Tuesday, March 27, 2012

பத்திரிக்கையில் புகைப்படம்

பத்து நாளைக்கு முன்னாடி எங்க ஊர்ல திருவிழா நடந்துச்சு. “இங்கில்பர்ன் திருவிழான்னு” அதுக்கு பேர். காலை 11 மணியிலிருந்து மாலை 4 மணி வரை, அந்த திருவிழா நடக்கும். இதுக்கு முன்னாடி இந்த திருவிழாவை பார்க்காததுனால, நானும் கரகாட்டம் எல்லாம் இருக்கும்னு நினைச்சு, எங்க வீட்டு அம்மணியையும், மகாராணிகளையும் கூட்டிக்கிட்டு போனேன். மழையும் அந்த திருவிழாவை பார்க்குறதுக்கு ஆசைப்பட்டிருக்கும் போல. அப்ப அப்ப தூறல் போட்டுக் கிட்டு இருந்துச்சு. அங்க போனா, நான் நினச்ச கரகாட்டம் எல்லாம் நடக்கலை. ஆனா அதுக்கு பதிலா ஒரு மேடைய போட்டு, அதுல சில பேரு காக்கா வலிப்பு வந்த மாதிரி ஏதோ பாட்டுக்கு ஆடிக்கிட்டு இருந்தாங்க. வீட்டு அம்மணிக்கிட்ட இதென்ன, கைய, காலை இழுத்துக்கிட்டு, வலிப்பு வந்த மாதிரி நடிக்கிறாங்களேன்னேன். அவ்வளவுதான் அவுங்களுக்கு வந்தே கோபம். இது நீங்க நினைக்கிற மாதிரி அவுங்களுக்கு வலிப்பு ஒண்ணும் வரலை. இது தான் மேற்கத்திய நடனம். இதுல ஒரு ஸ்டெப்பாவது உங்களால போட முடியுமான்னு சவால் விட்டாங்க. அவுங்க கோபத்தை பார்த்து பயந்து போயி அப்படியே சரண்டர் ஆயிட்டேன் (இதென்ன புதுசா...) அவுங்களுக்கு நடனத்து மேல அப்படி ஒரு ஈடுபாடு. அப்புறம் ஒவ்வொரு ஸ்டால்லேயும் நின்னு, நின்னு ஸ்டால் வச்சிருக்கவுங்க பேசுறதுக்கு எல்லாம் தலைய தலைய ஆட்டிக்கிட்டு, பராக்கு பார்த்துக்கிட்டே போனோம். அப்போ நண்பர்களை அங்கே பார்த்த போது, அவுங்க, என்ன! ஒட்டகச் சவாரி செய்யலையா, முதல்ல அங்க போங்கன்னு, எங்களை விரட்டி விடாத குறையா அங்க போகச் சொன்னாங்க. அதனால அந்த எடத்துக்கு போனோம். அங்க பார்த்தா வத்தலும் தொத்தலுமா ரெண்டு ஒட்டகத்தை முன்னும் பின்னுமா கட்டி வச்சு ஒரு தாத்தா இழுத்துக்கிட்டு இருந்தாரு. ஒரு ஒட்டகத்துல முன்னாடியும், பின்னாடியுமா ரெண்டு பேர் உட்காரலாம்.அந்த இடத்துல ஒரு பெரிய க்யூ வேற நின்னுக்கிட்டு இருந்துச்சு. அந்த ஜோதியில நாங்களும் ஐக்கியமானோம். பெரிய மகாராணி துணைக்கு அவுங்க அம்மாவை வேற கூட்டிக்கிட்டு ஒட்டகத்துல உட்கார்ந்துக்கிட்டாங்க. . நானோ, ஒண்ணும் தெரியாத அப்பாவியா, ஒரு கையில, ரெண்டாவது மகாரணியை தூக்கிக்கிட்டு, இன்னொரு கையில, அவுங்களோட nappy பையையும், போதாக்குறைக்கு, வீட்டு அம்மணியோட handbagயும் தூக்கிக் கிட்டு தேமேன்னு நின்னுக்கிட்டு இருந்தேன். இதுல, அவுங்க ரெண்டு