Sunday, April 29, 2012

வட இந்தியாவில் கடத்தப்பட்ட தமிழ் கலெக்டர்


மாவோயிஸ்ட்களால் கடத்தப்பட்ட சட்டீஸ்கர் மாநிலத்தின் சுக்மா மாவட்ட ஆட்சியரான 32 வயதான அலெக்ஸ் பால் மேனன் ஒரு தமிழர். நான் முதல்ல அவரோட பேரைப் பார்த்து, மேனன்னு இருக்கு, இவர் எப்படி தமிழரா இருப்பாருன்னு யோசிச்சேன். அப்புறம் தான் அவரோட தந்தையின் பேட்டியை படிச்ச பிறகு தான் அந்த சந்தேகம் தீர்ந்துச்சு. ''மாவீரன் அலெக்ஸாண்டர் நினைவா, அலெக்ஸ்... போப் ஜான்பால் மீது கொண்ட அன்பால, பால்... நேரு அமைச்சரவையில் பாதுகாப்புத் துறை அமைச்சரா இருந்த வி.கே.கிருஷ்ண மேனன் நினைவா, மேனன்...” இது தான் அவருக்கு அந்த பேர் வந்த காரணம். தன்னுடைய பள்ளிப் பருவத்துலேயே தாயை இழந்த அவர் தாய் அன்பையும், தந்தையிடமே பெற்று ஒரு பொறுப்பான இளைஞனா வளர்ந்திருக்காரு. சுக்மா மாவட்டத்தோட முதல் கலெக்டரும் அவர் தான். சுக்மாவில் இருந்து 40 கி.மீ. தொலைவில் உள்ள மஞ்சிபாடா என்ற கிராமத்தில் நடந்த, 'கிராம் ஸ்வராஜ் அபியான்என்ற மக்கள் குறைகேட்புக் கூட்டத்தில் வைத்து மாவோயிஸ்ட்டுகள் அவரை கடத்தினர்.   அடிஷனல் கலெக்டராக இருந்த போது அவருடைய சேவைகளைப் பாராட்டி மத்திய அராசங்கம் அவருக்கு மூன்று விருதுகளை அளித்திருக்கிறது. சுக்மா மாவட்டத்துல நாலே மாசத்துல கலெக்டர் அலுவலகத்தைப் புதுசாக் கட்டி முடிச்சிருக்காரு. மேலும் பல நல்ல காரியங்களையும் செய்திருக்கிராரு. அதனால் அங்குள்ள மக்கள் மத்தியில் அவருடைய செல்வாக்கு உயர்ந்திருக்கிறது. சென்ற வருடம் தான் அவருக்கு திருமணம் நடந்தது. அவர் மனைவி தற்போது கர்ப்பமாக உள்ளார். கர்ப்பமான ஒரு பெண் தன் அருகில் கணவன் இருப்பதை தான் விரும்புவாள்.ஆனால் இங்கோ, தான் கர்ப்பமாக இருக்கும் சமயத்தில், தன் கணவன் எப்படி இருக்கிறாரோ, அவருக்கு என்ன ஆகுமோ என்று தினம், தினம் துடித்துக் கொண்டிருக்கும் அவருடைய மனைவிக்கு என்ன சொல்வது.
மக்களுக்கு நல்லது செய்ய நினைக்கும் ஆத்மாக்களுக்கு மட்டும் ஏன் தான் இப்படி எல்லாம் நடக்கிறதோ. நாட்டில் எவ்வளவோ மோசமான அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் இருக்கிறார்கள். அவர்களை எல்லாம் அந்த கடத்தல்காரர்களுக்கு அடையாளம் தெரியவில்லை போல இருக்கு, அந்த மாதிரி ஆட்களை கடத்தி இருந்தால், மக்கள் எவ்வளவு சந்தோஷப் படுவார்கள். இந்த பதிவை நீங்கள் படிக்கும் போது கண்டிப்பாக அவர் விடுதலை அடைந்திருப்பார் என்று நம்புவோம், அதற்காக பிராத்திப்போம்.





. 

