனை பண்ணி வாழ்ந்து வந்திருக்காங்க. அவரால முதல் தடவை சிவில் சர்வீஸ் தேர்வு எழுதி வெற்றி பெற முடியலை. அவருடைய தாய், அந்த நேரத்துல ஆறுதலா இருந்து, அந்த தோல்வியிலிருந்து அவரை மீள வச்சிருக்காங்க. அதுக்கப்புறம் தூத்துக்குடி துறைமுகத்துல ஏதோ கிடைச்ச வேலைல சேர்ந்து, இன்னும் தீவிரமா முயற்ச்சி செஞ்சு, முதல் கட்ட தேர்வில வெற்றிபெற்று நம்பிக்கையோட இருந்தப்ப தான், முக்கியத் தேர்வுகளுக்கு மூன்று நாள் முன்னாடி, அவருடைய கலெக்டர் கனவிற்கு உறுதுணையா இருந்த அம்மா தவறிட்டாங்க. ரெண்டு நாளா சாப்பிடாம அழுதுக்கிட்டு இருந்த அவரை, அவரோட அண்ணன் தான் தேத்தி பஸ் ஏற்றி சென்னைக்கு அனுப்பியிருக்காரு. தன்னோட இலட்சியமும், தன் அம்மோவோட கனவும் நிறைவேறணும்னு ஒரு வெறியோட எல்லாத் தேர்வுகளையும் எழுதி ஐ.ஏ.எஸ்.ல தேர்வாகி இருக்காரு. இப்ப சொல்லுங்க, இவரோட வாழ்க்கை, எத்தனை பேருக்கு ஒரு பாடமா இருக்கும்னு. சின்ன வயசுலேயே தந்தையை இழந்து, ஐ.ஏ.எஸ். தேர்வுக்கு மூன்று நாள் முன்னாடி தன்னோட தாயையும் இழந்து ஐ.ஏ.எஸ்.  ஆகியிருக்காருன்னா, அவரோட மன உறுதியை நாம பாராட்டாம இருக்க முடியாது. இவர் மட்டும் இல்லை, இந்த மாதிரி இந்த வருட சிவில் சர்வீஸ் தேர்வுல வெற்றிபெற்று ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். ஆனவுங்க எல்லோருமே பல தடைகளை தாண்டித்தான் வந்திருக்காங்க.
தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா” என்ற இந்த வரிகளுக்கு, நம்முடைய தமிழர்கள் மீண்டும் உயிர் கொடுத்திருக்கிறார்கள்னு நினைக்கும் போது ரொம்பவும் பெருமையாக இருக்கிறது.   


Sunday, May 13, 2012

காதல் – காதலியின் பரிசு


    “உன் வாய் சிரித்ததில் உன் பற்கள்,

     என் கண்களை கூசச் செய்தது.

     உன் முகம் மலர்ந்ததில் உன் கண்கள்,

     என் இதயத்தை நொறுங்கச் செய்தது”.