பெரும் ஒட்டகச் சவாரி செய்யுறதை போட்டோ வேற எடுக்கணுமே, எப்படி எடுக்கலாம்னு நினைக்கும் போது, என்னைய மாதிரியே இன்னொரு நண்பர், அந்த பூங்காவுக்கே தோட்டக்காரன் மாதிரி நின்னுக்கிட்டு இருந்தாரு, அப்புறம் அவரே, என் நிலமைய பார்த்து (பரிதாபப் பட்டு), என் மொபைல் போன்லேருந்து போட்டோ எடுத்துக் கொடுத்தாரு. ஒரு வழியா அந்த ஒட்டகச் சவாரிய முடிச்சோம்.(முடிச்சாங்க). சரி, இதுக்கு மேல இங்க பார்க்குறதுக்கு ஒண்ணும் இல்லை, வீட்டுக்கு போலாம்னு தான் நினைச்சேன். அதுக்குள்ள எங்க அம்மணிக்கு, கொஞ்சம் தள்ளி ஒரு பெரியயயய!!! கூட்டம் நிக்கிறதை பார்த்துட்டாங்க. உடனே, ஏங்க, அங்க என்னமோ ரொம்ப ஸ்பெஷல்னு நினைக்கிறேன், அதனால தான் அவ்வளவு பெரிய கூட்டம் அங்க. வாங்க நாமளும் போலாம் அப்படின்னாங்க. அவுங்க பேச்சுக்கு மறு பேச்சு உண்டா!!!. நாங்களும் அங்க போயி, கடைசியா நின்னுக்கிட்டு இருந்தவரிடம், ஏங்க இவ்வளவு கூட்டம்னு கேட்டா, அதுக்கு அவரு, நம்மளை போட்டோ எடுத்து, லோக்கல் பேப்பர்ல போடுவாங்கலாம் அப்படின்னாரு, வீட்டு அம்மணிக்கு இதுல இஷ்டம் இருந்தாலும், கூட்டத்தைப் பார்த்து, வேண்டாங்க, நாம வீட்டுக்கே போகலாம்னு சொன்னாங்க. ஆனா நான் விடாம நம்ம போட்டோவும் பத்திரிக்கைல வரும்னு சொல்லி, அவுங்களை சம்மதிக்க வச்சு, அனுமார் வால் மாதிரி இருந்த கூட்டத்துல கடைசியா நின்னோம். கொஞ்ச நேரம் நின்ன பிறகு தான்,நாங்க கேட்ட அந்த புண்ணியவான், நீங்க முதல்ல போட்டோ எடுத்துக்கிட்டு வந்து இங்க நிக்கனும் அப்படின்னாரு. அட கடவுளே, இத முன்னாடியே சொல்லி தொலைக்க கூடாதான்னு, மனுசுகுள்ள அந்த ஆளை திட்டிக்கிட்டு, முன்னாடி போயி போட்டோ எடுக்கணும்னு சொன்னோம். அப்ப தான் எங்களுக்கு தெரிஞ்சது, நம்ம போட்டோவை எல்லாம் பத்திரிக்கைல போடமாட்டாங்கன்னு, ஆனா அதுக்கு பதிலா பேப்பர்ல வந்த மாதிரி போட்டோ எடுத்துக் குடுப்பாங்கன்னு தெரிஞ்சுது. சரி, பரவாயில்லை, நம்மளை சும்மா போட்டோ எடுத்துக் கொடுக்குறாங்க, அதை எதுக்கு விடுவானேன்னு, நாங்களும் போட்டோ எடுத்து, அதுல வேற ரெண்டு பிரதியை(2 copies ) வாங்கிக்கிட்டு வீடு வந்து சேர்ந்தோம். என்னடா, நம்ம போட்டோ பத்திரிக்கைல வரும்னு ஆசையா இருந்தா இப்படி ஆயிடுச்சேன்னு நினைச்சு வருத்தப்பட்ட போது தான், வீட்டு அம்மணி, உங்க வலைப்பூவுல இந்த படத்தை போடலாமேன்னு யோசனை சொன்னாங்க. அட இது கூட நல்ல யோசனை தான்னு அந்த புகைப்படத்தை, இந்த பதிவுல வெளியிட்டேன்.