Tuesday, April 24, 2012

அலுவலக கட்டிடத்தில் நெருப்பு


இரண்டு வாரத்துக்கு முன்னாடி, ஈஸ்டர் விடுமுறைக்கு பிறகு ஆபிஸுக்கு போனேன். பொதுவாவே சனி ஞாயிறு விடுமுறை முடிந்து திங்கட்கிழமை ஆபிஸ் போறதுக்கு 9.15 மணி ஆயிடும். இதுல 4 நாளு விடுமுறை முடிந்து லேட்டா போகலாம்னு நினைச்சா, கடன்கார மேனேஜர் அன்னைக்கு தான் சரியா 9மணிக்கு மீட்டிங் வச்சிருந்தாரு. அதனால அடிச்சு புடிச்சு சீக்கிரமா எந்திரிச்சு, சரியா 8.55க்கு எல்லாம் ஆபிஸ் போயி சேர்ந்தேன். மீட்டிங் ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடி ஒரு டீ போட்டு குடிச்சிடலாம்னு, பேன்ட்ரிக்கு போயி டீ போட ஆரம்பிச்சேன். நமக்கு தான் டீ ரொம்ப சூடா இருக்கனுமே, அதனால டீயை கலந்து மைக்ரோவேவ்ல வச்சு சூடு பண்ணிக்கிட்டு இருக்கும்போது ஃபயர் அலாரம் அடிக்க ஆரம்பிச்சுருச்சு. நான் ரொம்ப பயந்து போயி, என்னடாது தினமும் தானே டீ போட்டு மைக்ரோவேவ்ல சூடு பண்ணுவோம். இன்னைக்கு என்னடா ஃபயர் அலாரம் அடிக்குதுன்னு உடனே டீ கப்பை வெளியில எடுத்துட்டேன். எல்லோரும் கீழே இறங்க ஆரம்பிச்சுட்டாங்க. அடப் பாவிகளா, போட்ட டீயை கூட குடிக்காம முடியாம பண்ணிட்டாங்களேன்னு நொந்து போயி அந்த டீயை கீழே கொட்டிட்டுட்டு, நானும் படிக்கட்டுல கீழே இறங்கி போக ஆரம்பிச்சேன். இறங்குறோம், இறங்குறோம், அனுமார் வால் மாதிரி படிக்கட்டு வந்துக்கிட்டே இருக்கே ஒழிய, கடைசிப் படிக்கட்டு வந்த பாடில்லை. ஏன்னா, நாங்க இருந்தது 18வது மாடியில. கொடுமை என்னன்னா, மீட்டிங்குக்காக அரக்க பறக்க 9மணிக்கெல்லாம் வந்தா, இந்த மாதிரி 18வது மாடியிலிருந்து கால் கடுக்க இறங்குனது தான். அதுலேயும் ரொம்ப கொடுமை போட்ட டீயை கூட குடிக்காம போனது தான். இதுல 18மாடி இறங்குனது கூட பெருசில்லை, அதுக்கப்புறம் கிட்டதட்ட 1km நடந்து, ஃபயர் எவாகுவேஷன் இடத்துக்கு போகனும். நடந்து போகும் போது , தீ அணைக்கும் வண்டி வேற போனுச்சா, சரி எந்த மாடியில நெருப்பு புடிச்சுக்குச்சுன்னு தெரியலையேன்னு எல்லோரும் பேசிக்கிட்டே போனோம். அப்புறம் தான் தெரிஞ்சுது, 14வது மாடியில ஒரு பிரகஸ்பதி, சாண்ட்விச் மேக்கர்ல பிரட்டை வச்சுட்டு, வேலை பார்க்க போயிட்டாராம். (அந்த அளவுக்கு வேலைல ஒரு ஈடுபாடு போல!!!) சாண்ட்விச் மேக்கர்லேருந்து புகையா வந்து, ஃபயர் அலாரம் அடிக்க ஆரம்பிச்சிடுச்சு. அந்த பிரகஸ்பதிக்கும் நம்மலால தான் ஃபயர் அலாரம் அடிக்குதுன்னு தெரியலையாம். என்னத்தை சொல்றது.
இந்த கூத்து நடக்குங்குறது கொஞ்சம் முன்னாடியே தெரிஞ்சிருந்தா, நான் பொறுமையா வீட்டிலிருந்து கிளம்பி லேட்டா ஆபிஸ் போயிருப்பேன்.