கும்பகர்ணனின் வாரிசு போல் தூங்கும் நான், நீ தினமும் அதிகாலை 4.30 மணிக்கு எழுந்து கோலம் போடும் அழகை ரசிப்பதற்காக, அதிகாலையிலே எழுந்து ஜாகிங் என்ற பெயரால் உன்னை பார்த்து விட்டு வருவேன். அப்படி ஒரு நாள், உன்னை பார்க்க வந்த என்னை, பக்கத்தில் யாரும் இல்லை என்று தெரிந்துக் கொண்டு தடுத்து நிறுத்தி, “இவ்வளவு அதிகாலயிலே தினமும் என்னை பார்க்க வருகிறீர்களே, உங்களுக்கு அப்படி என்னிடம் என்ன பிடித்திருக்கிறது” என்று கேட்டாய். "கருகரு என வளர்ந்து பின்னங்கால் வரை தொட்டு நிற்கும் உன் மேகக் கூந்தல், சூரியனைக் கண்ட தாமரை போல் மலர்ந்திருக்கும் உன் முகம், அம்பு போல் நெஞ்சை துளைக்கும் உன் கண்கள், பவளத்தையே ஏங்க வைக்கும் உன் செந்நிற உதடுகள், கண்களை கூசச் செய்யும் உன் வெண்ணிற பற்கள், சங்கு போன்ற உன் கழுத்து, இருக்கிறதா,இல்லையா என்று தேட வைக்கும் உன் இடுப்பு, அப்புறம் உம், உன் பிஞ்சு விரல்கள்". அதைப்  பார்த்து தான் வெண்டைக்காய்க்கு ஆங்கிலத்தில் “ladies finger” என்று பெயர் வந்திருக்கும்.  இப்படி உன்னிடம் எல்லாம் பிடிக்கும், ஆனால் இவை எல்லாம் விட நான் உன்னை அனு அனுவாக பார்த்து ரசிப்பதை, நீயும் கோலம் போட்டுக் கொண்டே உள்ளுக்குள் ரசித்து, அதனால் ஏற்படும் நாணத்தை மறைக்க முடியாமல் முகம் சிவந்து, கடைசியில் வேக வேகமா கோலத்தை போட்டு முடித்து எழுந்து, அதே நாணத்தால் என்னைப் பார்த்து ஒரு வெட்கச் சிரிப்பொன்றை உதிர்த்து விட்டு உன் வீட்டுக்குள் ஓடிச்செல்வாயே அந்த பெண்மை” தான் எனக்கு ரொம்ப பிடிக்கும் என்றேன். உடனே, மீண்டும் ஒரு முறை அக்கம் பக்கம் பார்த்து விட்டு, என் அருகில் வந்து, என் கன்னத்தில் ஒரு அழகான முத்தத்தை பரிசாக பதித்து விட்டு உன் வீட்டுக்குள் சென்று மறைந்து விட்டாய்.