Sunday, March 11, 2012

மழையும் சிட்டி ரயிலும்

இது 2 நாட்களுக்கு முன்பு நடந்த ஒரு சம்பவம். ஒரு வாரமா சிட்னில சரியான மழை. சிட்னிக்கு வெளியே நிறைய இடத்துல வெள்ள அபாயம்னு வேற அறிவிச்சிருந்தாங்க. அன்னைக்கு சிட்னில மழை பயங்கரமா பெஞ்சுக்கிட்டிருந்துச்சு. எப்பவும் நான் காலை 7.00 மணிக்கு எழுந்து, அரக்க பறக்க கிளம்பி 7.45 மணி trainயை பிடிக்கிறது வழக்கம். அன்னைக்கு எந்திரிக்க கொஞ்சம் லேட்டாயிடுச்சு . அதனால 8 மணி வண்டியை பிடிச்சேன். ஒரு 40 நிமிஷம் போனதுக்கு அப்புறம், வண்டி  2 ஸ்டேஷனுக்கு நடுவுல (நட்ட நடுக் காட்டுல) நின்னுச்சு. சரி ரெண்டு. மூணு நிமிஷத்துல கிளம்பிடும்னு நினைச்சா, வண்டி கிளம்பாம, பிடிச்சு வச்ச பிள்ளையாராட்டம் அங்கேயே நின்னுக்கிட்டு இருந்துச்சு. இந்த மாதிரி வண்டி நிக்கும் போதெல்லாம், நடத்துனர் காரணத்தை அறிவிப்பாங்க. அதாவது, சிக்னல் கிளியர் ஆகலை, முன்னால போன வண்டி சண்டித்தனம் பண்ணிக்கிட்டு நிக்குதுன்னு, இப்படி ஒண்ணுக்கும் உதவாத காரணத்தை சொல்லுவாங்க. அன்னைக்கு என்னடான்னா, அவுங்க சொன்னது எதுவுமே புரியவே இல்லை. நமக்கு தான்  ஆங்கில அறிவு கொஞ்சம் கம்மியாச்சே, அதனால பக்கத்துல இருக்கவுங்களை கேக்கலாம்னு, அவுங்க கிட்ட, ஏங்க, இப்ப என்னங்க சொன்னாங்கன்னு கேட்டேன். அவரும் எனக்கும் ஒண்ணுமே புரியலைன்னாரு. அடப்பாவி மனுசா, என்னமோ அவுங்க சொல்றதை வார்த்தைக்கு வார்த்தை புரிஞ்சுக்கணும்னு, காதுல மாட்டிக்கிட்டிருந்த பாட்டு கேக்குற மெஷின் எல்லாம் கழட்டி, மேல இருந்த ஸ்பீக்கரையே வச்ச கண்ணு வாங்கமா பார்த்த, கடைசில உன் பருப்பு அவ்வளவுதானான்னு மனசுல நினைச்சுக்கிட்டேன். சரி அடுத்த அறிவிப்பு வரும்போது, நம்மோட காதை நல்லா தீட்டி, உன்னிப்பா கவனிக்கணும்னு இருந்தேன். மணியோ பத்தே கால் ஆயிடுச்சு. இன்னும் வண்டியை எடுக்கலை. அப்புறம் திருப்பியும் அறிவிப்பு செஞ்சாங்க. இந்த தடவை காதை நல்லா தீட்டி வச்சு, ஆடாம அசையாம ஒழுங்கா கேக்கணும்னு பார்த்தா, இந்த ஸ்கூல் போற பசங்கள்ள ஒருத்தன், அப்பத்தான் சாமி வந்து கத்துறவன் மாதிரி பயங்கரமா கத்த ஆரம்பிச்சிட்டான். சுத்தம், நமக்கு அமைதியான இடத்துலேயே, இந்த மாதிரி