Saturday, April 7, 2012

தமிழகத்தில் இப்படியும் ஒரு எம்‌.எல்.‌ஏ இருந்திருக்கிறார்

சென்ற வாரம் தமிழகத்தில் நடந்த ஒரு சாலை விபத்தில், புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதியின் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் எம்‌.எல்.‌ஏ  திரு. முத்துக்குமரன் மரணமடைந்தார். புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் கிராமத்தைச் சேர்ந்தவரான இவர், கடந்த ஆண்டு நடந்த சட்டசபைத் தேர்தலில் முதல் முறையாக போட்டியிட்டு வெற்றி பெற்றார். சாதாரணமா, தேர்தல்ல நின்னு ஜெயிக்கிறதுக்கு, பணபலம் ஒரு மிகப் பெரிய முக்கிய கருவியா விளங்கும். ஆனா எந்த விதமான பணபலமும், அரசியல் பலமும் இல்லாம, எளிமையும், தூய்மையும் வச்சுக்கிட்டு தேர்தல்ல ஜெயிக்க முடியுங்குறதுக்கு இவர் ஒரு உதாரணம். ஒரு கொடுமை என்னன்னா, தன் தொகுதிக்குட்பட்ட ஒரு ஊரில் நடந்த துக்க நிகழ்ச்சிக்கு போனவருக்கு, அந்த இடத்துலேயே அவரோட துக்க நிகழ்ச்சியும் நடந்தது தான்.
எம்.எல்.ஏ ஆனா பிறகும் கூட, அவரிடம்  சொந்த வண்டி இல்லாம இருந்ததை பார்த்த அவர் ஊர் மக்கள், நல்ல மனசோடு தங்கள் கைக் காசைப் போட்டு அவருக்கு ஒரு வாகனத்தை வாங்கிக் கொடுத்திருக்காங்க. ஆனா அந்த வாகனமே அவருக்கு எமணா அமைஞ்சிருக்கு. யோசிச்சுப் பாருங்க, எங்கேயாவது ஒரு எம்.எல்.ஏ. வண்டி இல்லாம இருக்கிறாரா? இல்ல ஊர் மக்கள் தான் அவுங்க கை காசைப் போட்டு வண்டி வாங்கிக் கொடுத்திருக்காங்களா? நம்ம அரசியல் வாதிங்க எல்லாம் மக்களோட பணத்தை சுருட்டாம இருந்தாலே போதும். இந்த மாதிரியான ஒரு சூழ்நிலையில, இப்படி ஒரு எம்.எல்.ஏ.வை பார்க்குறது பெரிய அதிசியம் தான். இன்னொன்னும் அவரைப் பற்றி சொல்லணும், நிறைய சட்டமன்ற/மக்களவை உறுப்பினர்கள் எல்லாம் மக்களுக்கு சேவை செய்யணும் அப்படின்னு நினைச்சு அங்க போகாம, ஏதோ பொழுது போகுறதுக்கு தான் சட்டமன்றத்துக்கோ/மக்களவைக்கோ போறாங்க. ஏன்னா, அவுங்க எல்லாம் எந்த ஒரு கேள்வியும் கேட்காம, பதிலும் சொல்லாம பேசாம போயிட்டு வராங்க. இன்னும் சில பேரு தூங்கறதுக்காகவே போறாங்க. ஆனா, இந்த முத்துக்குமரன் அப்படி எல்லாம் இல்லாம சட்ட மன்றத்துல அதிகமா கேள்விகள் கேட்டவர் அப்படின்னு இவரை பற்றி சொல்றாங்க. அதோடு நதிகள் இணைப்பு திட்டத்துல ரொம்பவே ஆர்வம் காட்டுனவர்னு சொல்றாங்க.
சொத்துக்களை மட்டும் சேர்க்கிறதையே வேலையா பார்க்கிற அரசியல்வாதிங்க மத்தியில்,இந்த மாதிரி ஒரு நல்ல மனிதர், மேலே சொன்ன மாதிரியான அரசியல்வாதிகளுக்கு எல்லாம் ஒரு உதாரணமா திகழ்ந்தவர், இப்படி அல்ப ஆயிசுல இறந்திருக்க வேண்டாம்.
இந்த உலகத்துல உனக்கு பொழைக்கத் தெரியலைன்னு ஆண்டவனே அவரை கூப்பிட்டுக்கிட்டான் போல.  

. 