Tuesday, May 8, 2012

சிட்னியில் வாடகை வீடு

ஐந்து வருடங்களுக்கு முன்னாடி, ஜப்பான்லேருந்து சிட்னிக்கு குடிப்பெயர்ந்தோம். சிட்னில இருக்கிற ஒரு பாங்க் எனக்கு work விசா ஸ்பான்சர் செஞ்சுது. ஸ்பான்சர் மட்டும் தான் செய்வோம், சிட்னி வருவதுக்கான செலவு,வந்தவுடன் தங்குவதற்கான ஏற்பாடு எல்லாம் நீங்க தான் பார்த்துக்கனும்னு சொன்னாங்க. சரி, ஒரு ஹோட்டல்ல நாலைந்து நாட்கள் தங்கிக்கிட்டு, அதுக்குள்ள வீடு பார்த்து போயிடலாம்னு நினைச்சு தான், மூட்டை, முடிச்செல்லாம் பேக் பண்ணி 15 நாட்கள் கழிச்சு வந்து சேருகிற மாதிரி ஏற்பாடு செஞ்சுட்டு, ஒரு நல்ல நாள்ல(!) சிட்னி வந்தோம். முதல் ஒரு ரெண்டு/மூன்று நாள், ஆபிஸ்ல பர்மிஷன் போட்டு வீடு பார்க்க போனேன். வீடு பாக்குறதுக்கு முன்னாடி,முதல்ல ஒரு அப்ளிகேஷனை fill பண்ணிக் கொடுக்கனுமாம். அதுல என்னடான்னா,rental history” அதாவது, நாம முன்னாடி இங்க தங்கியிருந்த வீட்டு முகவரியையும், ஏன் அந்த வீட்டை வீட்டு மாறுகிறோம்ன்னு எழுதனும். அப்ப புதுசா சிட்னிக்கு வரவுங்க என்ன பன்றதுன்னு கேட்டேன். நீங்க முன்னாடி எந்த ஊர்ல, எந்த வீட்டில இருந்தீங்களோ அந்த முகவரியை எழுதுங்கன்னு வீட்டுப் புரோக்கர் சொன்னாங்க/ அதுவும் கடைசி 5 வருஷத்தோட வரலாற்றை எழுதனும். (அவுங்களை வீட்டுப் புரோக்கர்னு சொல்லக் கூடாதாம், ரொம்பவும் உயர்வா, ரியல் எஸ்டேட் ஏஜெண்டுன்னு சொல்லனுமாம். இதுல அவுங்க இந்த தொழிலுக்கு வரதுக்கு படிச்சு சர்டிபிகேட் எல்லாம் வாங்கி இருக்கனுமாம்). அதோட நாம எந்த வீட்டுக்கு வடகைக்கு போறோமோ, அந்த வீட்டுக்கு ஆறு மாசம் காண்ட்ராக்ட் வேற போடனுமாம். எங்களுக்கு இந்த “rental history” இல்லாததுனால, வீடு கிடைப்பது ரொம்ப கஷ்டமா போச்சு. சாதாரணமா வாடகைக்கு ஒரு வீட்டை  பார்க்கப் போகும் போது, நமக்கு அந்த வீடு பிடிச்சிருந்தா தான், நாம அந்த வீட்டுக்கு குடி போவோம்.  ஆனா, எங்க நிலமையோ, நமக்கு வீடு பிடிக்குதோ இல்லையோ, வீட்டு சொந்தக்காரருக்கு நம்மளை பிடிச்சு, நம்ம அப்ளிகேஷனை ஓகே செய்யனும். அதனால எப்படியாவது, ஒரு பாடாவதி(!) வீட்டுக்காவது குடி போயி, ஆறு மாசம் தங்கிட்டு, அதுக்கப்புறம் நமக்கு பிடிச்ச மாதிரி வேற ஒரு வீட்டுக்கு போகலாம்னு முடிவு பண்ணி, வடகைக்குப் பார்க்கிற எல்லா வீட்டுக்கும், அப்ளிகேஷன் போட்டோம். இன்னொரு விஷயத்தை வேற சொல்லியாகனும், என்னன்னா, ஒரு வீட்டை வடகைக்கு பார்க்கப் போனா, அங்க என்னமோ திருவிழாக் கூட்டம் போல ஜே! ஜே!ன்னு ஒரு முப்பது/நாற்பது பேர் அந்த வீட்டை பார்க்க வந்திருப்பாங்க. இவுங்க எல்லோரும் வேற அப்ளிகேஷன் போடுவாங்க. இந்தக் கூட்டத்துல நம்ம அப்ளிகேஷன் எடுபடுமா!!! ஒரு வீட்டு சொந்தக்காரராவது சீண்டுனானுங்களா. ஊம்! ஊம்!. இப்படியே ஓரு வாரம் வேற ஓடிப் போச்சு. இங்க ஹோட்டலுக்கும் வேற காசு அத்துப் போகுதா, அதுக்கும் மேல,இன்னொரு ஓரு வாரத்துல நாங்க அனுப்பிச்ச மூட்டை முடுச்சு எல்லாம் வேற வந்துடும், என்னப் பண்றதுன்னு ஒண்ணுமே புரியலை. அப்பத்தான் ஒரு ஏஜெண்டு ரொம்ப நல்ல விஷயத்தை(!!!) சொன்னாரு. அதாவது, வீட்டு சொந்தக்க்காரங்க வாரத்துக்கு 250 டாலர்னு, சொல்லி இருந்தாங்கன்னா, நாம ஒரு 260/270 டாலர்னு அப்ளிகேஷன்ல போட்டோம்னா,நமக்கு அந்த வீட்டை வாடகைக்கு கொடுப்பாங்கன்னு சொன்னாரு. நாங்களும் அந்த ஃபார்முலாவை(!!!) ஃபாலோ பண்ணி,  வாரத்துக்கு 300 டாலர்னு அப்ளிகேஷன்ல போட்டு(சந்தைல அந்த வீட்டுக்கு சொன்ன விலை 275 டாலர் தான்) எப்படியோ போட்டில ஜெயிச்சு, வாடகைக்கு குடி போனோம்.

கஷ்டம்,கஷ்டம்னு கோவிலுக்கு போனா, அங்க ரெண்டு கஷ்டம் நமக்கு முன்னாடி போயி உட்கார்ந்து இருக்கும்னு சொல்லுவாங்க. அந்த மாதிரி, ஏதோ ஒரு வீடு கிடைச்சா போதும்னு, அந்த வீட்டுக்கு போனா, அந்த வீட்டுக்குள்ள ஒரு சுண்டெலி இருந்துக்கிட்டு, எங்களை என்னமா பாடுபடுத்துனுச்சு. (அவுங்க நிம்மதியா இருந்த இடத்துல, நாங்க போயி அவுங்களோட நிம்மதியை கெடுத்துட்டோம்னு அவுங்களுக்கு ஒரே கோபம்). இந்த சுண்டெலியோட, நாங்களும் எப்படி அந்த வீட்டுல ஆறு மாசம் இருந்தோங்கிறதை இன்னொரு பதிவுல சொல்றேன்.