அறிவிப்பெல்லாம் ஒழுங்கா புரியாது, இதுல இவனுங்க இப்படி கத்துனா, ஒண்ணும் விளங்காதுன்னு இந்த அறிவிப்பு கேக்குறதை  விட்டுட்டேன். அந்த அறிவிப்பு முடிஞ்சவுடனே, வண்டி கொஞ்சம் நகர்ந்துச்சு. அப்பாடா, வண்டி போக ஆரம்பிச்சிடுச்சு, இனி ஆபீசுக்கு 11 மணிக்கெல்லாம் போயிடலாம்னு தான் நினைச்சேன். அதுக்குள்ள வண்டி வேற ஒரு ஸ்டேஷன்ல நின்னுடுச்சு. சரி, ஆளுங்க எல்லாம் ஏறுவாங்கன்னு பார்த்தா, எல்லா ஆளுங்களும் இறங்க ஆரம்பிச்சிட்டாங்க. எனக்கு ஒண்ணுமே புரியலை. சரி நம்மளும் இறங்குவோம்னு, முன்னாடி நின்னுக்கிட்டிருந்த ஒரு தாய்குலத்துக் கிட்ட , ஏங்க எல்லாரும் இறங்குறாங்கன்னு? கேட்டேன். அந்த தாய்குலமோ, அலட்டிக்காம, எனக்கு தெரியலைங்க, எல்லோரும் இறங்குறாங்க, நூனும் இறங்குறேன்னு சொன்னாங்க. சரி தான், எல்லாரும் நம்மளை மாதிரி தான்னு நினைச்சுக்கிட்டு இறங்குனேன். அப்பத்தான் தெரிஞ்சுது, இந்த மழைல, சிக்னல் சிஸ்டம் வேலை செய்யலைன்னு. எப்படி வேலைக்கு போறதுன்னு கேட்டா, எதிர்ல நிக்கிற வண்டில வந்த வழியயே திரும்பி போயி glenfield ஸ்டேஷன்ல இறங்கி, வேற வழியா வேலைக்கு போங்கன்னு சொன்னாங்க. இதுல கொடுமை என்னன்னா, அந்த glenfield ஸ்டேஷன் வந்து, நாங்க இருக்கிற Ingleburn ஸ்டேஷனுக்கு 2 ஸ்டேஷன் முன்னாடி இருக்கு. அப்புறம் அந்த வண்டில ஏறி, என்னடா பண்றதுன்னு யோசிச்சுக்கிட்டே திரும்பி போனேன். இவுங்க சொல்றபடி ஆபீசுக்கு போனா, 1.30 மணிக்கு தான் போயி சேர முடியும். அப்புறம் நம்ம சீட்ல போயி உக்கார்ந்த உடனே, சாப்பாடு பொட்டலத்தை பிரிக்கனும். அவ்வளவுதான், ஆபீசுல இருக்கிறவன் எல்லாம், என்னடா, இவன் பாட்டுக்கு வரான், வந்த உடனே ஒரு வேலையும் செய்யாம சாப்பாட்டு மூட்டையை பிரிச்சுட்டானேன்னு கடுப்பாயிடுவானுங்க. சரி, என்ன பண்றதுன்னு ரொம்ப மண்டையை போட்டு குடைஞ்சு, கடைசில, என்னோட மேனேஜருக்கு போன் போட்டு, ஐயா, இப்படி, இப்படி ஆச்சு, திரும்பி ஆபீசுக்கு வந்தா பாதி நாள் வேஸ்ட் ஆயிடும்(பெருசா 8 மணி நேரமும் ஒழுங்கா வேலை பாக்குறதா மனசுல ஒரு நினைப்பு) அதனால, நான் வீட்டிலிருந்து வேலை பார்க்குறேன்னு ஒரு பிட்டைப் போட்டு, கடைசில அன்னைக்கு வேலைக்கே