Monday, April 2, 2012

சுதந்திர இந்தியாவில் கொத்தடிமைகள்

இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்து கிட்ட தட்ட 65 ஆண்டுகள் ஆகி விட்டது. பேச்சு சுதந்திரம், எழுத்து சுதந்திரம் என்று எல்லாத்திலும் நமக்கு சுதந்திரம் இருக்கிறது என்று நாம் நம்பிக்கொண்டிருக்கிறோம். ஆனால் வறுமைக்கோட்டுக்கு கீழே உள்ள மக்கள், ஆதரவற்ற குழந்தைகள் போன்றவர்கள் சுதந்திரமாக வாழ்க்கையை நடத்த முடியவில்லை என்பதே உண்மை. சமீபத்தில் ஜூனியர் விகடனில் வெளியான “மீட்கப்பட்ட கொத்தடிமைகள்” என்ற கட்டுரையின் மூலம் அதனை தெரிந்து கொள்ள முடிந்தது. அந்தக் கட்டுரையில், வட இந்தியாவில் கொத்தடிமை வாழ்விலிருந்து மீட்கப்பட்ட சிறுவர்கள் மற்றும் பெரியவர்களின் பேட்டியை படித்த போது, நெஞ்சு அப்படியே பதறி விட்டது. இந்த அளவுக்கா மனிதாபிமானம் இல்லாமல் அந்த முதலாளிகள் நடந்து கொண்டார்கள் என்று அந்த முகம் தெரியாத அந்த கல்நெஞ்சக்காரர்கள் மீது ஆத்திரமும், கோபமும் வருகிறது. ஆங்கிலேயே ஆட்சியிலிருந்து விடுதலை பெற்ற பின், நாம் சுதந்திரமடைந்து விட்டோம் என்று பெருமை பட்டுக் கொள்கிறோம். ஆனால் உண்மையான சுதந்திரம் எல்லோருக்கும் கிடைக்கிறதா என்பதே கேள்வி. வெளிநாட்டுக்கு போய் கை நிறைய சம்பாதிக்க வேண்டும் என்று நினைக்கும் ஏழை மக்கள் கடனை வாங்கி இந்தியாவில் இருக்கும் இடைத்தரகர்களுக்கு கப்பம் கட்டிவிட்டு, வெளிநாடுகளில் போய் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இந்தியாவில் வாங்கிய கடனை அடைப்பதற்கே தங்கள் வாழ் நாளை வெளிநாட்டில் அடகு வைக்கிறார்கள். சரி, வெளிநாட்டிற்கு போய் கஷ்டப்பட வேண்டாம் என்று நினைப்பவர்கள், இந்தியாவிலேயே கொத்தடிமைகளாக போய் மாட்டிக்கொள்கிறார்கள். இதனை என்னவென்று சொல்வது. பாரதி மீண்டும் நம் மண்ணில் பிறந்து “என்று தணியும் இந்த சுதந்திர தாகம்” என்று இந்த கொத்தடிமைப்பட்டவர்களுக்காக பாட வேண்டும்.
கொத்தடிமை வாழ்விலிருந்து மீட்கப்பட்டவர்களில், ஒரு சிறுவனுடைய  பேட்டி, நம் மனதை மிகவும் கல்லாக்கச் செய்யும். காலையில 4 மணிக்கு எழுந்து, ராத்திரி 12 மணி வரை வேலை. சாப்பாடு ரெண்டு நேரம் தான் அதுவும் காலையில 8 மணிக்கும், அப்புறம் படுக்க போகும் முன்னர் அதாவது இரவு 12 மணிக்கும் தான்(நடுவுல சாப்பாடு கொடுத்தா தூங்கி விடுவார்களாம்). வேலை பார்க்குற இடம் பலகாரக் கடை என்பதால், குடிக்க தண்ணீர் இருக்காதாம். தண்ணீர் குடிக்க வேண்டும் என்றால் சிறுநீர்/மலம் கழிக்கும் இடத்துக்கு போய் தான் தண்ணீர் குடிக்க வேண்டுமாம்(வேலை செய்யும் இடத்தில் தண்ணீர் குடித்து, சிந்தினால் மிட்டாயும், சீனிப்பாகும் சீக்கிரம் கெட்டுப் போய்விடுமாம்). இன்னும் ஒரு மிகப் பெரிய கொடுமை என்னவென்றால், மகள் இறந்த தகவலைக் கூட ஒரு தந்தையிடம் சொல்லாமல் வேலை வாங்கி இருக்கிறார்கள் என்பது தான்.
இந்த மாதிரி ஒவ்வொருவரிடமும் ஏராளமான கதைகள். அதை எல்லாம் உண்மையிலேயே படிக்க மனதில் தெம்பு இல்லை. இவை அனைத்தும் நடப்பது நம் தாய் நாட்டில் தான் என்று அறியும் போது, ரொம்பவும் கஷ்டமாக இருக்கிறது.  
நம் தமிழக காவல் துறை 42 பேர்களை மீட்டிருக்காங்க. ஆனா இன்னும் நிறைய பேர் கொத்தடிமைகளாக இருக்கிறார்கள் என்றும், அவர்களையும் விரைவில் மீட்போம் என்று நம் காவல் துறை அந்த பத்திரிக்கைக்கு பேட்டி அளித்திருக்கிறார்கள். அது சீக்கிரம் நடந்தால், அவர்களின் வாழ்வில் ஒளி பிறக்கும். சீக்கிரம் நடக்கும் என்று நம்புவோம்.
இதில் கொடுமை என்னவென்றால், மீட்கப்பட்டவர்களில் 75 சதவீதம் பேர் தமிழ் நாட்டை சார்ந்தவர்கள் என்பது தான். இலங்கையிலும் தமிழன் கஷ்டபடுகிறான். இந்தியாவிலும் காவிரி பிரச்சனை என்றால், உடனே பாதிக்கபடுவது தமிழன் தான். முல்லை பெரியாறு அணை பிரச்சனையாகட்டும், தமிழன் தான் பாதிக்கப்படுகிறான். கொத்தடிமைகளிலும் தமிழன் தான் அதிகமா இருக்கிறான்.
தமிழனா பிறந்த ஒரே பாவத்துக்காக அவன் எல்லாக் கஷ்டங்களையும் அனுபவிக்கிறான்.