Thursday, May 3, 2012

திருஞானசம்பந்தர் உருவாக்கிய மதுரை ஆதீன மடம் இன்று -???

திருஞானசம்பந்தரால் உருவாக்கப்பட்ட மதுரை ஆதீன மடத்திற்கு பல பெருமைகள் உண்டு. அப்படிபட்ட மடம் இன்று ஒரு கரும் புள்ளியாக காட்சியளிக்கிறது. இதற்கு காரணம் அந்த மடத்திற்கு தற்போதைய ஆதினமாக உள்ளவர், ஒரு மனிதரை  இல்லை, இல்லை பாலியல் குற்றம் சாற்றப்பட்டு,சிறைக்கு சென்று வந்த ஒரு கேவலமான மனிதரை 293வது ஆதினமாக முடிசூட்டியது  தான். அந்த மனிதன் தன்னை களங்கமாக்கிய அந்த குற்றச்சாட்டிலிருந்து, முழுவதுமாக துடைத்தெறிந்து விட்டு அந்த பதவியை அடைந்திருந்தால், நமக்கு  இவ்வளவு கோபம் வராது. ஆனால், வெறுமனே, தான் நிரபராதி, தனக்கும் அந்தக் குற்றச்சாட்டுக்கும் எந்த சம்பந்தம் இல்லை என்று ஒப்புக்கு கூறிவிட்டு, ஒரு கோடி ரூபாயை கொடுத்து அந்த பதவியை அடைந்துள்ளார். இவர் உண்மையிலேயே நிரபராதி என்றால் ஏன் ஓடிப் போயி ஒளிந்துக் கொள்ள வேண்டும்.
அந்த ஆதீனப் பதவி ஒரு வியாபார பொருளாகி விட்டதை நினைக்கும்போது,மனதுக்கு மிகவும் கஷ்டமாக உள்ளது. உலகம் முழுவதும் உள்ள சைவ சமயத்தை வளர்க்க பாடுபடும் தொண்டர்கள் யாரும் இந்த செயலை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். தற்போதுள்ள மதுரை ஆதீனம் தன்னிச்சையாக இந்த முடிவை எடுத்ததுக்கு, எல்லா ஆதினங்களும் கண்டனம் தெரிவித்திருக்கின்ற நிலையில், புதிதாக முடிசூட்டப்பட்ட, அந்த மனிதர், "எங்களுக்கு எதிராக கருத்து தெரிவித்த ஆதீனங்கள் அனைவர் மீதும் மான நஷ்ட ஈடு கோரி பெங்களூர் பிடுதி பீட பக்தர்கள் வழக்குத் தொடருவார்கள் என்று கூறியிருக்கிறார்". அதிலும் பாருங்க அவரு வழக்கு போட மாட்டாராம். பக்தர்கள் தான் வழக்கு போடுவாங்களாம். ஏன்னா, பக்தர்கள் தானே இளிச்சவாயனுங்க. அந்தாளை பற்றி சொல்லிப் பிரியோஜனமில்லை, நம்ம மக்கள், அந்தாளை இன்னமும் ரொம்பவும் நல்லவர்னு(?) நம்பிக்கொண்டு இருக்கிறாங்களே, இந்த கொடுமைய எங்க போயி சொல்றது.
அந்த திருஞானசம்பந்தர் தான், இந்த கன்றாவிக்கு எல்லாம் ஒரு முடிவு கட்டி, கரும்புள்ளியாகிவிட்ட, தான் கட்டிக் காத்த அந்த மதுரை ஆதீன மடத்தை வெளிச்சத்துக்கு கொண்டு வரனுங்கிறது தான் சைவ உலகில் இருக்கிற எல்லோருடைய ஆசை.