போகாம, கிட்டதட்ட மூன்றரை மணி நேராம trainலேயே சுத்திட்டு வீடு வந்து சேர்ந்தேன். என்னடா, இந்த நாள் இப்படி ஆயிடுச்சு, நாம யார் மூஞ்சில முழிச்சோம்னு யோசிச்சுப் பார்த்தேன். எப்பவுமே படுக்கைக்கு பக்கத்து டேபிள்ல இருக்கிற ஒரு குட்டி பிள்ளையாரை தான் முழிச்சவுடனே பார்ப்பேன். ஆனா அன்னைக்கு லேட்டா எந்திரிச்சதுனால, பிள்ளையாரை பார்க்காம நேரா பாத்ரூம்குள்ள போயி அங்க இருக்கிற கண்ணாடிய பார்த்தேன்னு நியாபகத்துக்கு வந்துச்சு. ஆனா பாருங்க, இந்த பிள்ளையாருக்கு தான்  எவ்வளவு கோபம் எம் மேல, எந்திரிச்சவுடனே அவரை பார்க்கலைகிறதுக்காக, என்னைய எப்படி அலைய விட்டிருக்காரு.  

Friday, March 2, 2012

நான் லைசென்ஸ் எடுத்த கதை

சிட்னி வந்து தான் நான் கார் ஓட்டவே கத்துக்கிட்டேன். 13 வருஷத்திற்கு முன்னாடி மஸ்கட்ல இருக்கும் போது, கார் ஒட்டக் கத்துக்க ஒரு அருமையான சந்தர்ப்பம் கிடைச்சுது. நான் அங்க வேலை பார்த்த எடத்துல, எல்லோருக்கும் கார் ஒட்டக் கத்துக்க 15 வகுப்புகளுக்கு கம்பெனியே பணம் கொடுத்துடும். அப்புறம் லைசென்ஸ் எடுக்குற டெஸ்டுக்கு அதிகப் பட்சமாக 3 டெஸ்ட் வரைக்கும் டெஸ்ட் பீஸும்   கொடுத்துடுவாங்க. இதனால நிறைய பேர் அவுங்க பாக்கெட்லேருந்து செலவு செய்யாமல் லைசென்ஸ் எடுத்தாங்க. ஆனா எனக்கு தான் இந்த டெஸ்ட்ன்னு சொன்னாலே அலெர்ஜி ஆச்சே, அதனால எப்படியோ லைசென்ஸ் எடுக்காம, வண்டியும் ஓட்டக் கத்துக்காம ஒப்பேத்துனேன். அதுக்கப்புறம் ஜப்பான்ல இருந்த 5 வருஷமும் கார் ஓட்டுறதுக்கு வேலையே இல்லாம போச்சு. அங்க எங்க வேனாலும் போறதுக்கு train வசதி ரொம்ப நல்லா இருக்கும் (நான் பார்த்த 6 / 7 நாடுகளில், இந்த அளவுக்கு train வசதி வேறு எங்கேயும் இல்லை). அப்படியும் நண்பர்களோட சுற்றுலா இடங்களுக்கு போகும்போது அவுங்களோட கார்லேயே போய்விடுவோம். அதனால அங்கேயும் கார் ஓட்ட லைசென்ஸ் எடுக்கலை. 5 வருடங்களுக்கு முன்னாடி சிட்னி வந்தபோது, சரி இங்கேயும் கார் இல்லாம ஒப்பேத்திடலாம்னு நினைச்சேன். ஆனா நண்பர்கள் வீட்டுக்கு போறதுக்கு கார் இல்லாம ரொம்ப கஷ்டமா இருந்துச்சு. அப்பவெல்லாம் நண்பர்கள் அவுங்க கார்ல எங்களை கூட்டிக்கிட்டு போனாங்க. இது சரி வராது, நாம லைசென்ஸ் எடுத்தே ஆகனும்னு முடிவு பண்னினேன். சிட்னில முதல்ல கார் “ஒட்டக் கத்துக்குற” லைசென்ஸ்(Learner’s license) எடுக்கனும். அத எடுக்கிறதுக்கு, கம்ப்யூட்டர் முன்னாடி ஒரு டெஸ்ட்(Driver Knowledge Test) எழுதனும். அது ஒரு multiple choice test. 600 கேள்விகள்ள இருந்து அந்த பாழாப் போன கம்ப்யூட்டர் 45 கேள்விகளை கேக்கும். 4 பதிலுக்கு மேல தப்பா சொன்னா நாம அந்த டெஸ்ட்ல ஃபெயில். திருப்பியும் பணம் கட்டி அந்த டெஸ்ட் எழுதனும். அதனால முத தடவையே பாஸ் பண்ணணும்னு முடிவு பண்னி, அந்த டெஸ்ட் எழுதுற அன்னைக்கு சாமிய நல்லா கும்பிட்டு போயி டெஸ்ட் எழுதி எப்படியோ  பாஸ் பண்ணி, learner license வாங்கிட்டேன். அதுக்கப்புறம் தான் பிரச்சனையே, 50 மணி நேரம் நாம கார் ஓட்ட கத்துக்கிட்டு இருந்தா தான் ரோட்ல ஓட்டிக் காமிச்சு, டிரைவிங் லைசென்ஸ்  வாங்க முடியும் (நான் லைசென்ஸ் எடுத்த கொஞ்ச நாள்ளயே 50 மணி நேரத்தை 120 மணி நேராம மாத்திட்டாங்க. அப்புறம் தான் தெரிஞ்சுது, என்னைய மாதிரி நிறைய அறிவு ஜீவிங்க 50 மணி நேரம் ஓட்டிக் கத்துக்கிட்டு லைசென்ஸ் எடுத்ததுனால தான் 120 மணி நேராம மாத்திட்டாங்கன்னு!!) கார் ஓட்டக் கத்துக்கிறதுக்கு,ஒரு மணி நேரத்துக்கு $40, அப்படின்னா 50 மணி நேரத்துக்கு $2000. அதுக்கப்புறம் டெஸ்ட்க்கு பணம், அப்படி இப்படின்னு ஒரு $2500 வந்துடும் போல இருக்கேன்னு நினைச்சேன். உடனேயே, எனக்கு தலையை சுத்திடிச்சு. அடியாத்தி, கார் ஓட்டக்கத்துக்க இவ்வளவு பணம் செலவாகுமான்னு ரொம்பவே பயந்துட்டேன். சரி, என்ன பண்றது, நாய்க்கு வாழ்க்கைப்பட்டா , குரைச்சு தானே ஆகனும், கார் ஓட்டக் கத்துக்க முடிவு பண்ணியாச்சு, செலவுக்கு பார்த்தா என்ன பண்றதுன்னு மனசை தேத்திக்கிட்டு, கார் ஓட்டக் கத்துக்க ஆரம்பிச்சேன். விடியற்காலை 6 மணியிலிருந்து 7 மணி வரை கார் ஓட்டக் கத்துக்குற நேரமா அமைஞ்சுது. இதுல என்ன கூத்துன்னா, 8 மணிக்கு ஆபீசுக்கு கிளம்புறதுக்கு, 7.30 மணிக்கு எந்திரிச்சு, அடிச்சுப் புடிச்சு வேகவேகமா கிளம்புவேன். இதுல 6 மணிக்கு டிரைவிங் கிளாஸ், என்ன பண்றது. அதனால ரொம்ப கஷ்டப்பட்டு 5.50க்கு எந்திரிச்சு,வெறும் பல்லை மட்டும் விளக்கிட்டு டிரைவிங் கத்துக்க போவேன். கடைசில எப்படியோ டிரைவிங் டெஸ்ட் போற நாளும் வந்துச்சு. இந்த ஊர்ல தான் யாரும் லஞ்சம் வாங்க மாட்டாங்கன்னு, சாமிக்கு லஞ்சம் கொடுத்துட்டு, டெஸ்டுக்கு போனேன். எனக்கு டிரைவிங் சொல்லிக் கொடுத்தவரோ, நல்லா பண்ணுங்க, முத தடவையே லைசென்ஸ் வாங்கிடணும்னு ஒரு பிட்டப் போட்டாரு. நானும் நம்பிக்கையா இருந்தேன். எனக்கு வந்த கண்காணிப்பாளரை பார்க்க சாதுவா இருந்தாரு. சரி, நம்ம காட்டுல இன்னைக்கு மழைதான்னு நினைச்சுக்கிட்டு அவர் சொல்ற எடத்துக்கு எல்லாம் ஒழுங்கா போனேன். “reverse parking”, “angle parking” எல்லாம் சரியா பண்ணுனேன். ஆனா பாருங்க கஷ்டமான parking எல்லாம் ஒழுங்கா பண்ணிட்டு, ரொம்ப ஈசியான பார்கிங்கான “kerbside parking” தான் கொஞ்சம் சொதப்புனேன். அதாவது கண்காணிப்பாளர்,  மின் கம்பத்துக்கு கிட்ட வண்டிய ஓரங்கட்ட சொன்னாரு. நான் சரியா மின் கம்பத்துக்கிட்ட தான் ஓரம் கட்டனும்னு, ரிவர்ஸ் கியர போட்டு போட்டு எப்படியோ ஓரங்கட்டிட்டேன். கடைசில, எனக்கு சொல்லிக் கொடுக்கிறவரை கூப்பிட்ட அந்த கண்காணிப்பாளர், என்னோட சர்விஸ்லேயே, வண்டிய ஓரம் கட்டுறதுக்கு ரிவர்ஸ் கியர போட்ட முத ஆள இப்பத்தான் பார்க்கிறேன். அதுவும் 6 தடவை ரிவர்ஸ் கியர போட்டு போட்டு, வண்டிய ஓரம் கட்டுனாருன்னு சொல்லி எனக்கு லைசென்ஸ் கொடுக்க மாட்டேன்னுட்டாரு. அப்புறம் திருப்பியும் கொஞ்ச நாள் போயி, 2வது தடவையா டெஸ்டுக்கு போனேன். இந்த தடவை சாமியையே கும்பிடலை (போன தடவை சாமி லஞ்சம் வாங்கிட்டு ஏமாத்திட்டாருன்னு கோபம்). இந்த தடவை என்னாச்சுன்னா, ஒரு அம்மா கண்காணிப்பாளரா வந்தாங்க. ஏற்கனவே ரொம்ப டென்ஷன்ல இருந்த எனக்கு, இந்த அம்மா கொஞ்சம் கூட சிரிக்காம, மூஞ்சியை தூக்கி வச்சுக்கிட்டு(காலைல வீட்டுல புருஷன் கூட சண்டை போல) வந்தாங்களா, நான் ஏகப்பட்ட தப்பு பண்ணி, அந்த அம்மா, ஒரு எடத்துல,ஆவுங்க சைட்ல இருக்கிற பிரேக்ல காலை வச்சு வண்டிய நிறுத்தி, போதாக்குறைக்கு இன்னொரு எடத்துல, ஸ்டீயரிங்ல புடிச்சு வண்டிய திருப்பி, கடைசில அவுங்க என்னைய விட டென்ஷன் ஆயிட்டாங்க. அதனால அப்பவும் எனக்கு லைசென்ஸ் கிடைக்கலை. எனக்கு டிரைவிங் சொல்லிக் கொடுக்கிறவருக்கு எம் மேல இருந்த நம்பிக்கை போயிடுச்சு. சரி இவன் கஜினி முஹம்மது பரம்பரைல வந்தவன் போலன்னு முடிவு பண்ணிட்டாரு. அப்புறம் திருப்பியும் கொஞ்ச நாள் கழிச்சு, டெஸ்டுக்கு போனேன். இந்த தடவை மறுபடியும் சாமிக்கு லஞ்சம் கொடுத்து, இந்தியாவுக்கு போனவுடனே ஒரு கோவிலுக்கு போயி தேங்காய உடைக்கிறேன்னு வேண்டிக்கிட்டு போனேன். இந்த தடவை கண்காணிப்பாளரா வந்தவரு, நல்லா சிரிச்சு பேசிக்கிட்டு வந்தாரு. அவர் சொன்னதை எல்லாம் ஒழுங்கா செஞ்சுட்டு, திரும்பி RTA ஆபிசுக்கு போகும்போது, ஒரு roundaboutல வந்து மாட்டினேன். இந்த ஊர் roundabout, நமக்கு வலது பக்கத்துல வர்ற வண்டிக்கும்,எதிர்ல வர்ற வண்டிக்கும் வழிவிட்டுட்டு தான் நாம போகணும். அன்னைக்குன்னு பார்த்து, என்னோட 3 சைடுலேயும் வண்டி வந்து நின்னுச்சு. வலதுப் பக்கத்துல இருக்கவனும் வண்டியை எடுக்கலை, எதிர்ல இருக்கவனும் வண்டிய எடுக்கலை. கிரகம் புடிச்சவனுங்க, என்னமோ சிக்னல்ல நிக்கிற மாதிரி நின்னுட்டானுங்க. எனக்கோ, என்ன பண்றதுன்னு தெரியலை. சரி, துனிஞ்சு வண்டியை எடுப்போம்னு நான் பிரேக்லேருந்து கால எடுத்தேன், வண்டி ஒரு இன்ச் முன்னாடி நகர்ந்துச்சு. அவ்வளவுதான், உடனே திருடன புடிக்கப் போற மாதிரி வேகமா எனக்கு வலது பக்கத்துல இருக்கிறவன் வண்டிய எடுக்க ஆரம்பிச்சுட்டான். எனக்கு கையும் ஓடலை, காலும் ஓடலை, உடனே சடால்னு பிரேக்ல காலை வச்சு ஒரே அமுக்கு, வண்டி ஒரு குலுங்கு குலுங்கி நின்னுச்சு. எனக்கு பக்கத்துல இருந்த கண்காணிப்பாளரோ, தம்பி, நீ இன்னும் இந்த ஆட்டத்துல இருக்கன்னு சொன்னவுடன் தான் எனக்கு மூச்சே வந்துச்சு. கடைசில அந்த மகராசன் தன்னோட பொன்னான கைகளால எனக்கு லைசென்சை கொடுதாரு. அண்ணே!, நீங்க மகராசனா ரொம்ப நாள் வாழனும் (அப்பத்தானே என்னை மாதிரி ஆளுங்களுக்கு லைசென்ஸ் கொடுக்கலாம்), இந்தியாவா இருந்தா உங்களுக்கு கோவில் கட்டி, “லைசென்ஸ் கொடுத்த தானைத் தலைவர்னு” ஒரு பட்டத்தையும் கொடுத்திருப்பேனேன்னு மனசுல நினைச்சுக்கிட்டு(அவருக்கு கொடுப்பினை அவ்வளவுத்தான்), ரொம்ப நன்றின்னு ஒரு ரெண்டு, மூணு தடவை அவருக்கு சொல்லிட்டு லைசென்ஸோடு வீடு வந்து சேர்ந்தேன்.